Published : 30 May 2024 04:11 PM
Last Updated : 30 May 2024 04:11 PM
திருவண்ணாமலை: பாலஸ்தீனம் மீதான இஸ்ரேல் தாக்குதலை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வரும் ஜூன் 2-ம் தேதி நாடு தழுவிய போராட்டம் நடத்தப்படும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தீர்மானம் நிறைவேற்றி உள்ளது.
காரல் மார்க்சின் 206-வது பிறந்தநாள் விழா செங்குடை பேரணி மற்றும் பயிலரங்கம் திருவண்ணாமலையில் நேற்று (மே 29) மாலை நடைபெற்றது. இதையொட்டி திருவண்ணாமலை அண்ணா நுழைவு வாயிலில் இருந்து மார்க்ஸ் உருவம் பதித்த செங்குடை பேரணி புறப்பட்டது. வேலூர் சாலை வழியாக சென்று, பயிலரங்கம் நடைபெற்ற திருமண மண்டபத்தில் நிறைவு பெற்றது.
இதையடுத்து மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம்.வீரபத்திரன் தலைமையில் பயிலரங்கம் தொடங்கியது. மாவட்டச் செயலாளர் எம். சிவக்குமார் நோக்க உரையாற்றினார். இந்திய நாட்டுக்கு வழிகாட்டும் மார்க்சியம் என்ற தலைப்பில் மாநிலக் குழு உறுப்பினர் ஆர்.பத்ரி, மார்க்சிய விஞ்ஞானமும் புரட்சிகளின் வரலாறு என்ற தலைப்பில் மாநில குழு உறுப்பினர் இரா.சித்தன், இந்தியாவை பற்றி மார்க்ஸ் என்ற தலைப்பில் தமிழ்நாடு தேசிய பல்கலைக் கழக (திருச்சி) முனைவர் பி.குமார் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
பயிலரங்கில் நிறைவேற்ற தீர்மானங்கள்: காசா மீதான போரை நிறுத்துமாறு இஸ்ரேலுக்கு சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பாலஸ்தீனர்களை இனப்படுகொலை செய்யும் இஸ்ரேலின் போரை நிறுத்த உத்தரவிட வேண்டும் என சர்வதேச நீதிமன்றத்தில் தென்னாப்பிரிக்கா தொடுத்த வழக்கில் கடந்த 24-ம் தேதி சர்வதேச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
ஒவ்வொரு நாளும் கொல்லப்படும் மக்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்தவும், காசாவில் இஸ்ரேல் ராணுவத்தால் உருவாக்கப்படும் மனிதத் துயரத்தை நிறுத்த 15 நீதிபதிகளைக் கொண்ட அமர்வு பிறப்பித்துள்ள உத்தரவில், ‘இஸ்ரேல் உடனடியாக தனது தாக்குதலை நிறுத்த வேண்டும், காசாவில் இருந்து முழுமையாக வெளியேற வேண்டும்’ என வலியுறுத்தி உள்ளது. மேலும் இஸ்ரேல் பிரதமர், பாதுகாப்புத்துறை அமைச்சர் மற்றும் ஹமாஸ் தலைவர்களுக்கு சர்வதேச நீதிமன்றம் கைது உத்தரவை பிறப்பித்ததும் குறிப்பிடத்தக்கது.
ஆனால், சர்வதேச நீதிமன்ற உத்தரவை மதிக்காமல் இஸ்ரேல் தனது இன அழிப்புப் போரைத் தொடர்கிறது. சர்வதேச நீதிமன்ற உத்தரவால் கொக்கரித்துள்ள அமெரிக்கா, இஸ்ரேலை மீண்டும் தூண்டிவிட்டு, இனப்படுகொலையை தொடர்ந்து நிகழ்த்துகிறது. ஐக்கிய நாடுகள் சபையின் போர் நிறுத்தத் தீர்மானத்தை, வீட்டோ அதிகாரத்தின் மூலம் பலமுறை செயலிழக்கச் செய்து, தன்னுடைய வன்மத்தைக் காட்டுகிறது அமெரிக்கா.இந்தியாவின் நீண்ட கால பாலஸ்தீன ஆதரவு நிலைப்பாடு, பாஜகவின் வெளியுறவு கொள்கையால் திசை மாறிப்போனது. பேரழிவைச் சந்தித்து வரும் பாலஸ்தீனத்துக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தனது பேராதரவினைத் தெரிவித்துக் கொள்கிறது.
இஸ்ரேலின் இன அழிப்புப் போரை நியாயப்படுத்த முடியாது. போர் நிறுத்தத்தை இஸ்ரேல் மேற்கொள்ள வேண்டும்.பாலஸ்தீன மக்களை பாதுகாக்க, நிவாரணைப் பணிகளை முடுக்கிவிட, தகுந்த நடவடிக்கை மேற்கொள்ள அனைத்து நாடுகளையும் வலியுறுத்துகிறோம். இந்திய அரசு நிலையில் மாற்றம் கண்டு, பாலஸ்தீன ஆதரவு நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும். போர் நிறுத்தத்தை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வரும் ஜூன் 2-ம் தேதி நாடு தழுவிய போராட்டம் நடத்தப்படும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT