Last Updated : 03 Jun, 2024 07:33 AM

2  

Published : 03 Jun 2024 07:33 AM
Last Updated : 03 Jun 2024 07:33 AM

வங்கி வாடிக்கையாளர்களின் குறை தீர்க்க உதவும் ‘பேங்க் கிளினிக்’ அறிமுகம்

சென்னை: வங்கிகளின் செயல்பாடுகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும், சேவை குறைபாடுகளுக்கு தீர்வு காணும் வகையிலும், அகில இந்திய வங்கி ஊழியர் சங்கம் சார்பில் ‘பேங்க் கிளினிக்’ என்ற இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் 12 பொதுத் துறை மற்றும் 20 தனியார் வங்கிகளுக்கு நாடு முழுவதும் ஒரு லட்சம் கிளைகள் உள்ளன. நாட்டில் உள்ள மொத்த மக்கள் தொகையில் 80 சதவீதம் பேர் இன்றைக்கு வங்கிக் கணக்கு வைத்துள்ளனர். ரூ.2.07 லட்சம் கோடி வைப்புத் தொகை வங்கிகளில் உள்ளது.

வங்கி சேவைகள் இந்த பரந்து விரிந்துள்ள போதிலும், அவற்றின் நடைமுறைகள் குறித்து மக்களுக்கு இன்னும் முழுமையாக அறிந்து கொள்ள முடியாத நிலை உள்ளது. அத்துடன், வங்கி சேவைகள் குறித்து புகார்கள் வருகின்றன.

இந்நிலையில், வங்கிகளின் செயல்பாடுகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும், சேவை குறைபாடுகளுக்கு தீர்வு காணும் வகையிலும், அகில இந்திய வங்கி ஊழியர் சங்கம் சார்பில் ‘பேங்க் கிளினிக்’ என்ற இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, அகில இந்திய வங்கி ஊழியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் சி.எச்.வெங்கடாச்சலம் ‘இந்து தமிழ் திசை’ நாளிதழிடம் கூறியதாவது:

வங்கி சேவைகள் மற்றும் நடைமுறைகள் தற்போது முற்றிலும் மாறிவிட்டது. கணினிமயமாக்கள் உள்ளிட்ட தொழில்நுட்ப வளர்ச்சியே இதற்கு காரணம். எனினும், வாடிக்கையாளர்கள் பலருக்கு வங்கி சேவையில் பல்வேறு குறைபாடுகள் ஏற்படுகின்றன. அத்துடன், வங்கி செயல்பாடுகள் குறித்து அவர்களுக்கு முழுமையாக தெரியவில்லை.

வங்கி சேவை மற்றும் வங்கிக் கடன் இன்றைக்கு சாதாரண மக்களுக்குகூட கிடைக்கிறது. அதே சமயம், வங்கி மோசடிகளும் அதிகரித்துள்ளன.

பொதுமக்கள் தாங்கள் கஷ்டப்பட்டு சேமித்து வைத்த பணத்தை வங்கிகளில் டெபாசிட்செய்துள்ளனர். ஆனால், இந்த பணத்தை மோசடிக்காரர்கள் கபளீகரம் செய்து விடுகின்றனர். இதனால், அப்பாவி வாடிக்கையாளர்கள் பாதிக்கப்படுகின்றனர். இந்நிலையில், வாடிக்கையாளர்களுக்கு வங்கிகளின் செயல்பாடுகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும் தங்களுடைய புகார்கள், குறைகளுக்கு தீர்வு காண உதவும் வகையிலும் அகில இந்திய வங்கி ஊழியர் சங்கம் ‘பேங்க் கிளினிக்’ என்ற பெயரில் புதிய இணையதளத்தை (http://banksclinic.com) தொடங்கி யுள்ளது.

வங்கி ஊழியர்களின் உரிமைக்காக போராடிவரும் எங்கள் சங்கம் வாடிக்கையாளர்களின் நலனுக்காகவும் உதவும் வகையில் முதன்முறையாக இந்த இணையதளத்தை தொடங்கி உள்ளது.

இந்த இணையதளத்தில் வங்கிகளின் சேவைகள் மற்றும் செயல்பாடுகள் குறித்த அனைத்து விவரங்களும் இடம்பெற்றிருக்கும். அத்துடன், பொதுத் துறை மற்றும் தனியார் வங்கிகளின் சேவை குறைபாடுகள் மற்றும் புகார்கள் குறித்து வாடிக்கையாளர்கள் இந்தஇணையதளத்தில் புகார் அளிக்கலாம். நாங்கள் அந்த புகார்களை சம்மந்தப்பட்ட வங்கிகளுக்கு அனுப்பி அதை தீர்க்க உதவுவோம். இதற்காக அனைத்து வங்கிகளின் விவரங்களும் இந்த இணையத்தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

அதேபோல், ஒரு புகாரை எவ்வாறு தெரிவிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட அனைத்து தகவல்களும் இந்த இணைய பக்கத்தில் இடம்பெற்றுள்ளன.

அதேபோல், சேமிப்பு கணக்கு வைத்திருக்கும் நபர் வாரிசுகளை நியமிக்கவில்லை என்றால், அவர் இறப்புக்கு பிறகு வாரிசுதாரர்கள் எவ்வாறு விண்ணப்பிக்க வேண்டும், எந்தெந்த படிவங்களை பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட அனைத்து விவரங்களும் இந்தஇணையதளத்தில் இடம் பெற்றிருக்கும். அத்துடன், வீடியோவடிவிலும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வீடியோக்கள் இடம்பெற்றுள்ளன.

வாடிக்கையாளர்கள் தெரிவிக்கும் புகார்கள் மற்றும் குறைகளுக்கு 5 நாட்களுக்குள் தீர்வு காண நாங்கள் உதவுவோம்.

குறிப்பாக, வங்கிகளில் நடைபெறும் மோசடிகள் குறித்து சைபர் கிரைம் பிரிவுக்கு புகார் அளிப்பது குறித்த லிங்க்கும் இந்தஇணையதளத்தில் இடம்பெற்றுள்ளது. தற்போது, இந்த இணைய பக்கத்தில் உள்ள விவரங்கள் அனைத்தும் ஆங்கிலத்தில் இடம்பெற்றுள்ளன. படிப்படியாக தமிழ் உள்ளிட்ட பிராந்திய மொழிகளில் இந்த விவரங்கள் வழங்கப்படும். மேலும், நாங்கள் வழங்கும் இந்த சேவைகள் அனைத்தும் இலவசம் என்பது குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு வெங்கடாச்சலம் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x