Published : 31 May 2024 06:06 PM
Last Updated : 31 May 2024 06:06 PM
நாகர்கோவில்: கன்னியாகுமரி விவேகானந்தர் பாறையில் பிரதமர் மோடி வெள்ளிக்கிழமை 2-வது நாள் துறவி கோலத்தில் தியானத்தில் ஈடுபட்டார். அவர் காவி உடையுடன் ருத்ராட்ச மாலையை ஏந்தியவாறு சூரிய வழிபாடு, கங்கா வழிபாட்டில் ஈடுபட்டார்.
இந்தியாவின் கடைக்கோடியில் அமைந்துள்ள கன்னியாகுமரி விவேகானந்தர் பாறையில் பிரதமர் நரேந்திர மோடி வியாழக்கிழமை இரவு தியானத்தை துவக்கினார். சனிக்கிழமை மாலை வரை அவர் 3 நாள் தொடர் தியானம் மேற்கொள்கிறார். சுவாமி விவேகானந்தர் இதே பாறையில் 132 ஆண்டுகளுக்கு முன்பு 3 நாள் தவம் இருந்த நிலையில், பிரதமரின் தியான நிகழ்வு முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
முதல் நாளான வியாழக்கிழமை பகவதியம்மன் கோயிலுக்குச் சென்று பகவதியம்மனை வழிபட்ட, பின்னர் கடலில் படகு பயணம் மேற்கொண்டு கடல் நடுவே உள்ள விவேகானந்தர் மண்டபத்துக்கு சென்ற மோடி, அங்குள்ள பகதியம்மனின் ஸ்ரீபாத மண்டபத்துக்கு சென்று தரிசனம் செ்ய்தார். இரவில் தியானத்துக்கு இடையே அவர் தியான மண்டபம் அருகே உள்ள அறையில் ஓய்வெடுத்தார்.
வெள்ளிக்கிழமை அதிகாலை 5 மணியளவில் பிரதமர் மோடி காவி உடை தரித்து நெற்றியில் விபூதி, குங்கும பொட்டுடன் அறையில் இருந்து துறவிக் கோலத்தில் வெளியே வந்தார். பிறகு, விவேகானந்தர் பாறையை சுற்றி வலம் வந்த பிதமர், கிழக்கே சூரியன் உதயமாகும் காட்சியை கண்டு வழிபட்டார். இரு கைகளையும் கூப்பி சூரியனை வணங்கி வழிபட்டார். பின்னர் கையில் கொண்டு வந்திருந்த கங்கை தீர்த்தத்தை கடலில் ஊற்றி மந்திரங்களை கூறி வழிபட்டார். இந்த கங்கா வழிபாட்டின்போது அதிகாலை சூரியன் செந்நிறத்தில் ரம்மியமாக காட்சியளித்தது.
விவேகானந்தர் பாறையில் இருந்தவாறே அவர் கன்னியாகுமரி கடலின் அழகை ரசித்து பார்த்தார். அதைத் தொடர்ந்து விவேகானந்தர் மண்டபத்துக்கு சென்ற பிரதமர் மோடி, விவேகானந்தர் சிலையை வணங்கினார்.
பின்னர், அச்சிலை முன்பு தரையில் அமர்ந்து கண்களை மூடி தியானத்தில் ஈடுபட்டார். அரை மணி நேரத்துக்கு மேல் அங்கு தியானம் செய்த மோடி, தியான மண்டபத்துக்குச் சென்று அங்கு நீண்ட நேரம் தியானம் செய்தார். அந்த சமயத்தில் அமைதியான சூழலில் ஓம் என்னும் பிரணவ மந்திரம் ஒலித்துக் கொண்டிருந்தது. சனிக்கிழமை இறுதிக்கட்ட வாக்குப் பதிவு நடைபெறும் நிலையில் விவேகானந்தர் பாறையில் பிரதமர் மோடியின் சூரிய வழிபாடு, கங்கா வழிபாடு, தியானம் ஆகியவற்றுடன் கூடிய வீடியோ சமூக வலைத்தளங்களில் இன்று வைரலானது.
