Published : 03 Jun 2024 03:05 PM
Last Updated : 03 Jun 2024 03:05 PM
சேலம்: சேலம் மாவட்டம் புத்திர கவுண்டம் பாளையத்தில் உள்ள உலகிலேயே மிக உயரமான 146 அடி உயர முருகன் சிலையின் உச்சிக்கு சென்று, சங்கல்ப பூஜை செய்தார் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி.
பின்னர் சிலையின் வயிற்றுப் பகுதியில் உள்ள தியான மண்டபத்தில் அமர்ந்து சிறிது நேரம் தியானம் செய்து வழிபட்டார். மக்களவைத் தேர்தல் முடிவுகள் வெளியாக உள்ள நிலையில் அவர் வழிபாடு நிகழ்த்தியுள்ளார்.
சேலம் மாவட்டம் புத்திர கவுண்டம் பாளையத்தில் உலகிலேயே மிக உயரமான 146 அடி உயரம் கொண்ட சுவாமி முருகன் சிலை கொண்ட, முத்து மலை முருகன் கோயில் உள்ளது. இக்கோயிலுக்கு இன்று (ஜூன் 3) காலையில் அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி வந்தார். 146 அடி உயரம் கொண்ட முருகன் சிலையின் திருவடியில் மலர் தூவி வணங்கினார். பின்னர், அவர் முருகன் வேலை தாங்கி, மூலவரை சுற்றி வந்து சிறப்பு வழிபாடு நடத்தினார்.
தொடர்ந்து, 146 அடி உயர முருகன் சிலையின் உச்சிக்குச் சென்று சங்கல்ப பூஜை செய்து, பன்னீர் கலசத்தை கொண்டு வேலுக்கு அபிஷேகம் செய்தும், மலர் தூவியும் வழிபட்டார். இதனைத் தொடர்ந்து, அடுத்து சிலையின் வயிற்றுப் பகுதியில் உள்ள தியான மண்டபத்துக்கு சென்று, அங்கு சிறிது நேரம் தியானம் செய்தார்.
பின்னர், பக்தர்களுக்கு சுவாமி பிரசாதத்தை வழங்கியதுடன், கோயிலுக்கு வந்த பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியின்போது, அதிமுக சேலம் புறநகர் மாவட்டச் செயலாளர் இளங்கோவன், எம்எல்ஏக்கள் உள்ளிட்ட அதிமுகவினர் பலர் இருந்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT