Published : 04 Jun 2024 11:02 AM
Last Updated : 04 Jun 2024 11:02 AM
சென்னை: காங்கிரஸ் தலைமையகத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, தாங்கள் வெற்றிபெறப் போவதாக ஒரு பொய்யான தோற்றத்தை உருவாக்கி அதன் மூலம் பாஜகவினர் பங்குச் சந்தையில் பல ஆயிரம் கோடிகளை மோசடியாக சம்பாதித்திருக்கிறார்கள் என்று குற்றம்சாட்டினார்.
தொடர்ந்து பேசிய அவர், “தாங்கள் வெற்றி பெறப் போகிறோம் என எப்படி எல்லாம் பாஜக தில்லு முல்லு செய்தது என்று நாங்கள் கடந்த இரண்டு நாட்களாக கூறி வந்தோம். இப்போது அது நிரூபணம் ஆகி வருகிறது.
பத்து ஆண்டுகளில் இந்தியா எங்கே சிக்கி இருந்தது என்று அனைவரும் அறிவர். கடந்த 10 ஆண்டுகளாக பிரதமராக இருந்தவர் காங்கிரஸ் கட்சியின் சாதாரண தொண்டரிடம் தோற்று வருகிறார். பாஜக வேட்பாளர்கள் அனைவரும் தோல்வியை சந்திப்பார்கள். இது அடுத்த ஒரு சில மணி நேரங்களில் உறுதியாகும். எங்கள் கட்சித் தலைவர் ராகுல் காந்தியிடம் சவால் விட்ட ஸ்மிருதி ராணி தோல்வியை சந்தித்து வருகிறார்.
காங்கிரஸை பொறுத்தவரை வெற்றி பெற்றாலும் துள்ளி குதிக்கப் போவதில்லை. தோல்வியுற்றாலும் துவண்டு போக மாட்டோம். என்றுமே தேசத்துக்கான கட்சி காங்கிரஸ்தான்.
பங்குச் சந்தையில் இவ்வளவு பெரிய மாற்றம் நேற்றும், இன்றும் நிகழ்ந்திருப்பது பாஜக பங்குச்சந்தையில் மிகப்பெரிய ஊழலை செய்திருப்பது தெரிய வருகிறது. இண்டியா கூட்டணி ஆட்சி அமைந்ததும் இது பற்றி விசாரிக்கப்படும்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT