Published : 02 Aug 2014 12:00 AM
Last Updated : 02 Aug 2014 12:00 AM

மூத்த குடிமக்கள் பாதுகாப்புக்கு என்ன செய்ய வேண்டும்?: காவல் துறை விழிப்புணர்வு முகாமில் தகவல்

மூத்த குடிமக்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுப்பது மற்றும் காவல் துறையை அவர்கள் அணுகுவது தொடர்பாக விழிப்புணர்வு முகாம்கள் நடத்த சென்னை காவல் துறை ஆணையர் ஜார்ஜ் உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து, அண்ணா நகர் புனித லூகாஸ் தேவாலயத்தில் மூத்த குடிமக்களுக்கான விழிப்புணர்வு முகாம் மற்றும் கருத்தரங்கம் காவல்துறை சார்பில் வியாழக்கிழமை நடந்தது.

ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி மெனிசிஸ், அவரது மனைவி டாக்டர் பரிமளா மெனிசிஸ் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு பேசினர். அண்ணா நகர் உதவி ஆணையர் நந்தகுமார், ஆய்வாளர்கள் சுரேந்திரன், ஜவஹர், சமூக ஆர்வலர் வ.ரகுநாதன் மற்றும் அண்ணா நகர் பகுதியை சேர்ந்த மூத்த குடிமக்கள் கலந்துகொண்டனர்.

மூத்த குடிமக்களின் பாதுகாப்பு குறித்து போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது:

வீட்டு வேலை செய்பவர்கள், டிரைவர்களின் நடத்தை குறித்து நன்கு விசாரித்து தெரிந்துகொண்ட பிறகே அவர்களை வேலைக்கு வைக்க வேண்டும். வீட்டின் வெளிப்புறத்தில் வெளிச்சத்துடன் கூடிய விளக்குகளை பொருத்தி எரியவிடவேண்டும். தோட்டத்தில் செடிகளும் புதர்களும் மண்டியிருந்தால் சமூகவிரோதிகள் பதுங்கக்கூடும். எனவே, தோட்டத்தில் செடிகள் அடர்த்தியாக இல்லாமல் முறையாக பராமரிக்க வேண்டும்.

வாசல் பக்கத்தில் மரக்கதவுக்கு வெளியே கிரில் கதவும் இருப்பது அவசியம். கிரில் கதவை எப்போதும் பூட்டியே வைத்திருக்கவும். அறிமுகமில்லாத நபர்களை வெளியிலேயே நிறுத்தி பேசி அனுப்பிவிட வேண்டும். வெளியூர் செல்லும்போது அருகில் உள்ள காவல் நிலையங்களில் தெரிவித்துவிட்டு செல்ல வேண்டும்.

அன்றாட தேவைக்கு போக மீதம் உள்ள பணம், நகைகள், விலை உயர்ந்த பொருட்களை வங்கி லாக்கரில் வைப்பது நல்லது. பீரோ சாவி, லாக்கர் சாவி மற்றும் முக்கியமான சாவிகளை குடும்ப நபர்கள் தவிர வேறு யாருக்கும் தெரியாத இடத்தில் பாதுகாப்பாக வைக்க வேண்டும்.

அருகில் உள்ள காவல் நிலைய தொலைபேசி எண்கள், குடும்பத்தினர், உறவினர், நெருங்கிய நண்பர்கள், வீட்டருகே இருப்பவர்களின் தொலைபேசி, செல்போன் எண்களை செல்போனில் உள்ள ஸ்பீடு டயல் பகுதியில் பதிவு செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.

காவல் நிலையங்களில் மூத்த குடிமக்கள் பதிவேடு பராமரிக்கப்படுகிறது. அதில் உங்கள் பெயரை பதிவு செய்ய வேண்டும். அவசர தேவைக்கோ, வேறு ஏதேனும் காவல்துறை உதவிகளுக்கோ காவல் உதவி எண் 100 அல்லது தங்களது பகுதிகளில் ரோந்து வரும் பீட் ஆபீசர், மற்றும் காவல் அதிகாரிகளை அணுகி எந்நேரத்திலும் உதவிகளை பெறலாம்.

இவ்வாறு போலீஸ் அதிகாரிகள் கூறினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x