Published : 01 Jun 2024 05:35 AM
Last Updated : 01 Jun 2024 05:35 AM

சென்னை | 448 மாநகர பேருந்துகளில் தானியங்கி கதவுகள் பொருத்தம்

சென்னை: தானியங்கி கதவுகள் இல்லாத 448 பேருந்துகளில் கதவுகள் பொருத்தப்பட்டுள்ளதாக மாநகர போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது. மாநகர போக்குவரத்துக் கழகம் சார்பில் 600-க்கும் மேற்பட்ட வழித்தடங்களில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்படுகின்றன. ஒவ்வொரு பேருந்தும் நாள்தோறும் 265 முதல் 270 கிமீ பயணிக்கின்றன. இவற்றில் நாள்தோறும் சுமார் 30 லட்சம் பேர் பயணித்து வருகின்றனர்.

குறிப்பாக காலை, மாலை நேரங்களில் கூட்டம் அதிகமாக இருக்கும்போது மாணவர்கள் உள்ளிட்டோர் ஆபத்தான முறையில் படிக்கட்டில் நின்றவாறு பயணம் செய்கின்றனர். இதைத் தடுக்கும் வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்துதல், போக்குவரத்து காவலர்கள் உள்ளிட்டோர் மூலம் எச்சரிக்கை செய்தல் போன்ற பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

படிக்கட்டில் ஆபத்தான முறையில் பயணம் செய்தால், அருகிலுள்ள காவல்நிலையத்தில் புகாரளிக்க வேண்டும் என நடத்துநர்களுக்கு அறிவுறுத்தலும் வழங்கப்பட்டது. எனினும், படிக்கட்டு பயணத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியவில்லை.

எனவே, படிக்கட்டு பயணத்தை முழுமையாகத் தடுக்கும் வகையில் கதவுகள் இல்லா பேருந்துகளில் தானியங்கி கதவுகளைப் பொருத்த மாநகர போக்குவரத்துக் கழகம் முடிவு செய்தது.

இதன் தொடர்ச்சியாக இதுவரை 448 பேருந்துகளில் தானியங்கி கதவு பொருத்தப்பட்டுள்ளதாக நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மாநகர போக்குவரத்துக் கழகத்தின் அதிகாரப்பூர்வ எக்ஸ் வலைதள பக்கத்தில் நேற்றுவெளியிடப்பட்ட பதிவில் கூறியிருப்பதாவது:

பாதுகாப்பான பயண அனுபவம்: பயணிகளின் பாதுகாப்பு கருதி மாநகர போக்குவரத்துக் கழகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக மாநகர பேருந்துகளில் தானியங்கி கதவுகள் பொருத்தப்பட்டு வருகின்றன. மொத்தம் 468 பேருந்துகளில் கதவுகள் இல்லை எனக் கண்டறியப்பட்டது.

இதையடுத்து முதல்கட்டமாக 200 பேருந்துகளிலும், இரண்டாவது கட்டமாக 248 பேருந்துகளிலும் தானியங்கி கதவுகள் பொருத்தப்பட்டுள்ளன. எங்களது பயணிகளுக்குப் பாதுகாப்பான பயண அனுபவத்தை வழங்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறோம். இதுபோன்ற மேம்பாட்டுப் பணிகளுக்கு முன்னுரிமை கொடுத்து தொடர்ந்து மேற்கொள்வோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x