Published : 01 Jun 2024 12:19 PM
Last Updated : 01 Jun 2024 12:19 PM

கோடையில் தேர்தல் நடத்தக் கூடாது; வாக்கு எண்ணும் மையங்களில் கூடுதல் மின்விசிறிகள் தேவை - ராமதாஸ்

வாக்களிக்கும் மக்கள் | கோப்புப் படம்

சென்னை: வாக்கு எண்ணும் மையங்களில் காற்றோட்டமும், இதமான சூழலும் இல்லாவிட்டால் பணியாளர்களாலும், முகவர்களாலும் சரியாக பணி செய்ய முடியாது. இதைக் கருத்தில் கொண்டு வாக்கு எண்ணும் மையங்களில் போதிய மின்விசிறிகளை அமைக்கவும், அனைத்து முகவர்களும் அமருவதற்கு இருக்கைகளை அமைக்கவும் தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “இந்தியாவில் மக்களவைத் தேர்தலில் இறுதி கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெற்று வரும் நிலையில், அதற்கான ஆயத்த பணிகளில் ஈடுபட்டிருந்த 25 பணியாளர்கள் உள்ளிட்ட 61 பேர் நேற்று ஒரே நாளில் உயிரிழந்திருப்பது அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கிறது.

மக்களவைத் தேர்தலில் முறையான திட்டமிடல்கள் இருந்திருந்தால் இந்த உயிரிழப்புகளை தவிர்த்திருக்க முடியும். உயிரிழந்த அனைவரின் குடும்பங்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். வெப்பவாத பாதிப்பால் உத்தர பிரதேசத்தில் நேற்று உயிரிழந்த 17 பேரில் 15 பேரும், பிஹாரில் உயிரிழந்த 14 பேரில் 10 பேரும் தேர்தல் பணிகளில் ஈடுபட்டிருந்தவர்கள் ஆவர்.

இவர்களில் பெரும்பான்மையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவலர்கள் ஆவர். ஒடிசா, ஹரியாணாவிலும் கணிசமான எண்ணிக்கையில் வெப்பவாதத்தால் பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர். தாங்கிக் கொள்ள முடியாத அளவுக்கு வெப்ப அலைகள் வீசிய நேரத்தில் வெளியில் நடமாடியதால் நீரிழப்பு ஏற்பட்டு அவர்கள் மயங்கி விழுந்து உயிரிழந்தாகக் கூறப்படுகிறது.

கடுமையான வெப்ப அலை வீசிய நேற்று தேர்தல் பரப்புரை இருந்திருந்தால் உயிரிழப்புகள் இன்னும் அதிகமாக இருந்திருக்கும் என்று வல்லுநர்கள் கூறியுள்ளனர். ராஜஸ்தான் போன்ற மாநிலங்களில் வெப்ப அலைகள் உருவாவதற்கு முன்னதாகவே தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டதால், இத்தகைய உயிரிழப்புகள் பெருமளவில் தடுக்கப்பட்டு விட்டதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

வெப்ப அலையால் வெப்பவாத உயிரிழப்புகள் அதிகரித்ததற்கு மக்களவைத் தேர்தல்கள் இந்த நேரத்தில் நடத்தப்பட்டதும் ஒரு முதன்மைக் காரணம் என்பதை மறுக்க முடியாது. பொதுவாகவே தேர்தல்கள் எனப்படுபவை மக்களைச் சந்திப்பதையும், களத்தில் பணியாற்றுவதையும் அடிப்படையாகக் கொண்டவை. தாங்க முடியாத வெப்ப அலை வீசும் காலத்தில் தேர்தல்களை நடத்துவது அனைத்துத் தரப்பினரையும் கடுமையாக பாதிக்கும்.

எனவே, இனிவரும் காலங்களில் கோடைக்காலங்களில் தேர்தல்களை நடத்துவதை தேர்தல் ஆணையம் தவிர்க்க வேண்டும். கடுமையான வெயிலோ, மழையோ இல்லாமல் இதமான சூழல் நிலவும் ஜனவரி, பிப்ரவரி மாதங்களிலோ, ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களிலோ தேர்தலை நடத்த ஆணையம் திட்டமிட வேண்டும்.

தமிழ்நாட்டிலும் கடுமையான வெப்பம் வாட்டி வரும் வேளையில் தான் வரும் 4-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது. ஆனால், வாக்கு எண்ணும் மையங்களில் போதிய எண்ணிக்கையில் மின்விசிறிகள் அமைக்கப்படவில்லை. ஒவ்வொரு சட்டப்பேரவைத் தொகுதியிலும் பதிவான வாக்குகளை எண்ண குறைந்தபட்சம் 14 மேசைகள் அமைக்கப்பட்டுள்ள நிலையில், அங்கு 7 மின்விசிறிகள் மட்டுமே அமைக்கப்பட்டுள்ளன.

ஒவ்வொரு தொகுதியிலும் 30 வேட்பாளர்கள் போட்டியிடுவதாக வைத்துக் கொண்டால், பேரவைத் தொகுதிவாரியாக வாக்கு எண்ணிக்கை நடைபெறும் 14 மேசைகளில் 420 முகவர்களும், 30க்கும் மேற்பட்ட பணியாளர்களும் இருப்பார்கள். அவர்களுக்கு 7 மின்விசிறிகள் போதுமானவை அல்ல.

வாக்கு எண்ணும் மையங்களில் காற்றோட்டமும், இதமான சூழலும் இல்லாவிட்டால் பணியாளர்களாலும், முகவர்களாலும் சரியாக பணி செய்ய முடியாது. இதைக் கருத்தில் கொண்டு வாக்கு எண்ணும் மையங்களில் போதிய மின்விசிறிகளை அமைக்கவும், அனைத்து முகவர்களும் அமருவதற்கு இருக்கைகளை அமைக்கவும் தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Loading comments...

 
x