Published : 02 Jun 2024 03:18 PM
Last Updated : 02 Jun 2024 03:18 PM
காரைக்குடி: "கருத்துக் கணிப்பை விட அதிக இடங்களில் பாஜக கூட்டணி வெற்றி பெறும்" என தமாகா தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்தார்.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: "மக்களவைத் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகளைவிட இந்திய அளவில் அதிக இடங்களில் பாஜக கூட்டணி வெற்றி பெறும். அதேபோல் தமிழகத்திலும் பல இடங்களில் பாஜக கூட்டணி வெல்லும். பாஜக கூட்டணியின் தேர்தல் பணிக்கு தமிழக மக்கள் நல்ல அங்கீகாரம் வழங்குவர் என்று நம்புகிறேன்.
மூன்றாவது முறையாக மோடி பிரதமராக பதவி ஏற்று நல்லரசாக உள்ள இந்தியாவை வல்லரசாக மாற்றுவார். பதவிகளுக்கு அப்பாற்பட்டு நாட்டின் நலன் கருதி பாஜக கூட்டணியில் தமாகா தொடர்ந்து நீடிக்கும். ஒரு கட்சியின் வெற்றி, தோல்விகளை மக்கள் தான் தீர்மானிப்பர். அதிமுக பற்றி அண்ணாமலை பேசுவதில் தவறில்லை. தமிழகத்தில் பாஜக, திமுக, அதிமுக என மூன்று அணிகள் உள்ளன. அவர்களுக்குள் ஒத்த கருத்து இல்லை.
அனைத்து கட்சிகளுக்கும் ஒவ்வொரு தேர்தலிலும் வாக்கு சதவீதம் மாறும். திமுகவிலும் ஒரு காலத்தில் 2 எம்எல்ஏக்கள் மட்டும் இருந்தனர். ஒரு காலத்தில் பாஜகவில் கூட மிக குறைந்த எம்பிக்களே இருந்தனர். தேர்தலில் வெற்றி, தோல்வி என்பது சகஜம்.
தமிழகத்தில் கடந்த 3 ஆண்டுகளாக மக்கள் விரோத ஆட்சி தான் நடந்து கொண்டிருக்கிறது. மக்கள் மீது சுமையை சுமத்தியுள்ளதை யாராலும் மறக்க முடியாது. மன்னிக்கவும் முடியாது. வருகிற 2026-ம் ஆண்டு தமிழக சட்டபேரவைத் தேர்தலில் பாஜக தலைமையில் அதிக கட்சிகளுடன் கூட்டணி அமையும். மீண்டும் காமராஜர் ஆட்சிக்கு பாஜக துணை நிற்கும்" என்று அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT