Published : 31 May 2024 06:20 AM
Last Updated : 31 May 2024 06:20 AM

தாம்பரம் | மின் கசிவால் இரும்பு கடையில் தீ விபத்து: பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதம்

தாம்பரத்தை அடுத்த மப்பேடு பகுதியில் உள்ள ஹார்டுவேர் கடையில் நேற்று தீ விபத்து ஏற்பட்டது. தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ள தீயணைப்பு துறையினர் . | படம்: எம்.முத்துகணேஷ் |

தாம்பரம்: தாம்பரம் அருகே சேலையூர் மப்பேடு பகுதியில் ஹார்டுவேர்ஸ் மற்றும் எலக்ட்ரிக்கல் கடையில் மின் கசிவு ஏற்பட்டு தீப்பிடித்து பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் நாசமாகின.

தாம்பரத்தை அடுத்த சேலையூர் - அகரம் தென் பிரதான சாலையில் மப்பேடு பகுதியை சேர்ந்தவர் கைலாஷ்ராம். இவர் மப்பேடு சந்திப்பு பகுதியில் ஹார்டுவேர்ஸ் மற்றும் எலக்ட்ரிக்கல் கடை நடத்தி வருகிறார்.

நேற்று முன்தினம் இரவு இவர் வழக்கம் போல் வியாபாரம் முடித்த பின்னர் கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்ற நிலையில் நேற்று அதிகாலை சுமார் 1.25 மணி அளவில் கடையில் தீ விபத்து ஏற்பட்டு கடையின் உள்ளே இருந்த பெயிண்ட், எலக்ட்ரானிக், மின்சார வயர்கள் போன்ற பல லட்சம் மதிப்புள்ள பொருட்கள் முழுவதுமாக எரியத் தொடங்கின.

பின்னர் இந்த தீ அருகில் இருந்த முருகன் என்பவருக்கு சொந்தமான பேக்கரி கடையிலும் பரவி 2 கடைகளும் எரிய தொடங்கின. இதனால் அப்பகுதி முழுவதும் புகை சூழ்ந்து காணப்பட்டது.

அப்பகுதி பொதுமக்கள் இச்சம்பவம் குறித்து சேலையூர் காவல் நிலைய போலீஸார் மற்றும் தாம்பரம் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்ததன் பேரில் அங்கு வந்த தீயணைப்பு படை வீரர்கள் 2 பொக்லைன் இயந்திரங்கள் உதவியுடன் கடையில் உள்ள பொருட்களை வெளியே அகற்றி கடைகளில் ஏற்பட்ட தீயை அணைக்கும் முயற்சிகளில் ஈடுபட்டனர்.

இரவு தீ விபத்து ஏற்பட்டதிலிருந்து காலை வரை என சுமார் 7 மணி நேரத்துக்கும் மேலாக தீயணைப்பு துறையினர் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு பின்னர் முற்றிலுமாக தீயை அணைத்தனர்.

இந்த தீ விபத்தால் ஏற்பட்ட கரும்புகை மப்பேடு, மாடம்பாக்கம், பதுவஞ்சேரி மற்றும் அதன் சுற்றுவட்ட பகுதியில் முழுவதும் பரவியதால் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மூச்சு திணறலால் பாதிக்கப்பட்டனர்.

இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டு மாற்றுப்பாதையில் வாகனங்கள் இயக்கப்பட்டன. சம்பவம் குறித்து சேலையூர் காவல் நிலைய போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

முதற்கட்ட விசாரணையில் அதிக மின்னழுத்தம் காரணமாக மின் கசிவு ஏற்பட்டு தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என தெரியவந்துள்ளது. இதில் சுமார் ரூ.40 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சாம்பலானது என தகவல் வெளியாகியுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x