Last Updated : 30 May, 2024 02:12 PM

6  

Published : 30 May 2024 02:12 PM
Last Updated : 30 May 2024 02:12 PM

“ஜூன் 4-க்கு பிறகு அரசியலில் இருந்து ராகுல் காந்தி காணாமல் போய்விடுவார்” - எல்.முருகன்

சென்னை: “ஜூன் 4-ம் தேதிக்கு பிறகு அரசியலில் இருந்து ராகுல் காந்தி காணாமல் போய்விடுவார்” என மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

சென்னை விமான நிலையத்தில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் இன்று செய்தியாளர்களிடம் கூறியது: “அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்பட வேண்டும் என்பது இந்தியாவில் ஒவ்வொருவரின் கனவு. ஜெயலலிதாவும் அயோத்தியில் ராமர் கோயில் கட்ட வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். அதேபோல், பொது சிவில் சட்டம் வேண்டும் என்றார். சட்டப்பிரிவு 370 எப்போது நீக்கப்படும் என மாநிலங்களவையில் அவர் பேசியிருக்கிறார்.

ஜெயலலிதா தொடர்ந்து, இந்துத்துவா மீதும், ஆன்மிகத்தின் மீதும் நம்பிக்கை கொண்டவராக இருந்தார். இதற்கு ஆதாரம் வேண்டும் என்றால், மாநிலங்களவை குறிப்பில் இருப்பதை எடுத்துப் பாருங்கள்.

தமிழகத்தில் இருப்பவர்கள் ஒடிசா அரசியலை பற்றி தவறான தகவல்களை பரப்பி கொண்டிருக்கிறார்கள். ஒடிசா முதல்வரை இயக்குவது ஒரு அதிகாரி. அவர் தவறான செயல்களை செய்து கொண்டிருக்கிறார் என்பதைத்தான் எடுத்து கூறியிருக்கின்றனர். அதைப் பற்றி நாம் ஏன் கவலைப்பட வேண்டும். இதுகுறித்து விவாதிக்க வேண்டிய அவசியமே இல்லை.

சென்னையில் பள்ளிச் சிறுமிகளை பாலியல் தொழிலுக்கு தள்ளியவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு இருப்பதாகவே தெரியவில்லை. தமிழகத்தில் அரசு செயல்படுகிறதா என்பதும் தெரியவில்லை. போக்குவரத்து ஊழியருக்கும், காவலருக்கும் இடையில் ஏற்பட்ட பிரச்சினையில், தமிழக அரசு இருவரையும் அழைத்து நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். அதைவிடுத்து கட்டப்பஞ்சாயத்து செய்து சமாதானம் செய்து வைத்திருக்கிறார்கள். தமிழகத்தில் செயலற்ற முதல்வர் இருப்பதற்கு இந்தச் சம்பவம் ஒரு உதாரணம். சென்னையில் எங்கு பார்த்தாலும் கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை, கஞ்சா என சட்டம் ஒழுங்கு சந்தி சிரித்துக் கொண்டிருக்கிறது.

தமிழக அரசியலில் பாஜக மிகப் பெரிய வரலாற்றை படைக்கப் போகிறது. ஜூன் 4-ம் தேதி பாஜகவுக்கு மிகப்பெரிய திருவிழாவாக இருக்கப் போகிறது. அந்த நாளுக்கு பிறகு அரசியலில் இருந்து ராகுல் காந்தி காணாமல் போய்விடுவார். இனி எந்தக் காலத்திலும் காங்கிரஸ் 40 தொகுதிகளுக்கு மேல் வெற்றிபெறாது. இதற்கான விடை ஜூன் 4-ல் தெரிந்து விடும்” என்று கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x