Published : 30 May 2024 03:38 PM
Last Updated : 30 May 2024 03:38 PM
திருச்சி: விவசாயிகளின் விளை பொருட்களுக்கு இருமடங்கு லாபகரமான விலை வழங்கப்படும் என பாஜக அளித்த வாக்குறுதியை நிறைவேற்றாததைக் கண்டித்து தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் சார்பில் திருச்சி ஓயாமரி சுடுகாட்டில் சடலம் போல் படுத்து விவசாயிகள் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
2014 மற்றும் 2019 மக்களவைத் தேர்தல்களின் போது பாஜக அளித்த வாக்குறுதிகளின் அடிப்படையில் விவசாயிகளின் விளை பொருட்களுக்கு உரிய லாபகரமான விலை வழங்க வேண்டும். கர்நாடக அரசு காவிரியில் தமிழகத்துக்குரிய தண்ணீரை திறந்து விட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்தப் போராட்டம் நடைபெற்றது.
போராட்டத்துக்கு தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் தலைவர் பி.அய்யாக்கண்ணு தலைமை வகித்தார். இந்த போராட்டத்தின் போது விவசாயிகள் இறந்தவர்கள் போல் சுடுகாட்டில் படுத்துக் கொண்டனர். அவர்களுக்கு மாலை அணிவித்து, இறுதிச் சடங்குகள் செய்யப்பட்டன.
இந்தப் போராட்டம் குறித்து தகவல் அறிந்தவுடன் போலீஸார் விரைந்து சென்று, விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.இதுகுறித்து பி.அய்யாக்கண்ணு கூறுகையில், “விவசாயிகளுக்கு உரிய நீதி கிடைக்கவில்லை. கோரிக்கைகளை நிறைவேற்ற மத்திய அரசு மறுக்கிறது. இதைக் கண்டித்து விவசாயிகள் போராட்டம் நடத்தவும் அனுமதிக்கவில்லை.
கன்னியாகுமரியில் பிரதமர் மோடி தியானம் செய்யும் இடத்துக்குச் செல்ல விவசாயிகளை அனுமதிக்க வேண்டும். இல்லையேல் இங்கேயே நாங்கள் தியானம் செய்ய அனுமதிக்க வேண்டும்” என்றார்.இதுதொடர்பாக காவல்துறை உயரதிகாரிகளுக்கு போலீஸார் தகவல் தெரிவித்து விட்டு அடுத்த உத்தரவுக்காக காத்திருக்கின்றனர்.
காவிரியில் இறங்கி போராட்டம் - இதேபோல் புதன்கிழமை முக்கொம்பு மேலணை காவிரி ஆற்றில் இடுப்பளவு தண்ணீரில் இறங்கி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். செவ்வாய்க்கிழமை மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார் கோயில் சன்னிதி அருகிலுள்ள கார்த்திகை தீப கோபுரத்தில் ஏறி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT