Published : 01 Jun 2024 06:53 AM
Last Updated : 01 Jun 2024 06:53 AM

என்கவுன்ட்டர் ஸ்பெஷலிஸ்ட் வெள்ளதுரை சஸ்பெண்ட் உத்தரவு திடீர் ரத்து

வெள்ளதுரை

மதுரை/சென்னை: என்கவுன்ட்டர் ஸ்பெஷலிஸ்ட் எனஅழைக்கப்படும் கூடுதல் எஸ்.பி.வெள்ளதுரை பணி ஓய்வு பெறுவதற்கு ஒரு நாளுக்கு முன்னதாகவே சஸ்பெண்ட் செய்யப்பட்டதும், திடீரென அவரது சஸ்பெண்ட் உத்தரவை உள்துறைச் செயலர் ரத்து செய்துள்ளதும் காவல் துறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் வல்லநாட்டைச் சேர்ந்த வெள்ளதுரை 1997-ல் உதவி ஆய்வாளராகத் தேர்வாகி, புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் காவல் நிலையத்தில் பணியைத் தொடங்கினார்.

2 பதவி உயர்வு... 1998-ல் திருச்சி பாலக்கரை எஸ்.ஐ.யாகப் பணியாற்றியபோது, ரவுடி கோசி.ஜானை `என்கவுன்டர்' செய்தார். 2003-ல் சென்னை அயோத்திக்குப்பத்தைச் சேர்ந்த பிரபல ரவுடி வீரமணியை `என்கவுன்டர்' செய்தார். 2004-ல் சந்தனக் கடத்தல் வீரப்பனை பிடிக்கும் அதிரடிப்படைக் குழுவில் வெள்ளதுரை இடம் பெற்றார். வீரப்பன் சுட்டுக்கொல்லப்பட்டதையடுத்து இவருக்கு 2 பதவி உயர்வு வழங்கப்பட்டு, டிஎஸ்பியாக பதவியேற்றார்.

மதுரையில் வழிப்பறி, திருட்டில் தொடர்புடைய கவியரசு, முருகன் ஆகியோரை வெள்ளதுரை தலைமையிலான போலீஸார் பிடிக்க முயன்றபோது, எதிர்தாக்குதல் நடத்தி, ஆயுதங்களுடன் தப்ப முயன்றனர். எனினும் இருவரும் `என்கவுன்டர்' செய்யப்பட்டனர். 2012-ல் மதுரையில் உதவி ஆணையராகப் பணிபுரிந்தபோது வரிச்சியூர் செல்வம் போன்ற ரவுடிகளை ஓடுக்கினார்.

திருப்பாச்சேத்தி ஆவரங்காடு பகுதியைச் சேர்ந்த ரவுடி கொக்கிகுமாரை (26) போலீஸார் தாக்கிக் கொன்றதாக சர்ச்சை எழுந்தது. அப்போது மானாமதுரை டிஎஸ்பியாக வெள்ளதுரை பணிபுரிந்தார். இந்த விவகாரம் நீதிமன்றம் வரைசென்ற நிலையில், பிறகு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. வழக்கை முடித்துவைக்கும் நோக்கில், 2023-ல் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டதாகவும் சர்ச்சை எழுந்தது.

இதுதவிர, அயோத்தியாகுப்பம் வீரமணி `என்கவுன்டர்' விவகாரத்தில், மெரினா காவல் நிலையஆய்வாளராக இருந்த லாய்டு சந்திராவிடம் உள்துறை விசாரிக்கஉள்ளதாகவும் தகவல் வெளியானது. வெள்ளதுரை பணியில் இருந்த காலத்தில் 12-க்கும் மேற்பட்ட என்கவுன்டர்கள் தொடர்பாக சர்ச்சைகள் எழுந்தன.

கூடுதல் எஸ்.பி.யாக பதவி உயர்வு பெற்ற வெள்ளதுரை, ராமநாதபுரம் மதுவிலக்கு பிரிவில் 2 ஆண்டுகள் பணியாற்றினார். காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் கட்டப் பஞ்சாயத்து, மாமூல் வசூலை தடுக்கவும், ரவுடிகளை ஒடுக்கவும் ரவுடிகள் ஒழிப்பு சிறப்புப் படை கூடுதல் எஸ்.பி.யாக 2022-ல் நியமிக்கப்பட்ட அவர், கடைசியாக திருவண்ணாமலை மாவட்ட காவல் துறை குற்றப் பதிவேடு பிரிவில் பணியாற்றினார்.

வெள்ளதுரை நேற்று (மே 31)பணி ஓய்வு பெறவிருந்தார். இந்நிலையில், அவர் தற்காலிகப்பணிநீக்கம் செய்யப்படுவதாக, உள்துறைச் செயலர் அமுதா உத்தரவு பிறப்பித்து இருந்தார். சிபிசிஐடி வழக்கு தொடர்பாக அவர்தற்காலிகப் பணிநீக்கம் செய்யப்பட்டதாக காவல் துறை தரப்பில் கூறப்பட்டது. இது தமிழக காவல்துறையில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இரவில் உத்தரவு ரத்து: இதற்கிடையில், கூடுதல் எஸ்.பி. வெள்ளதுரையின் பணியிடை நீக்கத்தை ரத்து செய்து உள்துறைச் செயலர் அமுதா நேற்று இரவு உத்தரவிட்டார். இதையடுத்து, வெள்ளதுரை முறைப்படி பணி ஓய்வுபெற்றார்.

- என்.சன்னாசி / இ.ராமகிருஷ்ணன்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x