பிரதமரின் தியானம் இன்று மாலையிலும் தொடர்ந்தது. இரவிலும் தியானத்தைத் தொடரும் மோடி விடிய விடிய தியானம் இருப்பார் என்று சொல்லப்படுகிறது. தியான மண்டபத்துடன் ஒட்டிய ஓய்வறையில் அவ்வப்போது ஓய்வெடுத்து கொள்ளவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இளநீர், மற்றும் பழச்சாறுகளை அவர் உணவாக உட்கொண்டு வரும் நிலையில் தியானம் முடிந்து அவர் ஓய்வெடுக்க அறைக்கு வரும்போது மருத்துவர்கள் அவரது உடல் நிலையை பரிசோதித்து வருகின்றனர்.
சனிக்கிழமை காலையும் தியானத்தைத் தொடரும் மோடி மாலை 4 மணியளவில் தியானத்தை முடிக்க திட்டமிட்டுள்ளார். அதை தொடர்ந்து அவர் படகு மூலம் கன்னியாகுமரி கரைப்பகுதிக்கு வந்து ஹெலிகாப்டரில் திருவனந்தபுரம் செல்கிறார். அங்கிருந்து அவர் டெல்லி புறப்படுகிறார்.
பிரதமர் மோடியில் தியானத்தை முன்னிட்டு கன்னியாகுமரியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்ந்து வருகிறது. இந்திய கடற்படையினர், மெரைன் போலீஸார், விமானப்படை வீரர்கள், மற்றும் சட்டம், ஒழுங்கு போலீஸார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். கடலுக்குள் 3 கிலோ மீட்டர் சுற்றளவில் இந்திய கடற்படையை சேர்ந்த இரு கப்பல்களில் கடற்படை வீரர்கள் ரோந்து சுற்றியவாறு உள்ளனர்.
கன்னியாகுமரி கடலில் 3 மைல் நாட்டிக்கல் தொலைவு வரை மீன்பிடி படகுகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் இன்றும் கன்னியாகுமரி பகுதியில் மீனவர்கள் கடலுக்குச் செல்லவில்லை. பிற பகுதிகளில் வழக்கம்போல் மீன்பிடி பணிகள் நடைபெற்றது.
கன்னியாகுமரி வரும் சுற்றுலா பயணிகளின் இயல்பு வாழ்க்கையில் பாதிப்பு ஏற்படாத வகையில் வெள்ளிக்கிழமை விவேகானந்தர் பாறைக்கு படகில் செல்ல சுற்றுலாப் பயணிகள் கட்டுப்பாடுகளுடன் அனுமதிக்கப்பட்டனர். ஆதார் கார்டு இருக்கும் சுற்றுலாப் பயணிகள் மட்டும் படகு சவாரி செய்ய அனுமதிக்கப்பட்டனர். ஆதார் எண்களை பாதுகாப்பு அதிகாரிகள் சரிபார்த்த பின்னரே சுற்றுலாப் பயணிகளை அனுமதித்தனர்.
பிரதமர் மோடி தியானம் செய்யும் தியான மண்டபத்தில் மட்டும் சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படவில்லை. முகப்பு பகுதியில் உள்ள பெரிய தியான அறையுடன் கூடிய மண்டபத்துக்கு சுற்றுலாப் பயணிகள் சென்று வந்தனர். பகல் 12 மணியளவில் பாதுகாப்புக்காக சுற்றுலாப் பயணிகளின் படகு சேவை நிறுத்தப்பட்டு மீண்டும் 3 மணியளவில் துவங்கப்பட்டது. முக்கடல் சங்கமம், கடற்கரை பகுதிகளுக்கும் சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்கப்பட்டனர். இதனால் சுற்றுலா பயணிகளுக்கு பாதிப்பு நிகழவில்லை.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT