Published : 02 Jun 2024 01:31 PM
Last Updated : 02 Jun 2024 01:31 PM
மதுரை: ஆவணங்கள் மற்றும் செல்போனுடன் நாளை விசாரணைக்கு ஆஜராக டிடிஎஃப் வாசனுக்கு மதுரை அண்ணாநகர் காவல்துறை சம்மன் அளித்துள்ளது.
யூடியூபரும் பைக் ரேசருமான டிடிஎஃப் வாசன் சென்னையில் இருந்து திருச்செந்தூருக்கு தனது நண்பர்களுடன் பழகுநர் உரிமத்துடன் காரில் சென்றார். அப்போது மதுரை வண்டியூர் புறவழிச்சாலையில் பயணம் மேற்கொண்ட போது செல்போன் பேசியபடி வாகனத்தை இயக்கிய அவர், அதை வீடியோவாக பதிவு செய்து தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டார்.
இதனையடுத்து சாலை போக்குவரத்து விதிமுறைகளை மீறியதாக 7 பிரிவுகளின் கீழ் வாசன் மீது வழக்குப் பதிவு செய்த மதுரை அண்ணா நகர் போலீஸார், கடந்த மாதம் 30ம் தேதி காலையில் வாசனை கைது செய்து அவரது காரையும் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து வாசனுக்கு ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இதற்கு அரசு தரப்பில் ஆட்சேபனை தெரிவிக்கப்பட்ட போதும் நீதிமன்றம் அவருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியது.
இதையடுத்து, காலையில் கைது செய்யப்பட்ட வாசன் மாலையில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். அவருக்கு ஜாமீன் வழங்கிய மதுரை மாவட்ட 6 -வது குற்றவியல் நடுவர் நீதிமன்றம், டிடிஎஃப் வாசன் 10 நாட்களுக்கு மதுரை அண்ணா நகர் காவல் நிலையத்தில் தினமும் நேரில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என உத்தரவு பிறப்பித்தது.
அதன்படி, 3ஆவது நாளாக டிடிஎஃப் வாசன் அண்ணாநகர் காவல்நிலையத்தில் கையெழுத்திட்டுள்ள நிலையில் நாளை தன்னிடம் உள்ள ஆவணங்கள் மற்றும் செல்போனுடன் காவல்நிலையத்தில் ஆஜராக கோரி டிடிஎஃப் வாசனுக்கு அண்ணாநகர் காவல்நிலையம் சார்பில் சம்மன் வழங்கப்பட்டது.
10 ஆண்டுகளுக்கு டிடிஎஃப் வாசனின் வாகன உரிமம் ரத்து செய்யப்பட்டிருக்கும் நிலையில் பழகுநர் உரிமம் எவ்வாறு பெற்றார் என்பது குறித்து போலீஸார் விசாரிக்க திட்டமிட்டுள்ளனர் என்று தகவல் வெளியாகியுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT