Published : 02 Jun 2024 09:49 AM
Last Updated : 02 Jun 2024 09:49 AM

விமான நிலையத்துக்கு நிலம் கையகப்படுத்துவதில் பத்திரப்பதிவு செய்யாமலேயே ரூ.10 கோடி விடுவிப்பு @ கோவை

கோப்புப்படம்

கோவை: கோவையில் சர்வதேச விமான நிலைய விரிவாக்கத்துக்கு நிலம் கையகப்படுத்துவதில், தனி நபர் நிலத்தை அரசின் பெயருக்கு பத்திரப்பதிவு செய்யாமல் ரூ.10 கோடியை விடுவித்த மாவட்ட வருவாய் அலுவலர் (நில எடுப்பு) மற்றும் வட்டாட்சியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

கோவை விமான நிலைய விரிவாக்கத்துக்குத் தேவையான 635.33 ஏக்கர் நிலம், சிங்காநல்லூர், உப்பிலிபாளையம், காளப்பட்டி, இருகூர், நீலாம்பூர் கிராமங்களில் அமைந்துள்ளன. இவற்றில் 461.90 ஏக்கர் நிலம் தனி நபர்களுக்குச் சொந்தமானது. நில எடுப்பு மாவட்ட வருவாய் அலுவலராக அனிதா, வட்டாட்சியராக பர்சானா ஆகியோர் பணியாற்றி வந்தனர்.

குடியிருப்பு நிலத்துக்கு சதுர அடிக்கு ரூ.1,500, விவசாய நிலத்துக்கு சதுர அடிக்கு ரூ.900 என நிர்ணயிக்கப்பட்டு, தொகை வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், நில உரிமையாளர்களில் ஒருவர் எனது நிலத்துக்கு அரசு நிர்ணயித்த தொகை குறைவாக உள்ளது. நிலத்துக்கான இழப்பீட்டுத் தொகையுடன் 100 சதவீத ஆறுதல் தொகையும், அதற்கான வட்டியும் வழங்க வேண்டும் என்று உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.

இந்த வழக்கில் நில உரிமையாளர் கோரும் இழப்பீட்டுத் தொகையை வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டது. எனினும், நீதிமன்ற உத்தரவின்படி தொகை வழங்கினால், அனைத்து நில உரிமையாளர்களுக்கும் கூடுதல் தொகை வழங்க வேண்டும் என்பதால், பணத்தை விடுவிக்காமல் நிறுத்தி வைக்கப்பட்டது.

இதற்கிடையே, நில உரிமையாளர், நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடர்ந்தார். இதைத் தொடர்ந்து அவசரகதியில் அரசு பெயருக்கு நில உரிமையை மாற்றி, பத்திரப்பதிவு செய்யாமல், உரிமையாளருக்கு ரூ.10 கோடி விடுவிக்கப்பட்டது. இந்த விவகாரம் வெளியே தெரிந்த நிலையில், வட்டாட்சியர் பர்சானாவை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி உத்தரவிட்டார்.

மேலும், விமான நிலைய விரிவாக்கத்துக்கான நிலம் எடுப்பு மாவட்ட வருவாய் அலுவலர் அனிதா மீதான குற்றச்சாட்டும் அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டு, விசாரணை நடத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து அரசாணை வெளியிடப்பட்டு, மாவட்ட வருவாய் அலுவலர் அனிதா பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x