Published : 03 Jun 2024 12:51 PM
Last Updated : 03 Jun 2024 12:51 PM
சென்னை: சென்னையில் இருந்து கொல்கத்தா செல்லும் விமானத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக வந்த மிரட்டலை தொடர்ந்து, விமானத்தில் இருந்த 168 பயணிகளை கீழே இறக்கிவிட்டு வெடிகுண்டு நிபுணர்கள், பாதுகாப்பு அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தினர்.
சென்னை துரைப்பாக்கத்தில் இண்டிகோ ஏர்லைன்ஸ் விமான நிறுவனத்தின் அலுவலகம் உள்ளது. அந்த அலுவலகத்துக்கு இன்று (திங்கள்கிழமை) காலை வந்த இமெயிலில், சென்னையில் இருந்து இன்று காலை கொல்கத்தா செல்லும் இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானத்தில் வெடிகுண்டுகள் வைக்கப்பட்டுள்ளன என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இதையடுத்து உடனடியாக சென்னை விமான நிலைய இண்டிகோ அலுவலகத்துக்கும், விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
இன்று காலை 8.30 மணிக்கு 168 பயணிகளுடன் கொல்கத்தாவுக்கு புறப்பட தயார் நிலையில் இருந்த இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானத்துக்கு தகவல் தெரிவித்த பாதுகாப்பு அதிகாரிகள், பயணிகளை கீழே இறக்கி ஓய்வு அறைகளில் அமர வைத்தனர்.
இதையடுத்து, வெடிகுண்டு நிபுணர்கள் பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் மத்திய உளவுப் பிரிவு அதிகாரிகள் விமானத்துக்குள் சென்று தீவிர சோதனையில் ஈடுபட்டனர். ஆனால், வெடிகுண்டுகள் எதுவும் இல்லை. இது புரளி என்பது தெரியவந்தது. இதையடுத்து, காலை 10.40 மணிக்கு 168 பயணிகளுடன் விமானம் சென்னையில் இருந்து கொல்கத்தாவுக்கு புறப்பட்டது. இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்துள்ள விமான நிலைய போலீஸார், மிரட்டல் விடுத்த நபரை தேடி வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT