Published : 01 Jun 2024 02:59 PM
Last Updated : 01 Jun 2024 02:59 PM
சென்னை: தபால் வாக்குகளை இறுதிச்சுற்று முடிந்த பிறகுதான் எண்ண வேண்டும் என்று உத்தரவிட்டிருப்பதற்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கு.செல்வப்பெருந்தகை கண்டனம் தெரிவித்துள்ளார்.
சென்னையில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கு.செல்வப்பெருந்தகை இன்று (ஜூன் 1) செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: “மக்களவைத் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும்போது தபால் வாக்குகளை கடைசியாகத்தான் எண்ண வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளனர். கடந்த 2021-ல் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும்போது முதலில் தபால் வாக்குகளை எண்ணி முடித்து, அதை அறிவித்த பிறகுதான் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டன.
இப்போது மோடியின் ஆட்சியில் தேர்தல் ஆணையம் அவர்களது கைப்பாவையாக இருந்து கொண்டு தபால் வாக்குகளை கடைசி சுற்று முடிந்த பிறகுதான் எண்ண வேண்டும் என்று முடிவெடுத்திருப்பதாக செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. இதை வன்மையாக கண்டிக்கிறோம். இது தேசத்துக்கு விரோதமான செயலாகும். ஏற்கெனவே சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு போட்டியிட்ட தொகுதியின் தேர்தல் முடிவு என்ன ஆனது என்று அனைவருக்கும் தெரியும்.
அதுபோல இந்தியா முழுவதும் 10 ஆயிரம் அல்லது 20 ஆயிரம் வாக்குகள் எங்கெல்லாம் வித்தியாசம் இருக்கிறதோ, அதை மாற்றி அறிவிப்பதற்கான திட்டத்தை பாஜக முன்னெடுத்துள்ளது. இதையாவது தேர்தல் ஆணையம் தடுத்து, விழிப்புடன் செயல்பட்டு மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தை நிலை நிறுத்த வேண்டும்.
பட்டினத்தார், பாம்பன் சுவாமிகள் தியானத்தைப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறோம். அந்த மகான்கள் மக்கள் நலனுக்காகவும், நாட்டின் நலனுக்காகவும் தியானம் செய்தனர். அனைவரும் மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்பதே தியானத்தின் பொருள். தியானத்தை அரசியலுக்காக பயன்படுத்தியதாக வரலாறே இல்லை.
ஆனால், பிரதமர் மோடி போட்டியிடும் தொகுதியான வாராணசியில் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இந்த நேரத்தில் கன்னியாகுமரியில் மோடி தியானம் செய்கிறார். இது தவறு என்று தேர்தல் ஆணையத்திடம் தெரிவித்தோம். ஆனால், தேர்தல் ஆணையம் கண்ணை மூடிக்கொண்டு வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது. இது மவுன விரதம்தானே, இதில் தவறு இல்லை. இது, மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின்கீழ் வரவில்லை என்கிறது தேர்தல் ஆணையம்,” என்று அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment