Last Updated : 30 May, 2024 12:25 PM

2  

Published : 30 May 2024 12:25 PM
Last Updated : 30 May 2024 12:25 PM

நிதானமாக நகரும் பனகல் பூங்கா - கோடம்பாக்கம் மெட்ரோ சுரங்கப்பாதை பணி: காரணம் என்ன?

மெட்ரோ பணிகள் | கோப்புப் படம்

சென்னை: இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில், கலங்கரைவிளக்கம் - பூந்தமல்லி வரையிலான 4-வது வழித்தடத்தில் ஒரு பகுதியான தியாகராய நகர் பனகல் பூங்காவில் இருந்து கோடம்பாக்கம் நோக்கி சுரங்கப்பாதை அமைக்கும் பணி நிதானமாக நகர்கிறது.

சென்னையில் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம், 116.1 கி.மீ. தொலைவில் 3 வழித்தடங்களில் செயல்படுத்தப்படுகிறது. இவற்றில், ஒரு வழித்தடம் கலங்கரை விளக்கம் - பூந்தமல்லி வரையிலான 4-வது வழித்தடம் (26.1 கி.மீ). இந்த வழித்தடத்தில், கலங்கரை விளக்கம் முதல் கோடம்பாக்கம் மேம்பாலம் வரை சுரங்கப்பாதையாகவும், பவர்ஹவுஸ் முதல் பூந்தமல்லி வரை உயர்மட்டப் பாதையாகவும் அமைக்கப்படுகிறது. இந்த வழித்தடத்தில் 9 சுரங்க மெட்ரோ ரயில் நிலையங்களும், 18 உயர்மட்ட மெட்ரோ ரயில் நிலைங்களும் இடம்பெற உள்ளன.

இந்த வழித்தடத்தில் ஒரு பகுதியாக, தியாகராய நகர் பனகல் பூங்காவில் இருந்து கோடம்பாக்கம் நோக்கி, ‘பெலிகன்’ என்னும் சுரங்கம் தோண்டும் இயந்திரத்தை பயன்படுத்தி, பூமியில் இருந்து 18 மீட்டர் ஆழத்தில் சுரங்கப்பாதை அமைக்கும் பணி கடந்த ஜனவரி 31-ம் தேதி தொடங்கியது. கிட்டத்தட்ட 4 மாதங்கள் நிறைவடைய உள்ள நிலையில், மெதுவாகவும் மிக கவனமாகவும் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.

இது குறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது: பனகல்பூங்கா முதல் கோடம்பாக்கம் வரை 1,155 மீட்டர் தொலைவுக்கு சுரங்கப்பாதை பணி மேற்கொள்ள வேண்டும். இப்போது வரை 70 மீட்டர் தொலைவுக்கு சுரங்கப்பாதை அமைக்கும் பணி நிறைவடைந்துள்ளது. இங்கு நிறைய சவால்கள் உள்ளன. பனகல் பூங்காவில் களிமண் அதிக அளவில் உள்ளது. இதனால், களிமண்ணை வெளியேற்றுவது மிக முக்கியம் ஆகும்.

தொடர்ச்சியாக சுரங்கம் தோண்டும் இயந்திரத்தை இயக்குவதில் பல்வேறு சவால்கள் உள்ளன. சுரங்கப் பாதை அமைக்கும் இடங்களை சுற்றி பல்வேறு அடுக்கு மாடி குடியிருப்புகள் உள்ளன. இவற்றுக்கு எவ்வித சேதம் இல்லாமல் பாதுகாப்பாக சுரங்கம் தோண்டும் இயந்திரத்தை இயக்குகிறோம்.

மேலும், இந்தப் பாதை செல்லும் தடத்தை தீவிரமாக கண்காணித்து வருகிறோம். பனகல் பூங்காவில் இருந்து கோடம்பாக்கம் வரையிலான தொலைவை சுரங்கம் தோண்டும் இந்திரம் வரும் டிசம்பர் இறுதிக்குள் அடைந்துவிடும். இவ்வாறு அவர்கள் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x