Published : 29 Apr 2018 12:06 PM
Last Updated : 29 Apr 2018 12:06 PM
மழையின்மை, கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறக்காதது உள்ளிட்ட காரணங்களினால் இரு கரைகளையும் அடைத்தபடி தண்ணீர் சென்ற காவிரி ஆறு தற்போது வறண்டு வானம் பார்த்த பூமியாய் காட்சியளிக்கிறது.
கர்நாடக மாநிலம் குடகு மலையில் உருவாகும் காவிரி தருமபுரி, சேலம், நாமக்கல், திருச்சி, தஞ்சாவூர் வழியாக சென்று கடலில் கலக்கிறது. இதில் நாமக்கல் மாவட்டத்திற்கு உட்பட்ட குமாரபாளையம், பள்ளிபாளையம், பரமத்தி வேலூர், மோகனூர் வழியாக காவிரி ஆறு பாய்ந்து செல்கிறது. மேற்குறிப்பிட்ட பகுதியில் காவிரி பாசனத்தை பிரதானமாகக் கொண்டு பல ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் விவசாயம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அதேபோல், குடிநீர் ஆதாரமாக விளங்கும் காவிரி ஆற்றில் நாமக்கல் - மோகனூர் கூட்டுக் குடிநீர் திட்டம், ராசிபுரம் - பட்டணம் பேரூராட்சி கூட்டுக் குடிநீர் திட்டம் போன்றவை மேற்கொள்ளப்படுகின்றன. தற்போது நாமக் கல் நகராட்சிக்கு கூடுதலாக ஜேடர்பாளையத்தில் நாமக்கல் - ஜேடர்பாளையம் கூட்டுக் குடிநீர் திட்டம் ரூ.187 கோடி மதிப்பில் மேற்கொள்ளப்படுகிறது.
இந்நிலையில் மழையின்மை, கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறக்காதது உள்ளிட்ட காரணங்களால், இரு கரைகளையும் அடைத்தபடி தண்ணீர் பாய்ந்து சென்ற காவிரி தற்போது வறண்டு வானம் பார்த்த பூமியாய் பரிதாபமாக காட்சியளிக்கிறது. நாமக்கல் மாவட்டம் மோகனூரில் அகண்ட காவிரி தொடங்குகிறது. சுமார் 2 கி.மீ., தூரம் அகலம் கொண்ட காவிரியில் தற்போது கண்ணுக்கு எட்டிய தூரம் வரை வெறும் மணல் பரப்பாக காட்சியளிக்கிறது.
ஆற்றின் ஒரு ஓரத்தில் சிறு ஓடை போல் தண்ணீர் செல்கிறது. இது மோகனூர் பகுதி விவசாயிகள், பொதுமக்கள் மட்டுமின்றி அவ்வழியாக செல்வோரையும் கவலையடையச் செய்கிறது. இந்நிலை நீடித்தால் சிறு ஓடையைப் போல் செல்லும் தண்ணீரும் கூட வற்றிவிடும் என அப்பகுதி மக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.
இதனிடையே மோகனூர் காவிரிக் கரையில் அமைந்துள்ள நாமக்கல் - மோகனூர் கூட்டுக் குடிநீர் திட்ட நீரேற்று நிலையத்திற்காக ஆற்றினுள் நகராட்சி சார்பில் பத்திற்கும் மேற்பட்ட கிணறுகள் அமைக்கப்பட்டுள்ளன. காவிரி வறண்டதால் கிணற்றுக்கு தண்ணீர் வருவதற்காக ஜேசிபி மூலம் ஆற்றில் வாய்க்கால் வெட்டப்படுகிறது. இந்த வாய்க்காலில் வரும் தண்ணீர் கிணற்றுக் செல்கிறது. அங்கிருந்து குழாய் மூலம் நீரேற்று நிலையத்திற்கு தண்ணீர் கொண்டு சென்று, பின் நாமக்கல் நகராட்சிக்கு அனுப்பப்படுகிறது என, நகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT