Published : 03 Jun 2024 08:23 PM
Last Updated : 03 Jun 2024 08:23 PM
சென்னை: செல்லப் பிராணிகள் பராமரிப்பு மையங்களுக்கென தனி விதிமுறைகளை வகுக்கக்கோரிய விண்ணப்பத்தை 8 வாரங்களில் பரிசீலித்து தகுந்த உத்தரவு பிறப்பிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை உயர் நீதிமன்றத்தில், திருவேற்காடு பகுதியைச் சேர்ந்த விலங்குகள் நல ஆர்வலரான ஆன்டனி கிளமென்ட் ரூபன் என்பவர் தாக்கல் செய்திருந்த மனுவில், ‘வீடுகளில் செல்லப் பிராணிகளை வளர்ப்போர் விடுமுறை அல்லது தொழில் காரணமாக வெளியூர்களுக்கு செல்லும்போது, வளர்ப்பு பிராணிகளை பராமரிப்பு மையங்களில் குறிப்பிட்ட கட்டணம் செலுத்தி அங்கு சேர்த்துவிட்டு செல்கின்றனர்.
தமிழகம் உள்பட நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் முறைப்படுத்தப்படாத செல்லப் பிராணிகள் பராமரிப்பு மையங்கள் செயல்பட்டு வருகின்றன. முறையான தகுதியில்லாத நபர்களை பராமரிப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ள இந்த மையங்களில், பிராணிகள் உரிய முறையில் பராமரிக்கப்படாமல் சில நேரங்களில் அவை இறந்து விடுகின்றன.
வர்த்தக நோக்கில் செயல்படும் இதுபோன்ற மையங்களை ஆய்வு செய்த பிறகே அவற்றுக்கு ஒப்புதல் வழங்கவேண்டும். இதுபோன்ற மையங்களை முறைப்படுத்துவதற்காக, பிரிட்டனில் கடந்த 2018-ம் ஆண்டு விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளது. பிரிட்டனைப் போல இந்தியாவிலும் செல்லப் பிராணிகள் பராமரிப்பு மையங்களை முறைப்படுத்த தனி விதிமுறைகளை வகுக்கக் கோரி மத்திய, மாநில அரசுகளுக்கு மனு அனுப்பினேன்.
அந்த மனுவின் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே மிருக வதை தடைச்சட்டப் பிரிவுகளின் கீழ் செல்லப் பிராணிகள் பராமரிபபு மையங்களுக்கென தனி விதிமுறைகளை வகுக்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும்’, என மனுவில் கோரியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த பொறுப்பு தலைமை நீதிபதி ஆர். மகாதேவன், நீதிபதி முகமது ஷபீக் ஆகியோர் அடங்கிய அமர்வு, மனுதாரரின் கோரிக்கை மனுவை பரிசீலித்து எட்டு வாரங்களில் தகுந்த உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT