Published : 02 Jun 2024 06:49 PM
Last Updated : 02 Jun 2024 06:49 PM
சென்னை: "முதல்வர் ஸ்டாலினை விமர்சித்தால் கைது நடவடிக்கை?. பிரதமர் மோடியை விமர்சித்தால் விழா நாயகனா?" என்று நடிகர் பிரகாஷ் ராஜ் குறித்து தமிழக பாஜக மாநில செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், "கடந்த 2014ல் நரேந்திர மோடி பிரதமரானது முதல் அவரை கடுமையாக விமர்சித்து வருபவர் நடிகர் பிரகாஷ் ராஜ். பிரதமர் மோடியை எதிர்க்கிறார் என்பதால் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சமீபத்தில் அவருக்கு விருது வழங்கியது. அந்த விழாவில் பிரதமர் மோடியை மிக அநாகரீகமாக கேலி செய்து பேசியுள்ளார். நாட்டின் பிரதமரை ஒருமையிலும் பேசியுள்ளார்.
முதல்வர் அவர்களே! உங்கள் குறித்தும், திராவிட மாடல் ஆட்சி குறித்தும் யாரும் விமர்சித்தாலும், சமூக ஊடகங்களில் கருத்துக்கள் தெரிவித்தாலும் அவர்களை ஏதோ கிரிமினல் குற்றவாளிகள் போல நடு இரவில் எழுப்பி குண்டு கட்டாக தூக்கிக்கொண்டு போய் கைது செய்யக்கூடிய திமுக அரசு, உலகமே போற்றக்கூடிய பிரதமரை வெற்றுக் கூச்சல் போட்டு நடிகர் பிரகாஷ் ராஜ் கீழ்த்தரமாக விமர்சிக்கும்போது ரசித்து மகிழ்வது நியாயமா?.
இப்படி பிரதமர் மோடி எதிர்ப்பிற்காக விருது பெற்ற நடிகர் பிரகாஷ் ராஜை அழைத்து, முன்னாள் முதல்வர் கருணாநிதி கண்காட்சியை திறக்க செய்திருக்கிறார் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு. வில்லன் நடிகர் பிரகாஷ் ராஜின் பத்திரிகையாளர் சந்திப்பில், "திமுக ஆட்சி குறித்த நிருபரின் கேள்விக்கு நடிகரிடம், அமைச்சர் சேகர்பாபு சிஎம்மை வாழ்த்தி சொல்லுங்க! நல்லாட்சி பண்ணறார்னு சொல்லுங்க! நல்லாட்சின்னு கொஞ்சம் சொல்லுங்க! நல்ல திட்டங்கள், நல்லாட்சின்னு சொல்லுங்க" என்று கெஞ்சாத குறையாக சர்டிபிகேட் கேட்ட அவலம் நாடறிந்தது.
நடிகர் பிரகாஷ் ராஜும் திமுக அரசால் தமிழக மக்கள் படும் வேதனைகளைப் பற்றி அறியாமல், சாதனைகள் நடப்பது போல் வளர்ச்சிக்கும் வீக்கத்திற்கும் வித்தியாசம் தெரியாமல் பாராட்டி நடித்துவிட்டு சென்றிருக்கிறார். மேலும் தமிழகத்தில் நடைமுறையில் உள்ள 69 சதவீத இட ஒதுக்கீடு பற்றி உளறிக் கொட்டியிருக்கிறார். தமிழகத்தில் 69 சதவீத இட ஒதுக்கீடு இருப்பதற்கு எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவுமே காரணம்.
அவர்களை கொச்சைப்படுத்தும் வகையில் நடிகர் பிரகாஷ் ராஜ் பேசியிருக்கிறார். மைக்கை நீட்டினால் நீட்டி முழக்கும் அதிமுக முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமாருக்கு இதை கண்டிக்க நேரமில்லை. முன்பெல்லாம் திமுக சார்பில் நடத்தப்படும் நிகழ்ச்சிகளுக்கு முதல்வர் ஸ்டாலின், அமைச்சர்களை அழைப்பார்கள். இப்போது நடிகர் பிரகாஷ் ராஜை அழைக்கும் அளவுக்கு திராவிட மாடல் முன்னேற்றம் கண்டிருக்கிறது.
வரலாறு தெரியாத, நாகரீகம் அற்ற, சுயநலவாதிகளை, சுய லாபத்திற்காக அரசியல் பேசி பிழைப்பு நடத்தும் கோமாளிகளை வைத்து விழா நடத்துவது தான் திராவிட மாடலா?. முதல்வர் ஸ்டாலினை, அவரது மகன் அமைச்சர் உதயநிதியை, திமுக அரசை விமர்சிப்பவர்கள் அனைவரையும் சிறையில் தள்ளிவிட்டு பிரதமர் மோடியை விமர்சிப்பவர்களை அழைத்து நிகழ்ச்சிகளை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். வாழ்க ஜனநாயகம்!" என்று விமர்சித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT