Published : 30 May 2024 01:43 PM
Last Updated : 30 May 2024 01:43 PM

பாஜகவின் செயல்பாடுகளுக்கு கண்டனம்: தமாகா-வில் இருந்து ஈரோடு கவுதமன் விலகல்

தாமகாவிலிருந்து விலகிய ஈரோடு கவுதமன்

ஈரோடு: பாஜகவின் செயல்பாடுகளுக்கு கண்டனம் தெரிவித்துள்ள தமாகா மாநில நிர்வாகியான ஈரோடு கவுதமன் அக்கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

மக்களவைத் தேர்தல் முடிவுகள் வெளியாகும் நாள் நெருங்கி வரும் நிலையில், தமிழகத்தில் தேர்தல் முடிவுகள் ஒவ்வொரு கட்சியிலும் எத்தகைய மாற்றங்களை ஏற்படுத்தும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. ஆளுங்கட்சியான திமுகவில் அமைச்சரவை மற்றும் மாவட்டச் செயலாளர்கள் மாற்றம், அதிமுகவில் தலைமைக்கு எதிரான போர்க்குரல் மற்றும் மாவட்ட செயலாளர்கள் ராஜினாமா, பாஜகவில் தேர்தல் செலவு கணக்கு வழக்குகளில் குளறுபடி என பல்வேறு பிரச்சினைகளும் சர்சைகளும் வெடிக்கலாம் என அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.

இந்த நிலையில், தமாகாவின் மாநில தேர்தல் முறையீட்டுக் குழு உறுப்பினர் மற்றும் நாமக்கல் மாவட்டப் பொறுப்பாளராக இருந்த ஈரோடு கவுதமன், தமாகாவில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

ஈரோடு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் பதவியில் தொடங்கி, தமாகாவில் மூப்பனார் மற்றும் வாசனுடன் இணைந்து செயல்பட்டது வரை 40 ஆண்டு காலமாக அரசியலில் இருக்கும் ஈரோடு கவுதமன், பிரதமர் மோடி குறித்தும், பாஜக குறித்தும் கடுமையான விமர்சனங்களை தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

அவர் தனது பதிவில், ‘கூட்டணி கட்சியான பாஜகவின் செயல்பாடுகள் அதன் தேர்தல் அறிக்கை, அணுகுமுறை இவையெல்லாம் ஜனநாயகத்திற்கு எதிரான, இந்த நாட்டு மக்கள் மனங்களில் வேற்றுமையை ஏற்படுத்தும் ஆபத்தான அரசியலாகும். இதனை ஏற்றுக்கொண்டு ஆதரவாக செயல்படும் வேதனையான சூழ்நிலையை ஏற்க முடியாது.

இனி எதிர்காலத்தில் தலைவரோடு (ஜி.கே.வாசன்) அரசியல் ரீதியாக பயணிக்க முடியாது என்ற நிலையில், தமாகாவில் இருந்து முற்றிலுமாக வெளியேறுகிறேன்’ என்று தெரிவித்துள்ளார். அவர் தனது பதிவில் பிரதமர் மோடி மீது கடுமையான விமர்னங்களையும் வைத்துள்ளார். அவரது முகநூல் பதிவுக்கு காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் பலரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர். தமாகாவைச் சேர்ந்த சிலரும் அவரது கருத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

இது குறித்து ஈரோடு கவுதமன் நம்மிடம் பேசுகையில், “சாதி, மதம் பாராமல் காங்கிரஸ் இயக்கத்தில் செயல்பட்டு வந்த என் போன்றோருக்கு, பாஜகவுடன் தமாகா இணைந்து செயல்படுவதை ஏற்கமுடியவில்லை. தேர்தல் நேரத்தில் ஈரோடு தொகுதி தமாகாவுக்கு ஒதுக்கப்பட்ட நிலையில், அந்த சமயத்தில் கட்சியைவிட்டு வெளியேறி தர்மசங்கடத்தைக் கொடுக்க விரும்பவில்லை.

தற்போதுகூட தமாகா தலைவர் ஜி.கே.வாசனிடம் எனது விலகலைச் சொல்லி விட்டுத்தான் இந்த அறிவிப்பை வெளியிட்டேன். தமாகாவில் என்னைப் போன்றே பலரும் மனக்கசப்பில் உள்ளனர். அதன் பிரதிபலிப்பு எதிர்காலத்தில் தெரியும்” என்றார்.

மக்களவைத் தேர்தலின் போது அதிமுகவுடன் கூட்டணி அமைக்க வேண்டும் என பெரும்பாலான தமாகா நிர்வாகிகள் விரும்பியதாகவும், ஆனால், அதற்கு மாறாக பாஜக கூட்டணியில் சேர ஜி.கே.வாசன் முடிவெடுத்ததாகவும் தமாகா வட்டாரத்தில் குமுறல் எழுந்தது. தேர்தல் முடிவுகளுக்குப் பின் இந்த குமுறலை நிர்வாகிகள் வெளிப்படுத்த வாய்ப்புள்ளதாக தமாகா வட்டாரங்களில் கூறப்படுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x