Last Updated : 31 May, 2024 03:40 PM

7  

Published : 31 May 2024 03:40 PM
Last Updated : 31 May 2024 03:40 PM

“காந்தி மட்டும் இருந்திருந்தால் காங்கிரஸ் ஒரு குடும்பத்தின் சொத்தாகி இருக்காது” - வானதி சீனிவாசன்

கோவை:“மகாத்மா காந்தியை உலக மக்களிடம் கொண்டு சேர்க்கவில்லை என்ற ஆதங்கத்தைத்தான் பிரதமர் மோடி வெளிப்படுத்தினார்” என பாஜக தேசிய மகளிரணி தலைவி வானதி சீனிவாசன் எம்எல்ஏ தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: “மகாத்மா காந்தி மீது பிரதமர் நரேந்திர மோடி பெரும் மதிப்பும், மரியாதையும் கொண்டவர். மகாத்மா காந்தி பிறந்த மண்ணில் பிறந்த பிரதமர் மோடி, வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் மகாத்மாவை பெருமிதத்துடன் நினைவு கூர்ந்துள்ளார்.

மக்களவைத் தேர்தலையொட்டி செய்தி நிறுவனத்துக்கு பேட்டியளித்த பிரதமர் மோடி, “மகாத்மா காந்தி மிகச்சிறந்த மனிதர். அவரை உலகுக்கு அறிமுகம் செய்யும் கடமையிலிருந்து நாம் தவறிவிட்டோம். 1982-ம் ஆண்டு ரிச்சர்ட் அட்டன்பர்க்கின் 'காந்தி' படம் வந்த பிறகுதான் மகாத்மா காந்தியைப் பற்றி உலகம் அறிந்து கொண்டது. அந்த படத்தையும் நாம் எடுக்கவில்லை” என கூறியிருந்தார்.

சனாதன தர்மத்தை பின்பற்றிய மகாத்மா காந்தியையும், அவரது அகிம்சை கொள்கைகளையும் உலக மக்கள் அனைவரிடத்திலும் கொண்டு சேர்க்கும் கடமையிலிருந்து, இந்தியாவை அரை நூற்றாண்டுக்கும் மேலாக ஆட்சி செய்தவர்கள் தவறிவிட்டார்கள் என்ற ஆதங்கத்தைத்தான் பிரதமர் மோடி வெளிப்படுத்தியிருந்தார்.

அந்நியர்களான ஆங்கிலேயர்களிடம் இருந்து விடுதலை பெற அனைவரும் காங்கிரஸ் கட்சியில் இருந்து போராடினோம். சுதந்திரம் கிடைத்து விட்டது. இனி நமக்குள் தேர்தல் நடத்தி அரசை தேர்வு செய்ய வேண்டும். எனவே, காங்கிரஸ் கட்சியை கலைக்கும் முடிவில் மகாத்மா காந்தி இருந்தார். அதற்குள் அவர் கொல்லப்பட்டதால் காங்கிரஸ் கட்சி ஒரு குடும்பத்தின் கட்டுக்குள் சென்றுவிட்டது.

மகாத்மா காந்தி மட்டும் இருந்திருந்தால், நேரு, அவரது மகள் இந்திரா, அவரது மகன் ராஜீவ், அவரது மனைவி சோனியா, அவர்களது மகன் ராகுல் என காங்கிரஸ் கட்சி ஒரு குடும்பத்தின் சொத்தாகி இருக்காது. நேரு குடும்பத் தலைவர்களைத் தவிர, மகாத்மா காந்தி உள்ளிட்ட மற்ற தலைவர்களை இருட்டடிப்பு செய்த காங்கிரஸ் கட்சிக்கு மகாத்மா காந்தி பற்றிப் பேச எந்த உரிமையும் இல்லை.

மகாத்மா மண்ணில் பிறந்த பிரதமர் மோடியைப் பற்றி நாட்டு மக்கள் நன்கு அறிவார்கள். காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் திசை திருப்பும் முயற்சிகள் எடுபடாது.” என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x