Published : 04 Jun 2024 04:35 AM
Last Updated : 04 Jun 2024 04:35 AM
சென்னை: இந்தியாவின் முன்னணி ட்ரோன் தயாரிப்பு நிறுவனமான கருடா ஏரோஸ்பேஸ் விவசாயத்துக்கு பயன்படும் கிசான் ட்ரோன்கள், வீடியோ பதிவு செய்யும் ‘ட்ரோனி’ ட்ரோன்களை விற்கிறது. இதன் புதிய ஷோரூம் சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் நேற்று தொடங்கப்பட்டது.
சென்னை அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர்ஆர்.வேல்ராஜ் ஷோரூமை திறந்து வைத்தார். மேலும், புதிதாக தயாரிக்கப்பட்ட ‘ட்ரோனி’ ட்ரோன் விற்பனையையும் தொடங்கி வைத்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
ட்ரோன்களை சுலபமாக நுகர்வோர் வாங்குவதற்காக, இந்தியாவிலேயே முதல் முறையாக பிரத்யேக ஷோரூமை கருடா ஏரோஸ்பேஸ் நிறுவனம்தொடங்கி உள்ளது. தொழில்துறை உற்பத்தி பொருட்களை ஷோரூமில் விற்பனை செய்தால், நிச்சயம் தொழில் துறைவளர்ச்சி பெருகும். விவசாயிகள் மத்தியில் இதுபோன்ற ட்ரோன்களை எடுத்து சென்றால்தான், விவசாயமும் வளர்ச்சி அடையும்.
அண்ணா பல்கலைக்கழகத்தில் முதுநிலை பொறியியல் படிப்பில் ட்ரோன் டெக்னாலஜி என்ற படிப்பை கொண்டு வருவதற்கு முயற்சி செய்து வருகிறோம். நிச்சயம் அடுத்த ஆண்டு பொறியியல் படிப்பில் ட்ரோன் டெக்னாலஜி இடம் பெறும். இவ்வாறு அவர் கூறினார்.
கருடா ஏரோஸ்பேஸ் தலைவர் அக்னிஷ்வர் ஜெயபிரகாஷ் கூறும்போது, ‘கருடா ஏரோஸ்பேஸ் நிறுவனம் குஜராத் ஃபெர்டிலைசர் பல்கலைக்கழகத்துடன் இணைந்து முதுநிலை படிப்பில் ட்ரோன் தொழில்நுட்பத்தை செயல்படுத்தி வருகிறது. தற்போது அண்ணா பல்கலைக்கழகத்துடனும் பேசி வருகிறோம்.
அதேபோல், சென்னை - பெங்களூரு நெடுஞ்சாலையில் ட்ரோன் பாதை அமைக்க தேசிய நெடுஞ்சாலைத் துறையிடம் அனுமதி கேட்டிருக்கிறோம். இருபக்க சாலையின் நடுவில் ட்ரோன் பாதை வழங்கினால், 20 கிலோ எடையுள்ள பொருட்களை ட்ரோன் மூலம்,சென்னையில் இருந்து பெங்களூரு எடுத்து செல்லலாம்.
இந்த தொலைவை 45 நிமிடங்களில் ட்ரோன் கடந்து விடும். இதை சென்னையில் இருந்தே இயக்கலாம். இதற்காக நெடுஞ்சாலை துறையிடம் அனுமதி கேட்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT