Published : 01 Jun 2024 02:36 PM
Last Updated : 01 Jun 2024 02:36 PM
கோவை: டயர் பஞ்சர் ஆனதால் கோவையிலிருந்து ஷார்ஜா செல்லும் விமானம் புறப்படுவது 14 மணி நேரம் தாமதம் ஆகியிருக்கிறது. இந்நிலையில், பஞ்சரான டயருக்கு பதில் புதிய டயர் பொருத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
கோவை பீளமேட்டில் சர்வதேச விமான நிலையம் உள்ளது. இங்கிருந்து வெளிநாடுகளுக்கும், உள்நாட்டின் முக்கிய நகரங்களுக்கும் விமானங்கள் இயக்கப்படுகின்றன. தினமும் ஏராளமான பயணிகள் வந்து செல்கின்றனர்.
இந்நிலையில், கோவை விமான நிலையத்தில் இருந்து இன்று (ஜூன் 1) அதிகாலை 4.15 மணிக்கு ஷார்ஜா செல்லக்கூடிய ஏர் அரேபியா விமானம் புறப்படத் தயாராக இருந்தது. அதில் 145 பயணிகள் இருந்தனர். அந்த விமானம் ஓடுதளப் பாதைக்கு வந்து, புறப்படுவதற்கு சற்று முன்னதாக விமானத்தின் முன்பக்க டயர் பஞ்சர் ஆகியிருந்ததை விமான நிலைய ஊழியர்கள் கண்டறிந்தனர்.
இதையடுத்து, அந்த விமானம் புறப்பாடு ஒதுக்கி வைக்கப்பட்டது. தொடர்ந்து அதிலிருந்த பயணிகள் கீழே இறக்கப்பட்டனர். அவர்கள், அருகேயுள்ள நட்சத்திர ஹோட்டல்களில் தங்க வைக்கப்பட்டனர்.
பஞ்சரான டயருக்கு பதில் புதிய டயர் பொருத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தப் பணிகள் முடிந்த பிறகு, இன்று மாலை 6 மணிக்கு இந்த விமானம் புறப்படும் என பயணிகளுக்கு விமான நிலைய அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT