Published : 01 Jun 2024 12:31 PM
Last Updated : 01 Jun 2024 12:31 PM

“தமிழகத்தில் வரலாற்று திருப்புமுனை வெற்றியை பாஜக பெறும்” - மத்திய அமைச்சர் எல்.முருகன்

மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் | கோப்புப்படம்

தூத்துக்குடி: “மக்களவைத் தேர்தலில் பிரதமர் மோடிக்கு மக்கள் மத்தியில் ஆதரவு அலை வீசுகிறது,” என மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கூறியுள்ளார். மேலும், தமிழகத்திலும் யாரும் எதிர்பாராத அளவில் வரலாற்று திருப்புமுனை வெற்றியை பாஜக பெறும் என்றும் அவர் கூறியுள்ளார்.

திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயிலில் தரிசனம் செய்வதற்காக சனிக்கிழமை காலை மத்திய அமைச்சர் எல்.முருகன் விமானம் மூலம் தூத்துக்குடி வந்தார். தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “மக்களவை தேர்தலில் பாஜகவுக்கும், பிரதமர் மோடிக்கும் மிகப்பெரிய ஆதரவு அலை வீசுகிறது. 400-க்கும் மேற்பட்ட இடங்களில் பாஜக வெற்றி பெற்று பிரதமர் மோடி 3-வது முறையாக பிரதமராவது உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேட்டுப்பாளையத்தில் காங்கிரஸ் நகர்மன்ற உறுப்பினரால் தாக்கப்பட்ட இளைஞர் மருத்துவமனையில் இருக்கிறார். ஆனால், நகர்மன்ற உறுப்பினர் இதுவரை கைது செய்யப்படவில்லை. இதற்கு மாறாக அந்த இளைஞர் மீதும் அவரது தாய் மீதும் வழக்குப் செய்யப்பட்டுள்ளது.

இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. காவல்துறை சீர்கெட்டு உள்ளது. குற்றவாளிகளை பாதுகாப்பது தமிழக காவல் துறைக்கு அழகல்ல. சமூக வலைதளங்களில் ஏதாவது வெளியிட்டால் அதிகாலை 2 மணிக்கு கைது செய்யும் காவல்துறை, இளைஞர் தாக்கப்பட்ட சம்பவத்தில் தொடர்புடையவர்களை இன்னும் கைது செய்யாததைப் பார்க்கும் போது ஸ்டாலின் முதல்வராக இருக்கிறாரா? இல்லையா? என்று சந்தேகமாக உள்ளது.

விவேகானந்தர் தியானம் செய்த குமரி முனையில் பிரதமர் தியானம் செய்து கொண்டிருக்கிறார். 2014-ல் இந்தியா பொருளாதாரத்தில் 10-வது இடத்தில் இருந்தது. இந்த 10 ஆண்டுகளில் இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளை பின்னுக்குத் தள்ளி 5-வது இடத்துக்கு பொருளாதாரத்தில் முன்னேறி உள்ளோம். 2027-ம் ஆண்டுக்குள் 3-வது இடத்தை அடைவோம் என்பது பிரதமர் மோடி மக்களுக்கு கொடுத்த கேரண்டி. அதை நிறைவேற்றும் விதமாக தமிழகத்திலும் யாரும் எதிர்பாராத அளவில் வரலாற்று திருப்புமுனை வெற்றியை பாஜக பெறும்” என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x