Published : 19 Apr 2018 08:36 AM
Last Updated : 19 Apr 2018 08:36 AM

காவிரி போராட்டத்தில் பங்கேற்காதது ஏன்?: உதயநிதி ஸ்டாலின் விளக்கம்

திமுக தொண்டர் வீட்டு திருமணத்தில் பங்கேற்கச் சென்றதால் காவிரிக்காக தமிழ் திரையுலகினர் நடத்திய போராட்டத்தில் பங்கேற்கவில்லை. மேலும் தமிழ் திரையுலகினர் நடத்தியது போராட்டம் அல்ல மவுன விரதம் என்று நடிகர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.

தமிழ் திரையுலகில் கடந்த 47 நாட்களாக நிலவிவந்த வேலைநிறுத்தம் முடிவுக்கு வந்துள்ள நிலையில், “ ஐபிஎல் போட்டிகள் போல் தமிழ்நாட்டில் புதிய தமிழ் திரைப்படங்களின் வெளியீடும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படும் வரை ஒத்திவைக்கப்படுமா.. ? செயல்படாத மத்திய மாநில அரசுகளின் கவனத்தை இன்னும் அதிகமாக ஈர்க்க உதவுமே..” என்று தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார் உதயநிதி ஸ்டாலின்.

உதயநிதி ஸ்டாலினின் இந்த ட்வீட், திரையுலகிலும், சமூக வலை தளத்திலும் பெரும் சர்ச்சையை உண்டாக்கியுள்ள நிலையில், இதுகுறித்து அவரிடம் கேட்டோம்.

“திரையுலகப் போராட்டம் முடிந்திருப்பது நல்ல விஷயம்தான். அதை நான் வரவேற்கிறேன். அதே சமயம், மத்திய அரசின் கவனத்தை ஈர்க்க ஐபிஎல் போட்டியை நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டதைப் போல் படங்களின் வெளியீட்டையும் நிறுத்தி கவனம் ஈர்க்கலாமே என்பது என் கருத்து. உடனே எனக்குப் படம் இல்லாததால் ட்வீட் போடுவதாக சிலர் கூறுகிறார்கள். நான் 3 படங்களை தயாராக வைத்திருக்கிறேன். அதில் 2 படங்கள் தணிக்கை செய்யப்பட்டுள்ளது” என்றவாறு பேசத் தொடங்கினார்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி தமிழ் திரையுலகினர் நடத்திய போராட்டத்தில் ஏன் கலந்து கொள்ளவில்லை?

திரையுலகினர் நடத்திய போராட்டத்தில் சத்யராஜ் சாரைத் தவிர பலரும் பேசவில்லை. இங்கிருக்கும் திரையுலகினருக்கு அரசைக் கண்டால் பயம். அதுமட்டுமன்றி 2 மணி நேரம் தானே போராட்டமும் நடந்தது. முதலில் போராட்டம் எனச் சொல்வதை விட மெளன விரதம் எனச் சொல்லலாம். அன்றைய தினம் கிருஷ்ணகிரியில் திமுக தொண்டர் வீட்டு திருமண விழாவில் கலந்துகொள்ள வேண்டியிருப்பதால் போராட்டத்தில் கலந்துகொள்ளவில்லை. அங்கிருந்து அப்பாவுடன் முழுமையாக காவிரி மீட்பு பயணத்துக்குச் சென்றுவிட்டேன். எப்படியோ காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கான போராட்டத்தில்தானே இருந்திருக்கிறேன்.

உங்களுடைய ட்விட்டர் கருத்துக்கு எதிர்ப்பு அதிகரித் திருக்கிறதே...?

எதிர்ப்பு தெரிவிப்பவர்கள் தெரிவிக்கத்தான் செய்வார்கள். பட வெளியீட்டை நிறுத்தலாமே என்று நான் சொன்னவுடன் தயாரிப்பாளர் சங்கம் கேட்டுவிடுவார்களா என்ன?. நான் கூறியது என் தனிப்பட்ட அபிப்பிராயம். இந்த எதிர்ப்பு நான் எதிர்பார்த்ததுதான். இதையெல்லாம் மீறித்தான் தற்போதைய அரசியல் பயணம் இருக்கிறது. இவர்களுக்குப் பயந்து ஓடிவிட வேண்டுமா என்ன?

நீங்கள் ஐபிஎல் போட்டியை பார்த்தது போல புகைப்படம் வெளியானதே?

4 வருடங்களுக்கு முன்பு நான் ஐபிஎல் பார்த்த புகைப்படத்தை இப்போது வெளியிட்டுச் சிலர் திட்டியிருக்கிறார்கள். இதற்கு அதிமுக மற்றும் பாஜக கட்சியினர்தான் காரணம் என்று நினைக்கிறேன்.

ஐபிஎல் போட்டியில் சன்ரைசர்ஸ் அணி விளையாடுவதால் தான்...(கேள்வியை முடிக்கும் முன்பே)

முதலில் சன்ரைசர்ஸ் அணிக் கும் எனக்கும் என்ன சம்பந்தம்?. நான் என்ன அந்த அணியின் உரிமையாளரா அல்லது பங்குதாரரா?. இந்தக் கேள்வியை நீங்கள் சன் டிவியிடம்தான் கேட்க வேண்டும். அது அவர்களுடைய அணி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x