Published : 17 Apr 2018 08:18 AM
Last Updated : 17 Apr 2018 08:18 AM
நடந்து முடிந்த ராணுவ பாதுகாப்புக் கண்காட்சி மூலம், ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு வர்த்தகம் நடைபெற்றுள்ளது. அதே சமயம் ஒரு நாள் மட்டுமே கண்காட்சியை பார்வையிட அனுமதிக்கப்பட்டது பொதுமக்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது.
இந்திய பாதுகாப்புத் துறை சார்பில், 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை ராணுவ பாதுகாப்புக் கண்காட்சி (டெபெக்ஸ்போ) நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, கடந்த 1999-ம் ஆண்டு முதல் கண்காட்சி டெல்லியில் நடைபெற்றது. 9-வது கண்காட்சி கோவாவில் நடைபெற்றது. இதையடுத்து, 10-வது கண்காட்சி சென்னையை அடுத்த திருவிடந்தையில் கடந்த 11-ம் தேதி முதல் 14-ம் தேதி வரை நடைபெற்றது.
ரூ.800 கோடி செலவில்...
இந்துஸ்தான் ஏரோநாட்டிக்கல் நிறுவனம் மற்றும் பாதுகாப்புத் துறை இணைந்து நடத்திய இந்தக் கண்காட்சியில் 701 பாதுகாப்புத் துறை தளவாட உற்பத்தி நிறுவனங்கள் பங்கேற்றன. ரூ.800 கோடி செலவில் 2.90 லட்சம் சதுர அடி பரப்பளவில் நடைபெற்ற இக்கண்காட்சி, கடந்த முறை கோவாவில் நடைபெற்ற கண்காட்சியை விட 30 சதவீதம் அதிக பரப்பளவில் நடைபெற்றது.
இக்கண்காட்சியை இந்த ஆண்டு குஜராத், உத்தரபிரதேசம் உள்ளிட்ட சில மாநில அரசுகள் தங்கள் மாநிலத்தில் நடத்த வேண்டும் என மத்திய அரசுக்கு கடும் நெருக்கடியைக் கொடுத்தன. ஆனால், தமிழகத்தில் தொழில் வழித்தடம் அமைக்கப்படும் என மத்திய அரசு ஏற்கெனவே அறிவித்திருந்தது. எனவே, அத்திட்டத்துக்கு ஊக்கம் அளிக்கும் வகையில், மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் மேற்கொண்ட முயற்சி காரணமாக கடும் போட்டிக்கு நடுவே இக்கண்காட்சி தமிழகத்தில் நடத்தப்பட்டது.
புதிய ஆர்டர்கள்
கண்காட்சியின் மூலம், ஆயிரம் கோடி ரூபாய்க்கு வர்த்தகம் நடைபெற்றுள்ளது. இது குறித்து, பாதுகாப்புத் துறைச் செயலாளர் (தளவாட உற்பத்தி) அஜய் குமார் கூறும்போது, “இக்கண்காட்சியின் மூலம், குறிப்பிடத்தக்க அளவுக்கு ராணுவ உதிரிபாகங்கள் தயாரிப்பதற்கான ஆர்டர்கள், இந்திய நிறுவனங்களுக்குக் கிடைத்துள்ளன.
குறிப்பாக, குறு, சிறு மற்றும் வர்த்தக நிறுவனங்களுக்கு ஆர்டர்கள் கிடைத்துள்ளன. ஆனால், எவ்வளவு கோடி மதிப்புக்கு ஆர்டர்கள் கிடைத்துள்ளன என்ற விவரம் ஒருவாரத்துக்குப் பிறகே தெரிய வரும். எனினும், இந்தக் கண்காட்சி நடத்தப்பட்டதன் மூலம் ரூபாய் ஆயிரம் கோடி அளவுக்கு வர்த்தகம் நடைபெற்றுள்ளது” என்றார்.
கண்காட்சியைக் காண கடைசி நாளில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வந்தது அதிகாரிகளை ஆச்சரியப்பட வைத்துள்ளது. இதுகுறித்து, இந்துஸ்தான் ஏரோநாட்டிக்கல் அதிகாரி ஒருவர் கூறும்போது, “நாங்கள் கண்காட்சியைக் காண 25 ஆயிரம் முதல் 50 ஆயிரம் பேர் வரை வருவார்கள் என எதிர்பார்த்தோம். ஆனால், ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் வந்தது எங்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது” என்றார்.
இதனிடையே, கண்காட்சியைப் பார்க்க ஒருநாள் மட்டுமே அனுமதிக்கப்பட்டது, பொதுமக்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது. இதுகுறித்து, தாம்பரத்தில் இருந்து குடும்பத்தோடு கண்காட்சியைப் பார்க்க வந்த ராதாகிருஷ்ணன் என்பவர் கூறும்போது, “தற்போது பொதுமக்களுக்கு பொழுதைக் கழிக்க பயனுள்ள நிகழ்ச்சிகள் எதுவும் நடைபெறுவதில்லை. சினிமாவுக்குச் செல்லலாம் என்றால் தற்போது வெளியாகும் திரைப்படங்கள் குடும்பத்தினருடன் அமர்ந்து பார்க்கும் அளவுக்கு தரமாக இல்லை.
அதைவிட்டால், ஷாப்பிங் மால்கள் அல்லது பீச், பார்க் போன்ற இடங்களுக்குச் செல்ல வேண்டும். அங்கும் குடும்பத்துடன் சென்று நிம்மதியாக பொழுதைக் கழிக்க முடியவில்லை.
அறிவுக்கு விருந்து
இந்நிலையில், இந்த பாதுகாப்புக் கண்காட்சி பொதுமக்களுக்கு கண்களுக்கும், அறிவுக்கும் விருந்து படைக்கும் வகையில் அமைந்தது. குறிப்பாக, மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமைந்தது. அர்ஜுன் ரக பீரங்கிகள், டார்னியர் விமானங்கள், கடற்படை போர்க் கப்பல்கள், வெளிநாட்டு நிறுவனங்களின் தயாரிப்புகள் உள்ளிட்டவை ஒரே குடையின்கீழ் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.
ஆனால், ஒரு நாள் மட்டுமே இந்தக் கண்காட்சியைப் பார்க்க பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்பட்டதால், பலரால் கண்காட்சியை பார்க்க முடியாத நிலை ஏற்பட்டு ஏமாற்றமடைந்தனர். மேலும், ஓரிரு நாட்கள் இந்தக் கண்காட்சியை நீட்டித்திருந்தால் அனைவருக்கும் பயனுள்ளதாக அமைந்திருக்கும்” என்றார்.
இதுகுறித்து, கண்காட்சி ஏற்பாட்டாளரான இந்துஸ்தான் ஏரோநாட்டிக்கல் நிறுவன அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, “கண்காட்சியில் பல 1,000 கோடி ரூபாய் மதிப்புள்ள தளவாடங்கள் காட்சிப்படுத்தப்பட்டன. எனவே, பாதுகாப்பு கருதி பொதுமக்கள் பார்வையிட ஒருநாள் மட்டுமே அனுமதி வழங்கப்பட்டது” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT