Last Updated : 30 May, 2024 09:02 PM

5  

Published : 30 May 2024 09:02 PM
Last Updated : 30 May 2024 09:02 PM

“பிரதமர் மோடியின் தியானத்தை மறைமுக தேர்தல் பிரச்சாரமாக கருத முடியாது” - ராமதாஸ்

ராமதாஸ் | கோப்புப்படம்

திண்டிவனம்: ‘பிரதமர் நரேந்திர மோடி, கன்னியாகுமாரியில் தியானம் செய்வதில் எவ்வித தவறும் இல்லை. தேர்தல் நடத்தை விதிகள் இதற்குப் பொருந்தது. தியானம் செய்வது பிரதமரின் தனிப்பட்ட விருப்பம். பிரதமர் தியானம் செய்வதை முறைமுக தேர்தல் பிரசாரமாக கருதமுடியாது’ என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அடுத்த தைலாபுரத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியது: ‘மக்களவைத் தேர்தலுக்கான இறுதிக்கட்ட வாக்குப் பதிவு ஜூன்1-ம் தேதி நடைபெற விருக்கிறது. ஜூன் 4-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன. இத்தேர்தலில் பாஜக மற்றும் கூட்டணி கட்சிகள் 400 இடங்களில் வெற்றி பெறும். இந்த வெற்றியின் மூலம் நரேந்திர மோடி 3-வது முறையாக பிரதமராவது உறுதி. தமிழகத்தில் பாஜக - பாமக கூட்டணி 20 இடங்களை கைப்பற்றும். மத்தியில் மீண்டும் பாஜக ஆட்சி அமைந்தவுடன் தமிழகத்துக்குரிய திட்டங்களை பாமக போராடி பெறும். தமிழகத்தின் முன்னேற்றத்துக்கும் பாடுபடுவோம்.

திமுக ஆட்சிக்கு வந்தால் 5.50 லட்சம் இளைஞர்களுக்கு அரசு வேலை வாய்ப்பு வழங்கப்படும் என திமுக தனது தேர்தல் அறிக்கையில் வாக்குறுதியாக அளித்தது. ஆனால் திமுக ஆட்சிக்கு வந்த கடந்த 3 ஆண்டுகளில் தேர்வாணையம் மூலம் சுமார் 27,058 பேருக்கு மட்டுமே வேலை வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. கடந்த 3 ஆண்டுகளில் சுமார் ஒரு லட்சம் அரசு ஊழியர்கள் பணி ஓய்வு பெற்றுள்ளனர். அதனால் ஏற்பட்ட காலியிடங்களை கணக்கில் சேர்த்தால் குறைந்தது 6 லடசம் பேருக்கு அரசு வேலை வழங்கப்படவேண்டும்.

திமுகவின் ஆட்சிக் காலம் மேலும் 2 ஆண்டுகளே உள்ள நிலையில் எவ்வாறு 6 லட்சம் பேருக்கு அரசு வேலை வழங்கப்படும் என்பதை திமுக அறிவிக்க வேண்டும். இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கவதாக நம்பிக்கையூட்டி பின்னர் வேலை வாய்ப்பை வழங்காமல் இருப்பதும் ஒருவகையான மோசடி. இதை தமிழக மக்கள் மன்னிக்க மாட்டார்கள்.

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் மூலம் நடத்தப்பட்ட தோட்டக்கலை அலுவலர், வேளாண் அலுவலருக்கான எழுத்துத் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மூவருக்கு நேர்முகத் தேர்வில் குறைவான மதிப்பெண்கள் வழங்கப்பட்டுள்ளது. எழுத்துத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றவர்கள் நேர்முகத் தேர்வில் குறைவான மதிப்பெண்கள் பெற வாய்ப்பில்லை. எனவே இந்த முறைகேடு குறித்து அரசு விரிவான விசாரணையை நடத்த வேண்டும். குரூப் 1 உள்ளிட்ட அனைத்துத் தேர்வாணையத் தேர்வுகளில் நேர்முகத் தேர்வு முறையை அரசு ரத்து செய்யவேண்டும்.

தமிழகத்தில் சேவை பெறும் உரிமைச் சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என பாமக தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. வருவாய்த்துறை மூலம் வழங்கப்படும் சாதி, வருமானம் உள்ளிட்ட 26 வகையான சான்றுகள் மற்றும் பட்டா மாறுதலுக்கான சான்றிதழ்களை விண்ணப்பித்த 16 நாள்களுக்கு வழங்கவேண்டும் என்று வருவாய்த் துறை நிர்வாக ஆணையர் எஸ்.கே. பிரபாகர் உத்தரவிட்டிருப்பது வரவேற்கத்தக்கது. ஆனால் போதுமானது அல்ல.

சேவை பெறும் உரிமை சட்டம் நிறவேற்றப்பட்டால் சான்றிதழ்கள் பெறுவதற்கு காலக்கெடு நிர்ணயிக்கப்படும். குறித்த காலத்தில், மக்களுக்கு அரசின் சேவைகள் கிடைக்கும். அலுவலர்கள் குறித்த நேரத்தில் மக்களுக்கு சேவை வங்குவார்கள். எனவே சேவை பெறும் உரிமை சட்டத்தை தமிழக அரசு நடைபெறவுள்ள சட்டப்பேரவை கூட்டத் தொடரிலேயே நிறைவேற்ற வேண்டும். இதை வலியுறுத்தி பாமக மாபெரும் போராட்டத்தை அறிவிக்கவுள்ளது.

தமிழை வளர்ப்போம் எனக்கூறி ஆட்சிக்கு வந்த திமுக இதுவரை தமிழ் வளர்ச்சிக்காக எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. தமிழை கட்டாய பாடமாக்ககவும், பயிற்சி மொழியாகவும் அறிவிக்க வேண்டும். இதற்காக தமிழக சட்டப்பேரவையில் புதிய சட்டத்தைக் கொண்டு வந்து நிறைவேற்ற வேண்டும். தமிழகத்தில் காய்கறிகள் மற்றும் பழங்களின் விலையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் வகையில் கொள்முதல் விலைய நிர்ணயம் சட்டத்தை நிறைவேற்ற வேண்டும். வேளாண் விளைப்பொருள்களை சேமித்து வைக்கக்கூடிய வகையில் குளிர் சாதன கிடங்குகளை அமைக்கவும் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

தமிழகத்தில் கந்து வட்டி தடை செய்யப்பட்டுள்ளது. ஆனால் இந்த சட்டமானது உரிய முறையில் நிறைவேற்றப்படாததால் தற்கொலைகள் தொடர்கின்றன.கந்து வட்டிக் கொடுமையால் விருதுநகர் மாவட்டத்தில் ஆசிரியர் தம்பதியினர் தனது குடும்பத்தினருடன் தற்கொலை செய்து கொண்டிருப்பது வருத்தமளிக்கிறது. எனவே இந்த உயிரிழப்புக்கு காரணமான கந்து வட்டி மற்றும் சூதாட்ட கும்பலை காவல் துறையினர் கண்டறிந்து கைது செய்யவேண்டும். கந்து வட்டி தடை சட்டத்தை தமிழக அரசு தீவிரமாக செயல்படுத்தி தற்கொலைகளைத் தடுக்க வேண்டும். பிரதம மந்திரியின் வீட்டு வசதி திட்டத்தில் வீடு கட்ட விரும்பும் ஏழைகளுக்கு மத்திய, மாநில அரசுகள் இணைந்து மானியமாக ரூ. 2.77 லட்சம் வழங்குகிறது.

மாநில அரசால் செயல்படுத்தப்படும் இத்திட்டத்தில் ஊழல் செய்ததாக நாகை, திருவள்ளூர் மாவட்டங்களில் பணிபுரிந்த 50 அதிகாரிகள் மீது தமிழக ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இந்த ஊழலை மன்னிக்கக்கூடாது.விழுப்புரம் மாவட்டத்தில் குடிசைகள் அதிகம் என்பதால் இம்மாவட்டத்துக்கு அதிக நிதியை ஒதுக்க வேண்டும். விக்கிரவாண்டி முதல் தஞ்சாவூர் வரையிலான 4 வழிச்சாலை அமைக்கும் பணி கடந்த 2017 -ல் தொடங்கப்பட்டது. 160 கி. மீட்டத் தொலைவு கொண்டஇந்த சாலைப் பணிகளை விரைந்து முடிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்.

பிரதமர் நரேந்திரமோடி, கன்னியாகுமாரியில் தியானம் செய்வதில் எவ்விதம் தவறும் இல்லை. தேர்தல் நடத்தை விதிகள் இதற்குப் பொருந்தது. தியானம் செய்வது பிரதமரின் தனிப்பட்ட விருப்பம். பிரதமர் தியானம் செய்வதை முறைமுக தேர்தல் பிரசாரமாக கருதமுடியாது. கடந்த 2019 -ல் நடைபெற்ற மக்களவைத் தேர்தலுக்கான இறுதி கட்ட பிரசாரத்தின்போது நரேந்திர மோடி உத்தரகாண்ட் மாநிலம், கேதார்நாத்தில் தியானம் மேற்கொண்டுள்ளார். அப்போது விமர்சிக்காத எதிர்கட்சிகள் தோல்வி பயத்தால் தற்போது விமர்சிக்கிறது,’என்று அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x