Last Updated : 01 Jun, 2024 01:27 PM

 

Published : 01 Jun 2024 01:27 PM
Last Updated : 01 Jun 2024 01:27 PM

சென்னையில் தாய்ப்பால் விற்பனையை கண்காணிக்க 18 குழுக்கள்: உணவு பாதுகாப்புத் துறை தகவல்

சென்னை மாதவரத்தில் சட்டவிரோதமாக தாய்ப்பால் விற்பனை செய்த தனியார் புரோட்டீன் மருந்து விற்பனை கடையில், உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் திடீர் சோதனை மேற்கொண்டு, கடைக்கு சீல் வைத்தனர். | கோப்புப்படம்

சென்னை: சென்னையில் தாய்ப்பால் விற்பனையை கண்காணிக்க 18 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், மாநிலம் முழுவதும் கண்காணிப்பை தீவிரபடுத்தவும் உணவு பாதுகாப்புத் துறை முடிவெடுத்துள்ளது.

சென்னை மாதவரம் பகுதியில் தாய்ப்பாலை சட்டவிரோதமாக பாட்டிலில் அடைத்து விற்பனை செய்து வந்த தனியார் புரோட்டீன் மருந்து விற்பனை கடைக்கு உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் நேற்று சீல் வைத்தனர். விசாரணையில் புரோட்டீன் பவுடர் விற்பதற்காக வழங்கப்பட்ட உரிமத்தை வைத்து தாய்ப்பால் பாட்டிலில் அடைத்து விற்பனை செய்தது தெரியவந்தது.

இந்நிலையில், மாநிலம் முழுவதும் அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களின் தகவலின் அடிப்படையில் தாய்ப்பால் விற்பனை மையங்களை தீவிரமாக கண்காணித்து நடவடிக்கை எடுக்க உணவு பாதுகாப்புத் துறை சார்பில் அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

தாய்ப்பால் விற்பனை செய்வது சட்டப்படி குற்றம் என்பதால், வேறு பொருட்கள் விற்பனை செய்வதாகக் கூறி தாய்ப்பால் விற்பனை செய்பவர்களின் உரிமங்களை ரத்து செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

இதையொட்டி சென்னை முழுவதும் தாய்ப்பால் விற்பனையை கண்காணித்து நடவடிக்கை எடுக்க 18 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. சென்னை மாவட்டத்தை பொறுத்தவரை தாய்ப்பால் விற்பனை செய்யப்படுவது தெரிந்தால் பொதுமக்கள் 94440 42322 என்ற அலைபேசி எண்ணுக்கு புகார் தெரிவிக்கலாம் என உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x