Published : 02 Jun 2024 06:40 PM
Last Updated : 02 Jun 2024 06:40 PM
சென்னை: தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கையை கண்காணிக்க நியமிக்கப்பட்டுள்ள பொது பார்வையாளர்களுக்கான பணிகளை ஒருங்கிணைக்க பொதுத்துறை செயலர் உள்ளிட்ட இருவர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் ஏப்.19ம் தேதி நடைபெற்றது. இதில் பதிவான வாக்குகள் அடங்கிய மின்னணு இயந்திரங்கள், 39 வாக்கு எண்ணும் மையங்களில் வைக்கப்பட்டுள்ளன. வாக்கு எண்ணிக்கை ஜூன் 4-ம் தேதி காலை 8 மணிக்கு தொடங்குகிறது.
முன்னதாக, வாக்குப்பதிவு நடைபெற்ற போது, பணிகளை கண்காணிப்பதற்காக இந்திய தேர்தல் ஆணையம், ஒரு தொகுதிக்கு ஒருவர் என 39 வெளிமாநில ஐஏஎஸ் அதிகாரிகளை தேர்தல் பார்வையாளர்களாக நியமித்தது. இந்நிலையில், தற்போது வாக்கு எண்ணிக்கைக்காக, கூடுதலாக 19 பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். சென்னையின் 3 தொகுதிகளில் தலா 2 பேர் உட்பட 18 தொகுதிகளில் தலா 2 பேர், விளவங்கோடு சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலுக்கு ஒருவர் என 19 பேர் கூடுதலாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், தேர்தல் பொது பார்வையாளர்களின் பணிகளை ஒருங்கணைக்கவும் அவர்களுக்கான உதவிகளுக்காகவும் தமிழக அரசு சார்பில் 2 பொறுப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். அதன்படி கூடுதல் தலைமை தேர்தல் அதிகாரி ஆனி ஜோசப், பொதுத்துறை செயலர் நந்தகுமார் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
வாக்குப்பதிவு இயந்திர பரிசோதனை வழிகாட்டுதல் வெளியீடு: இதற்கிடையே, தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட பின்னர், பதிவான வாக்குகள் குறித்த சந்தேகத்தை தீர்க்கும் வகையில், கட்டுப்பாட்டு இயந்திர நினைவகத்தில் உள்ள வாக்குகளை பரிசோதனை செய்ய விண்ணப்பித்தல் உள்ளிட்டவற்றுக்கான வழிகாட்டுதல்களை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.
கடந்தாண்டு தொடரப்பட்ட தேர்தல் தொடர்பான வழக்கு ஒன்றின் மீது, உச்ச நீதிமன்றம் கடந்த ஏப்ரல் மாதம் 26ம் தேதி தீர்ப்பு வழங்கியிருந்தது. அதன்படி, தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்ட பின், அதிக வாக்கு பெற்று வெற்றி பெற்றவருக்கு அடுத்ததாக 2 மற்றும் 3வது இடம் பிடித்த வேட்பாளர்கள் விண்ணப்பிக்கும் பட்சத்தில், தொகுதியில் பயன்படுத்தப்பட்ட மின்னணு இயந்திரத்தின் நினைவகம் அல்லது மைக்ரோ கண்ட்ரோலர் மற்றும் விவிபேட்டில் 5 சதவீதங்களை வேட்பாளர் அல்லது அவரது முகவர்கள் முன்னிலையில், இயந்திர தயாரிப்பு நிறுவனத்தின் அலுவலர்கள் மூலம் பரிசோதனை செய்யலாம். குறிப்பாக, இயந்திரத்தில் ஏதேனும் மாற்றம் செய்யப்பட்டுள்ளதா அல்லது சீல் உடைக்கப்பட்டுள்ளதா என்பதையும் அறிந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டிருந்து.
இதன் அடிப்படையில் தற்போது, இந்த நடைமுறைக்கான நிலையான வழிகாட்டுதல்களை அனைத்து மாநில தலைமை தேர்தல் அதிகாரிகளுக்கும் இந்திய தேர்தல் ஆணையம் அனுப்பியுள்ளது. அதில், இந்த பணிகளுக்கு பொறுப்பு, மாவட்ட தேர்தல் அதிகாரியாகும். மாவட்ட தேர்தல் அதிகாரி, துணை தேர்தல் அதிகாரி ஒருவரை இதற்காக நியமிக்கலாம். தேர்தலில் வெற்றி பெற்றவருக்கு அடுத்தபடியாக 2 வது மற்றும் 3 வது இடத்தில் உள்ள வேட்பாளர்கள், ஒரு சட்டப்பேரவை தொகுதிக்கு 5 சதவீதம் கட்டுப்பாட்டு இயந்திரம், வாக்குப்பதிவு இயந்திரம், விவிபேட் இயந்திரங்களை பரிசோதனை செய்ய விண்ணப்பிக்கலாம்.
இருவரும் விண்ணப்பித்தால், ஒருவருக்கு 2.5 சதவீதம் என்ற அடிப்படையில் பரிசோதனை செய்யப்படும். இதற்காக தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்ட 7 நாட்களுக்குள் மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் விண்ணப்பிக்க வேண்டும். இதற்காக, ரூ.40 ஆயிரம் மற்றும் 18 சதவீதம் ஜிஎஸ்டி தொகையை வேட்பாளர்கள் செலுத்த வேண்டும். விண்ணப்பிக்கும் போது, கட்டுப்பாட்டு இயந்திரம், மின்னணு இயந்திரம் மற்றும் விவிபாட் இயந்திரத்தின் குறியீட்டு எண்ணை தெளிவாக குறிப்பிட வேண்டும்.
பரிசோதனை நடத்தும் இயந்திர தயாரிப்பு நிறுவனம் மற்றும் வேட்பாளர் இடையில் ஒருங்கிணைப்பு பணிகளை மாவட்ட தேர்தல் அதிகாரி மேற்கொள்ள வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு வழிகாட்டுதல்கள் அடங்கிய நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை தேர்தல் ஆணையம், மாநில தலைமை தேர்தல் அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT