Published : 30 May 2024 07:04 PM
Last Updated : 30 May 2024 07:04 PM

குமரிக்கு பிரதமர் மோடி வருகை - பகவதியம்மன் கோயிலில் சுவாமி தரிசனம்

கன்னியாகுமரி பகவதியம்மன் கோயிலில் வழிபாடு செய்த பிரதமர் மோடி

கன்னியாகுமரி: கன்னியாகுமரியில் பிரதமர் மோடி இன்று முதல் 3 நாட்கள், 45 மணி நேரத்துக்கு தொடர்ந்து தியானம் மேற்கொள்கிறார். இதற்காக, கன்னியாகுமரி வந்த பிரதமர் மோடி, வெள்ளை வேட்டி அணிந்து பகவதியம்மன் கோயிலில் சுவாமி தரிசனம் செய்தார். பின்னர், விவேகானந்தர் பாறைக்கு சிறப்பு படகு மூலம் சென்றடைந்தார். பிரதமரின் வருகையையொட்டி அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

பிரதமர் மோடி, டெல்லியில் இருந்து விமானம் மூலம் கேரள மாநிலம் திருவனந்தபுரத்துக்கு வியாழக்கிழமை மாலை வந்தார். அங்கிருந்து, கன்னியாகுமரியில் உள்ள அரசு விருந்தினர் மாளிகையில், அமைக்கப்பட்டிருந்த ஹெலிபேட் தளத்துக்கு ஹெலிகாப்டரில் வந்தடைந்தார். பின்னர், பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி பகவதியம்மன் கோயிலில் தரிசனம் செய்தார். அப்போது பிரதமருக்கு தீப ஆராதனை காட்டப்பட்டது. பிரதமருக்கு பகவதியம்மனின் திருவுருப்படம் வழங்கப்பட்டது.

பின்னர், அங்கிருந்து கார் மூலம் புறப்பட்டு, பூம்புகார் கப்பல் போக்குவரத்துக் கழக படகு குழாமை வந்தடைந்தார். அங்கிருந்து கடல் நடுவே உள்ள விவேகானந்தர் பாறைக்கு சிறப்பு படகில் சென்றார். பிரதமரின் வருகையையொட்டி, இன்று காலை முதலே விவேகானந்தர் பாறை உள்ளிட்ட பகுதிகளுக்கு பொதுமக்கள் அனுமதிக்கப்படவில்லை. மேலும், அந்தப் பகுதி முழுவதுமே காவல் துறை மற்றும் பிரதமரின் சிறப்பு பாதுகாப்பு படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

விவேகானந்தர் மண்டபத்தில் பிரதமர் மோடி இன்று தொடங்கி ஜூன் 1-ம் தேதி மாலைவரை, தொடர்ந்து 45 மணி நேரத்துக்கு மேல் தியானம் மேற்கொள்கிறார். ஜூன் 1-ம் தேதி மாலை 3 மணி அளவில் தியானத்தை நிறைவு செய்யும் பிரதமர், தியானக் கூடத்தில் இருந்து வெளியே வருகிறார். பிறகு, மாலை 3.30 மணி அளவில் கன்னியாகுமரியில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் திருவனந்தபுரம் சென்று, அங்கிருந்து விமானத்தில் டெல்லி திரும்புகிறார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Loading comments...

 
x
News Hub
Icon