Published : 01 Jun 2024 06:04 AM
Last Updated : 01 Jun 2024 06:04 AM
சென்னை: ஓடும் ரயிலில் ரூ.4 கோடி பறிமுதல்செய்யப்பட்ட விவகாரம் தொடர்பானசிபிசிஐடி போலீஸாரின் விசாரணைக்கு, சம்மன் அனுப்பப்பட்ட நயினார் நாகேந்திரன் உட்பட 4 பேர் நேற்று நேரில் ஆஜராகவில்லை.
தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் நடத்தை விதிகள் தீவிரமாக அமலில் இருந்தபோது, தாம்பரம்ரயில் நிலையத்தில் நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில் உரிய ஆவணங்கள் இல்லாமல் ரூ.4 கோடி பணத்துடன் 3 பேர் பிடிபட்டனர்.
அவர்கள், தமிழக பாஜக சட்டப்பேரவை கட்சித் தலைவரும், மக்களவைத் தேர்தலில் நெல்லை தொகுதியில் போட்டியிட்ட நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமான சென்னை ஓட்டலில் பணியாற்றும் ஊழியர்கள் என்பதும், இந்தபணத்தை நயினார் நாகேந்திரனுக்கு எடுத்து சென்றதும் தெரியவந்தது. ஆனால் இதை நயினார் நாகேந்திரன் மறுத்திருந்தார்.
இந்நிலையில் பணம் பறிமுதல்செய்யப்பட்ட வழக்கு சிபிசிஐடிபோலீஸார் வசம் ஒப்படைக்கப்பட்டது. ரயிலில் பணத்துடன் சிக்கியவர்களுக்கு சிபிசிஐடி போலீஸார் சம்மன் அனுப்பி விசாரணை நடத்திவாக்குமூலம் பெற்றனர். மேலும், இந்த வழக்கு தொடர்பாக விசாரணைக்கு ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு நயினார் நாகேந்திரனுக்கும் சம்மன் அனுப்பப்பட்டது.
ஆனால் அவர் விசாரணைக்கு ஆஜராகாமல் அவகாசம் கேட்டார்.இதற்கிடையே இந்த வழக்கு தொடர்பாக தமிழக பாஜக பொருளாளர் சேகரிடம் சிபிசிஐடி போலீஸார் விசாரணை நடத்தியுள்ளனர்.
இந்நிலையில் மே 31-ம் தேதி (நேற்று) விசாரணைக்கு ஆஜராகுமாறு நயினார் நாகேந்திரன், தமிழக பாஜக அமைப்பு செயலாளர் கேசவ விநாயகன், தொழில் பிரிவு மாநில தலைவர் கோவர்தன், நயினார் நாகேந்திரனின் உதவியாளர் மணிகண்டன் ஆகியோருக்கு சிபிசிஐடி போலீஸார் சம்மன் அனுப்பி இருந்தனர்.
ஆனால், அவர்கள் 4 பேரும்நேற்று விசாரணைக்கு ஆஜராகவில்லை. மக்களவை தேர்தல் முடிவுக்கு பின்னர் ஆஜராகுவதாக அவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த வழக்கு தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT