Published : 30 May 2024 09:28 PM
Last Updated : 30 May 2024 09:28 PM
நாகர்கோவில்: கன்னியாகுமரி பகவதியம்மனை தரிசித்துவிட்டு, விவேகானந்தர் பாறையில் 3 நாள் தியானத்தை பிரதமர் மோடி வியாழக்கிழமை தொடங்கினார். பிரதமருக்கு வான்வழி, கடல்வழி, தரைவழி என முப்படை பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
3 நாள் தியானம்: மக்களவைக்கான இறுதி கட்ட தேர்தல் ஜூன் 1-ம் தேதி நடைபெறுகிறது. ஜூன் 4-ம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியாகிறது. இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி இந்தியாவின் தென்மூலையில் அமைந்துள்ள கன்னியாகுமரி விவேகானந்தர் பாறையின் தியான மண்டபத்தில் வருகிற ஜூன் 1-ம் தேதி வரை தியானம் மேற்கொள்கிறார். முந்தைய தேர்தல்களில் 2014-ல் உத்தரப் பிரதேசத்தின் பிரதாப்கரிலும், 2019-ல் இமயமலையில் உள்ள கேதார்நாத் குகையிலும் அவர் தியானம் மேற்கொண்டிருந்தார்.
தற்போது 2024 தேர்தல் முடிவடையும் நிலையில், விவேகானந்தர் மண்டபத்தில் 3 நாள் தொடர்ச்சியாக 45 மணி நேரம், பிரதமர் தியானம் மேற்கொள்ள இருக்கிறார். சுவாமி விவேகானந்தர் இதே பாறையில் 142 ஆண்டுகளுக்கு முன்பு 3 நாள் தவம் இருந்த நிலையில், அதே பாறையில் பிரதமரின் தியான நிகழ்வு நடப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
பகவதியம்மன் கோயிலில் வழிபாடு: விவேகானந்தர் மண்டபத்தில் தியானம் செய்வதற்காக பிரதமர் மோடி டெல்லியில் இருந்து விமானம் மூலம் கேரள மாநிலம் திருவனந்தபுரத்துக்கு இன்று மாலை வந்தார். அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலமாக கன்னியாகுமரி அரசு விருந்தினர் மாளிகைக்கு மாலை 5.08 மணிக்கு வந்தார். பின்னர் அவர் மாலை 5.40 மணியளவில் கன்னியாகுமரி பகவதியம்மன் கோயிலிலுக்கு சென்றார். பிரதமர் மோடி கன்னியாகுமரி பகவதியம்மன் கோயிலுக்கு வருவது இதுவே முதல்முறையாகும்.
பகவதியம்மன் திருவுருவ படத்தை பிரதமர் மோடிக்கு வழங்கி கோயில் மேலாளர் ஆனந்த் வரவேற்றார். கோயில் கொடிமரத்தை வணங்கி சுற்றி வந்த பிரதமர், பகவதியம்மன் சன்னதிக்கு சென்று அம்மனை வழிபட்டார். அங்கு போற்றிகள் விட்டல், பத்மநாபன் ஆகியோர் சிறப்பு பூஜைகள் நடத்தி பிரதமருக்கு பிரசாதம் வழங்கினர். பகவதியம்மனை வழிபட்டு சன்னதியை வலம் வந்தபோது அங்கிருந்த இந்திரகாந்த விநாயகரை பிரதமர் வழிபட்டார்.
தியானத்தை தொடங்கிய பிரதமர்... - பகவதியம்மன் கோயிலில் இருந்து 6 மணிக்கு பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகத்தின் ‘விவேகானந்தர்’ படகில் கடல் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் பாறைக்கு சென்றார். விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கு மாலை 6.15 மணியளவில் சென்றார். பின்னர் விவேகானந்தர் பாறைக்கு சென்ற அவர் தியான மண்டபத்தில் உள்ள சுவாமி விவேகானந்தரின் குருவாகன ராமகிருஷ்ண பரமஹம்சர், சாரதா தேவி ஆகியோர் படத்தை வழிபட்டார்.
பின்னர் சுவாமி விவேகானந்தர் சிலைக்கு மலர்தூவி வணங்கினார். அதை தொடர்ந்து பிரதமர் மோடி இரவு அங்குள்ள தியான மண்டபத்தில் அமர்ந்து தியானத்தை தொடங்கினார். தியான மண்டப பகுதி, மற்றும் விவேகானந்தர் பாறை பகுதியில் பிரதமரின் பாதுகாப்பு அதிகாரிகள், விவேகானந்தா கேந்திரா ஊழியர்கள் இருந்தனர். பிரதமர் மோடி தொடர்ச்சியாக 5 மணி நேரம் வரை தியானம் செய்யவும், சிறிதுநேரம் ஓய்வெடுத்து அதன் பின்னர் தியானம் செய்யும் வகையிலும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
முப்படை பாதுகாப்பு: சனிக்கிழமை மாலை வரை வரை 45 மணி நேரம் பிரதமர் தியானம் செய்கிறார். தியான மண்டபத்தில் இருந்து மாலை 3 மணியளவில் அவர் வெளியே வருகிறார். பின்பு அவர் கன்னியாகுமரியில் இருந்து ஹெலிகாப்டர் மூலமாக திருவனந்தபுரத்துக்கு புறப்பட்டு செல்கிறார். அங்கிருந்து விமானம் மூலமாக டெல்லி செல்கிறார்.
பிரதமர் மோடியின் கன்னியாகுமரி வருகையை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளது. கன்னியாகுமரி கடலில் விவேகானந்தர் பாறையை சுற்றி கடற்படை கப்பலில் அதிகாரிகள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் மெரைன் போலீஸார் கமாண்டோ நீச்சல் வீரர்களும் விவேகானந்தர் பாறையை சுற்றி ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.
3,000 போலீஸார் பாதுகாப்பு: மேலும் விவேகானந்தர் பாறையை சுற்றியும் கன்னியாகுமரி கடல் பகுதியை சுற்றியும் ஹெலிகாப்டர்களில் விமானப்படை வீரர்கள் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். இதேபோல் கன்னியாகுமரி கடற்கரை, மற்றும் ரவுண்டானா சந்திப்பு, மகாதானபுரம் சந்திப்பு மற்றும் மாவட்டத்தின் முக்கிய பகுதிகளில் 3000-க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் 42 மீனவ கிராமங்களிலும் இன்று மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. சுற்றுலாப் பயணிகள் கடற்கரை பகுதிகளுக்கு இன்று கட்டுப்பாடுகளுடன் அனுமதிக்கப்பட்டனர். இன்று காலை 11 மணி வரை விவேகானந்தர் பாறைக்கு படகு போக்குவரத்து நடைபெற்றது. பின்னர் பாதுகாப்பு கருதி சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்கப்படவில்லை. பிரதமர் 3 நாள் தியானம் செய்வதால் பாதுகாப்பு வளையத்தில் கன்னியாகுமரி உள்ளது.
கட்சியினருக்கு அனுமதி இல்லை: பிரதமர் மோடி கன்னியாகுமரிக்கு தியானம் செய்ய வருவதை முன்னிட்டு பாஜகவினர் அவரை வரவேற்க திட்டமிட்டிருந்தனர். இதற்காக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, மத்திய இணை அமைச்சர் முருகன் ஆகியோருக்கு கன்னியாகுமரியில் உள்ள விடுதியில் அறைகள் முன்பதிவு செய்யப்பட்டிருந்தன. ஆனால் பிரதமரின் தனிப்பட்ட தியான நிகழ்ச்சி என்பதால் அவரை வரவேற்கவோ, பிற நிகழ்ச்சிக்கோ கட்சியினர் யாரும் வரவேண்டாம் என பாஜக தலைமை அலுவலகத்தில் இருந்து அறிவுறுத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து அண்ணாமலை உட்பட பாஜக முக்கிய பிரமுகர்களின் கன்னியாகுமரி வருகை ரத்து செய்யப்பட்டது.
பொன் ராதாகிருஷ்ணனுக்கு அனுமதி மறுப்பு: இந்நிலையில், முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன், கன்னியாகுமரி சுற்றுலா மாளிகைக்கு பிரதமரை பார்க்க வேண்டும் என வந்தார். அவரை பாதுகாப்பு அதிகாரிகள் அனுமதிக்காததால் அங்கிருந்து அவர் திரும்பி சென்றார். அதேநேரம் பிரதமரை வரவேற்கும் விதமாக, சுற்றுலாப் பயணிகளுடன் போலீஸாரின் கட்டுப்பாட்டு பகுதியில் நின்றிருந்த இந்து அமைப்பினர் பாரத மாதா படத்துடன் பிரதரை வரவேற்று கோஷம் எழுப்பினர்.
தமிழர் பாரம்பரிய உடையில் பிரதமர்: கன்னியாகுமரி விவேகானந்தர் பாறைக்கு தியானம் செய்ய வந்த பிரதமர் மோடி தமிழர்களின் பாரம்பரிய உடையான வேட்டி, சட்டை அணிந்திருந்தார். முன்னதாக பகவதியம்மன் கோயிலுக்கு செல்லும்போது சட்டை அணியக்கூடாது என்பதால் வேட்டி, சால்வையுடன் சென்றிருந்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT