Published : 12 Apr 2018 09:28 AM
Last Updated : 12 Apr 2018 09:28 AM
தமிழகத்தின் தண்ணீர் தட்டுப்பாட்டைப் போக்குவதற்காக நிபுணர்கள் அளித்த வழிகாட்டி அறிக்கை 30 ஆண்டுகளாக கிடப்பில் உள்ளது.
தமிழகம் தண்ணீருக்காக அண்டை மாநிலங்களுடன் போராடி வருகிறது. தங்கள் பகுதியில் அணை மற்றும் தடுப் பணைகள் கட்ட அண்டை மாநிலங்கள் முயற்சி செய்வதால் எதிர்காலத்தில் தமிழ்நாடு பாலைவனமாகும் அபாயம் உள்ளது. தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை மற்றும் வடகிழக்கு பருவமழைக் காலத்தில் பெய்யும் மழைநீரை அனைத்து வகையான நீர்நிலைகளிலும் முழுமையாக சேமித்தால் மட்டுமே விவசாயம் மற்றும் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய முடியும் என்று தண்ணீர் மேலாண்மையில் நிபுணத்துவம் பெற்றவர்கள் கூறுகின்றனர்.
இதுதொடர்பாக சென்னைக் குடிநீர் வாரிய முன்னாள் பொறியியல் இயக்குநர் எஸ்.சுந்தரமூர்த்தி, ‘தி இந்து’விடம் கூறிய தாவது:
``அணைகள் மற்றும் பாசன ஏரிகளைத் தூர்வாரினால் மட்டும் போதாது. ஒவ்வொரு கிராமத்திலும் உள்ள ஊரணி, சிறிய குளம் போன்ற நீர்நிலைகளை ஒன்றுவிடாமல் தூர்வாரி, கரைகளைப் பலப்படுத்த வேண்டும். இதுதவிர, சென்னை போன்ற நகரங்களிலும், காவிரி, கொள்ளிடம், பாலாறு, வைகை, தாமிரபரணி போன்ற நதிகளின் முகத்துவாரப் பகுதிகளிலும் பூமிக்கு அடியில் சுமார் 60 அடி ஆழத்தில் தடுப் பணைகளைக் கட்டி நிலத்தடி நீரைச் சேமிக்க வேண்டியது அவசர அவசியம்.
1985-ம் ஆண்டில் மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் குளத்தைத் தூர் வாரி, கரைகளைப் பலப் படுத்தி, அதைச் சுற்றி ஒன்றரை கிலோ மீட்டர் பரப்பளவில் உள்ள குடியிருப்புப் பகுதிகளில் பெய் யும் மழைநீரை, மழைநீர் வடிகால் கால்வாய் மூலம் கபாலீஸ்வரர் கோயில் தெப்பக்குளத்துக்கு கொண்டு வர திட்டமிட்டோம். அதன்படி, கோயிலைச் சுற்றியுள்ள தெருக்களில் வசிக்கும் மக்களிடம் கழிவுநீரை மழைநீர் வடிகால் கால்வாயில் திறந்துவிட்டால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து எடுத்துக் கூறினோம். அதற்கு நல்ல பலன் கிடைத்தது. சிலர் அங்குள்ள தெருக்களைப் பொறுப்பில் எடுத்துக்கொண்டு அங்கிருப்பவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
இதையடுத்து, கோயில் தெப்பக்குளத்தின் பள்ளமான தெற்குப் பகுதியைத் தவிர, கிழக்கு, மேற்கு மற்றும் வடக்குப் பகுதிகளில் தேவையான கட்டமைப்புகளை உருவாக்கி குளத் தில் மழைநீரைக் கொண்டு போய் சேர்க்க ஏற்பாடு செய்தோம். அந்தாண்டு பருவமழை பெய்யத் தொடங்கியதும் இரண்டு நாட்களுக்கு மழைநீரை, மழைநீர் வடிகால் கால்வாயில் இருந்து பக்கிங்காம் கால்வாய்க்கு திருப்பிவிட்டோம். மழைநீர் வடிகால் கால்வாயில் குவிந்திருந்த குப்பைகளும், கழிவுநீரும் கோயில் குளத்துக்கு வரக்கூடாது என்ப தால் அவ்வாறு செய்தோம்.
மூன்றாவது நாளில் இருந்து குளத்துக்கு தண்ணீர் திருப்பி விடப்பட்டது. கோவில் குளத்துக்குள் தண்ணீர் செல்லும் பாதையில் சுமார் 10 அடி தூரத்தில் வைக்கோல் பிரியை லூசாக போட்டு வைத்து, தெளிந்த மழைநீர் குளத்துக்குள் செல்ல ஏற்பாடு செய்தோம். மயிலாப்பூர் மக்களின் ஒத்துழைப்பால் மழைநீரை கபாலீஸ்வரர் கோயில் தெப்பக்குளத்தில் சேமிக்கும் திட்டம் சாத்திய மானது.
இவ்வாறு சுந்தரமூர்த்தி கூறினார்.
இதுபோல வில்லிவாக்கம் ஈஸ்வரன் கோயில், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில், பெருமாள் கோயில், பாரிமுனை கன்னிகா பரமேஸ்வரி கோயில் போன்ற கோயில்களின் குளம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் கட்டமைப்புகளை உருவாக்க ரூ.25 லட்சம் செலவாகும் என்று பொதுப்பணித் துறை அதிகாரி ஒருவர் கூறினார்.
1983-ம் ஆண்டு முதல் நான்கு ஆண்டுகள் இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த நீரியல் வல்லுநர்கள் குழு தமிழகம் முழுவதும் உள்ள ஆறுகள், குளங்கள், ஏரிகள், இதர நீர் நிலைகள், நிலத்தடி நீர், நீரின் தன்மை உள்ளிட்ட தகவல்களைச் சேகரித்து ஆய்வு செய்து அரசுக்கு 1987-ம் ஆண்டு செயல்திட்ட அறிக்கைகளை கொடுத்துவிட்டுச் சென்றனர்” என்றார். தண்ணீர் தட்டுப்பாட்டைப் போக்குவதற்காக நிபுணர்கள் அளித்துள்ள வழிகாட்டி அறிக்கை கடந்த 30 ஆண்டுக ளாக கிடப்பில் போடப்பட்டுள் ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT