Published : 02 Jun 2024 05:09 PM
Last Updated : 02 Jun 2024 05:09 PM
சென்னை: திருச்சி செல்வதற்காக சென்னை விமான நிலையம் வந்த நடிகர் கருணாஸின் கைப்பையில் 40 துப்பாக்கி குண்டுகள் இருந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை விமான நிலையத்தில் இருந்து திருச்சி செல்லும் பயணிகள் விமானம் இன்று காலை புறப்பட தயாராகிக் கொண்டிருந்தது. பயணிகளையும், அவர்களின் உடைமைகளையும் பாதுகாப்பு அதிகாரிகள் சோதனை செய்து அனுப்பி கொண்டிருந்தனர். அப்போது, அந்த விமானத்தில் திருச்சி செல்வதற்காக நடிகரும், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினரும், முக்குலத்தோர் புலிப்படை தலைவருமான கருணாஸ் வந்தார். அவரது கைப்பையை பாதுகாப்பு அதிகாரிகள் ஸ்கேன் செய்த போது, அதில் வெடிபொருள் இருப்பதற்கான எச்சரிக்கை அலாரம் ஒலித்தது. உடனே அந்தப்பையில் என்ன இருக்கிறது என்று கருணாஸிடம் அதிகாரிகள் விசாரித்த போது, அதில் அப்படி ஒன்றும் இல்லை என்றார்.
அந்த கைப்பையை வாங்கி அதிகாரிகள் சோதனை செய்த போது, அதில் 2 பாக்ஸ்களில் தலா 20 குண்டுகள் வீதம் மொத்தம் 40 துப்பாக்கி குண்டுகள் இருந்தன. இதையடுத்து, கைத்துப்பாக்கியில் பயன்படுத்தக்கூடிய 40 குண்டுகளையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதனைத் தொடர்ந்து கருணாஸிடம் நடத்திய விசாரணையில், "நான் துப்பாக்கி லைசென்ஸ் வைத்துள்ளேன். இந்த குண்டுகள் அனைத்தும் என்னிடம் உள்ள கைத்துப்பாக்கியில் பயன்படுத்தக்கூடியவை. நான் அவசரமாக புறப்பட்டு வந்ததால், எனது கைப்பையில் இருந்த துப்பாக்கி குண்டுகள் இருந்த 2 பாக்ஸ்களையும் கவனிக்கவில்லை. துப்பாக்கி குண்டுகள் இருந்த கைப்பையை தெரியாமல் எடுத்து வந்துவிட்டேன்" என்று தெரிவித்தார். தனது துப்பாக்கி லைசென்ஸ் மற்றும் அதுதொடர்பான ஆவணங்களை கருணாஸ் காட்டினார்.
இதைத்தொடர்ந்து, கருணாஸின் திருச்சி பயணத்தை ரத்த செய்த அதிகாரிகள், பறிமுதல் செய்த துப்பாக்கி குண்டுகளை கொடுத்து, இனிமேல் இப்படி செய்யாதீர்கள் எனக்கூறி அனுப்பி வைத்தனர். இதையடுத்து, கருணாஸ் காரில் திருச்சிக்கு சென்றதாக கூறப்படுகிறது. இந்த சம்பவத்தால் திருச்சி செல்ல வேண்டிய பயணிகள் விமானம் 30 நிமிடங்கள் தாமதமாக புறப்பட்டது. இதனால், சென்னை விமான நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT