Published : 25 Apr 2018 01:32 PM
Last Updated : 25 Apr 2018 01:32 PM
மாணவிகளுக்கு பாலியல் வற்புறுத்தல் அளிக்கப்பட்ட விவகாரத்தில் கைதான உதவி பேராசிரியர் முருகனை 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி போலீஸாருக்கு சாத்தூர் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் உள்ள தனியார் கல்லூரி மாணவிகளிடம் பாலியல் ரீதியாக வற்புறுத்தியதாக அதே கல்லூரியின் உதவிப் பேராசிரியை நிர்மலா தேவி கைது செய்யப்பட்டார். இவரை சிபிசிஐடி போலீஸார் 5 நாள் காவலில் எடுத்து விசாரித்தனர்.
அவர் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் மதுரை காமராஜர் பல்கலைக்கழக மேலாண்மைத் துறை உதவிப் பேராசிரியர் முருகனுக்கும் முனைவர் பட்ட ஆய்வு மாணவர் கருப்பசாமிக்கும் தொடர்பு இருப்பதாக தகவல் வெளியானது.
இதையடுத்து முருகன் மற்றும் கருப்பசாமியை சிபிசிஐடி போலீஸார் தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில், கடந்த 23-ம் தேதி மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்திற்கு முருகன் வருவதாக சிபிசிஐடி போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதனடிப்படையில், முன்னதாகவே பல்கலைக்கழகத்திற்கு வந்த சிபிசிஐடி போலீஸார், அங்கு வந்த முருகனை மடக்கிப் பிடித்தனர்.
இதையடுத்து, செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்ட பேராசிரியர் முருகனை சிபிசிஐடி போலீஸார் அன்றைய தினமே, சாத்தூர் இரண்டாவது நீதித்துறை நடுவர் மன்ற நீதிபதி கீதா முன்பு ஆஜர்படுத்தினர். அப்போது, முருகனை ஒருநாள் சிறை காவலில் வைக்க நீதிபதி கீதா உத்தரவிட்டார். இதையடுத்து, முருகன் விருதுநகரில் உள்ள கிளை சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்நிலையில், பேராசிரியர் முருகன் இன்று (புதன்கிழமை) மீண்டும் சத்தூர் இரண்டாவது நீதித்துறை நடுவர் மன்ற நீதிபதி கீதா முன்பு ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது, முருகனை 10 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி போலீஸார் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
ஆனால், 5 நாட்கள் மட்டும் காவலில் வைத்து விசாரிக்க நீதித்துறை நடுவர் கீதா உத்தரவிட்டார். இதையடுத்து, முருகன் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் விருதுநகரில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார். இதற்கிடையே முருகனுக்கு ஜாமீன் வழங்கக்கோரி விருதுநகரில் உள்ள இரண்டாவதி நீதித்துறை நடுவர் மன்றத்தில் இன்று மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், 5 நாள் விசாரணை முடிந்து சாத்தூர் 2-வது நீதிமன்றத்தில் பேராசிரியை நிர்மலாதேவியை சிபிசிஐடி போலீசார் ஆஜர்படுத்தினர். அவரை மே 9-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி கீதா உத்தரவிட்டார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT