Published : 01 Jun 2024 06:39 PM
Last Updated : 01 Jun 2024 06:39 PM
புதுச்சேரி: புதுச்சேரி மாநிலத்தில் போலி மதுபானங்கள் விற்பனை செய்யப்படுவது தொடர்பாக முதல்வர் உடனடியாக ஐஏஎஸ் அதிகாரி தலைமையில் நீதி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று அதிமுக வலியுறுத்திள்ளது.
இதுகுறித்து புதுச்சேரி மாநில அதிமுக செயலாளர் அன்பழகன் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: ‘புதுச்சேரியில், ஆங்கங்கே சட்டம் ஒழுங்கு சீர்குலைவு ஏற்படும் வகையில் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் விற்பனை செய்யும் மாநிலமாகவும், போலி மதுபானம் தயாரிக்கும் பிராந்தியமாகவும் இருந்து வருகிறது. இதனால் புதுச்சேரி மாநிலத்தினுடைய பொருளாதாரம் பெரிய அளவில் பாதிக்கக்கூடிய நிலை ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் திமுக ஆட்சி அமைந்ததிலிருந்து, தமிழகத்தைச் சேர்ந்த பல முக்கிய பிரமுகர்கள் புதுச்சேரியில் உள்ள அரசியல் பிரமுகர்களுடன் கைகோத்துக் கொண்டு போலி மதுபான தயாரிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள். புதுச்சேரியில் இருந்து போலி மதுபானம் தயாரிக்கப்பட்டு தினசரி தமிழகப் பகுதியான விழுப்புரம், மரக்காணம், திண்டிவனம், கடலூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை உள்ளிட்ட பகுதிகளுக்கு கடத்தப்படுகிறது.
இந்நிலையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு உளுந்தூர்பேட்டையில் புதுச்சேரியில் இருந்து கடத்தப்பட்ட போலி மதுபானங்களை தமிழக காவல் துறையினர் பறிமுதல் செய்து 5-க்கும் மேற்பட்டோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அந்த போலி மதுபானம் தயாரித்த இடத்தில் ஆய்வு செய்தபோது, இரண்டு வேன்களில் போலி சாராயம், போலி மதுபானம் தயாரிப்பதற்கான பல்வேறு இயந்திரங்களும், ஸ்டிக்கர்களும், தமிழக டாஸ்மாக் கடையில் விற்பனை செய்யப்படுகிற பல்வேறு பிராண்டு சரக்குகளின் லேபில்களும் இருந்தன. சுமார் ரூ.30 லட்சம் மதிப்புள்ள பொருட்களை போலீஸார் பறிமுதல் செய்தனர்.
புதுச்சேரியில் தொழிற்சாலை அமைத்து போலி மதுபானம் தயாரித்த 5 நபர்களை தமிழக காவல் துறையினர் கைது செய்துள்ளனர். ஆனால் ஒரு தொழிற்சாலை அமைத்து போலி மதுபானம் தயாரிக்கப்படுவதை இங்குள்ள காவல் துறை மற்றும் கலால்துறையினர் ஏன்? கண்டுபிடிக்கவில்லை. புதுச்சேரி மாநிலம் முழுவதும் நூற்றுக்கணக்கான இடங்களில் போலி மதுபானங்கள் தயாரித்து புதுச்சேரியில் விற்பனை செய்வதோடு, தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளுக்கும் அனுப்புகின்றனர்.
இப்படி தயாரிக்கப்படும் போலி மதுபானங்கள் மூலம் அரசு ஒரு ரூபாய் கூட கலால் வரியோ, விற்பனை வரியோ பெறுவது இல்லை. இதனால் புதுச்சேரி மாநிலத்துக்கு வரவேண்டிய வருவாய் மிகப்பெரிய அளவில் போலி மதுபானம் தயாரித்து விற்பனை செய்பவர்களுக்கு சென்று கொண்டுள்ளது. நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த திமுக முக்கிய பிரமுகர் இந்த விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
போலி மதுபான தயாரிப்பில் அரசியல் பின்னணி அதிகம் உள்ளது. இங்குள்ள கலால்துறை எந்தவிதமான குற்றங்கள் நடந்தாலும் அதைப்பற்றி ஆராய்வதே கிடையாது. அந்த வாகனத்தையும், அதனை ஓட்டி வந்த டிரைவரை மட்டும், வழக்கில் குற்றவாளியாக சேர்க்கின்றனர். புதுச்சேரி மாநிலத்திலும் போலி மதுபானங்கள் பல்வேறு இடங்களில் விற்பனை செய்யப்படுகிறது. அதனை உணர்ந்து, உடனடியாக முதல்வர், ஐஏஎஸ் அதிகாரி தலைமையில் நீதி விசாரணைக்கு உட்படுத்த வேண்டும்.
மேலும் முதல்வரும், துணைநிலை ஆளுநரும் தங்கள் அதிகாரத்தை பயன்படுத்தி உடனடியாக நீதி விசாரணைக்கு உட்படுத்தி இந்த போலி மதுபான கடத்தல், தயாரித்தல், கஞ்சா விற்பனை போன்ற விவகாரத்தில் ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’, என்று அவர் கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT