Published : 01 Jun 2024 10:25 AM
Last Updated : 01 Jun 2024 10:25 AM
திருவண்ணாமலை: கன்னியாகுமரியில் பிரதமர் மோடி தியானம் செய்வதில் எதிர்க்கட்சிகள் விஷமத்தனமான அரசியல் செய்கின்றன என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை குற்றஞ்சாட்டினார்.
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இன்று( ஜூன் 1-ம் தேதி) காலை சுவாமி தரிசனம் செய்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தனிப்பட்ட நிகழ்வு காரணமாக கன்னியாகுமரியில் பிரதமர் மோடி தியானம் மேற்கொண்டுள்ளார். அவரை வரவேற்க ஒரு பாஜக தொண்டர் கூட செல்லவில்லை. விவேகானந்தர் பாறை என்பது விவேகானந்த கேந்திராவின் சொத்தாகும். இது தனியார் சொத்து. மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இதற்கு அரசு மற்றும் தேர்தல் ஆணையத்தின் அனுமதி தேவையில்லை. பிரதமர் மோடி தியானம் செய்து வரும் நிலையில், விவேகானந்தர் பாறையை மக்களும் பார்வையிட்டு வருகின்றனர். இதில் எதிர்க்கட்சிகள் விஷமத்தனமான அரசியல் செய்கின்றன.
இந்தியாவில் 543 மக்களவைத் தொகுதிகளிலும் தங்கள் பிரதிநிதிகளை மக்கள் இன்றுடன் தேர்வு செய்து முடிக்கின்றனர். தமிழக மக்கள் நன்றாக இருக்க வேண்டும், பிரதமர் மோடி மூன்றாவது முறையாக ஆட்சிக் கட்டிலில் அமர வேண்டுமென அண்ணாமலையாரிடம் வேண்டிக் கொண்டுள்ளேன். வேண்டுதலை சிவபெருமான் நிறைவேற்றுவார் என்ற நம்பிக்கை உள்ளது.
கூடுதல் எஸ் பி வெள்ளதுரை சஸ்பெண்ட் செய்யப்பட்டு, பின்னர் சஸ்பெண்ட் உத்தரவு ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் நீதிமன்றம் தலையிட்டு உள்ளதால் பொறுத்திருந்து பார்ப்போம். காவல்துறை அதிகாரிகள், அரசு அதிகாரிகளை ஓய்வு பெறும் நாளில் சஸ்பெண்ட் செய்வது என்பது அரசியல் காழ்ப்புணர்ச்சி செயல் ஆகும்.
இண்டியா கூட்டணி கூட்டம் டெல்லியில் இன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இக்கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் கலந்து கொள்ளவில்லை. அனைத்து கட்சிகளின் இரண்டாம் கட்ட தலைவர்கள் மட்டுமே பங்கேற்கின்றனர்.
வாக்குப்பதிவுக்கு பிறகு வெளியிடப்படும் கருத்துக்கணிப்பில் தங்கள் கட்சியின் செய்தி தொடர்பாளர்கள் பங்கேற்கப் போவதில்லை என காங்கிரஸ் தெரிவித்துள்ளது. இது காங்கிரஸ் தனது தோல்வியை ஒப்புக் கொண்டதாகவே கருதப்படும்.
தேர்தல் நடைபெறும் வரை தான் இண்டியா கூட்டணி கட்சிகளின் நாடகங்கள் நடக்கும். நாங்கள் வெற்றி பெறுவோம் என கூறி வந்தனர். ஆனால் ஏழுகட்ட தேர்தல் முடிந்த பிறகு, மோடி மூன்றாவது முறையாக பிரதமர் பதவி ஏற்பார் என அவர்களுக்கு தெரிந்து விட்டது. இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT