Published : 03 Jun 2024 07:06 AM
Last Updated : 03 Jun 2024 07:06 AM
சென்னை: மறைந்த முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியின் நூற்றாண்டு நிறைவு விழா, 101-வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு, முதல்வர் மு.க.ஸ்டாலின், தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்ட கவிதையில் கூறியிருப்பதாவது:
தலைவரே, பாதை அமைத்தீர்கள், பயணத்தை தொடர்கிறோம். தலைவர்களுக்கெல்லாம் தலைவர், நவீன தமிழகத்தை செதுக்கிய சிற்பி, மு.கருணாநிதி சூல் கொண்ட நாள் ஜூன் 3. அதிலும் 2024-ம் ஆண்டு என்பது கருணாநிதிக்கு நூற்றாண்டு.
ஐம்பது ஆண்டுகள் திமுகவின் தலைவர். 5 முறை தமிழக முதல்வர், சட்டப்பேரவை, சட்ட மேலவை உறுப்பினராகவும் இருந்தார், எதிர்க்கட்சித் தலைவராகவும் இருந்திருக்கிறார்.
திரையுலகில், கதை, வசனம், பாடல்கள் எழுதினார், திரைப்படங்களை தயாரித்தார், நாடகங்களை தயாரித்தார், நடிக்கவும் செய்தார். பத்திரிகை உலகில், பத்திரிகை நடத்தினார், ஆசிரியராக இருந்தார், எழுத்தாளராகவும், பத்திரிகையாளராகவும் இயங்கினார். இலக்கியம் என்றால், கவிஞர், சிறுகதை ஆசிரியர், நாவலாசிரியர், உரையாசிரியர் என அனைத்திலும் முத்திரைபதித்தார்.
இன்று நாம் பார்க்கும் எத்தனையோ திட்டங்கள் அவரால் உருவாக்கப்பட்டவை. ஒருதுளி மையில் இந்த மாநிலத்தை வளர்த்தார். அதனால்தான் நிறை வாழ்க்கைக்குப் பிறகும் நினைவு கூரப்படுகிறார்.
அவருக்கு நமது நன்றியின் அடையாளமாக, மதுரையில் நூலகம், சென்னையில் பல்நோக்கு மருத்துவமனை, திருவாரூரில் கோட்டம், அலங்காநல்லூரில் ஏறுதழுவுதல் அரங்கம், சென்னையின் நுழைவாயிலில் பேருந்து முனையம் கட்டினோம். வங்கக்கடலோரம், நினைவகம் நிலைநாட்டினோம்.
நீங்கள் இருந்து செய்ய வேண்டியதை, உங்கள் மகனாக நான் செய்து வருகிறேன். எதிர்கொண்ட எல்லா தேர்தல்களிலும் நாங்களும் வென்று காட்டி இருக்கிறோம். நீங்கள் உருவாக்கிய நவீன தமிழகத்தை உன்னத தமிழகமாக உயர்த்தி காட்டி வருகிறோம். இந்தியாவின் அனைத்துமாநிலங்களும் திரும்பிப் பார்க்கும் திராவிட மாடல் ஆட்சியை நடத்திவருகிறோம். உலக நாடுகளோடு போட்டி போடும் அளவுக்கு தொழில் வளர்ச்சியைக் கண்டு வருகிறோம். கம்பீர தமிழகத்தை நாங்கள் உருவாக்கிக் காட்டி வருகிறோம். நீங்கள் பாதை அமைத்தீர்கள், நாங்கள் பயணத்தைத் தொடர்கிறோம். இவ்வாறு அதில் முதல்வர் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT