Published : 29 May 2024 08:29 PM
Last Updated : 29 May 2024 08:29 PM

‘கோமா’ நிலையில் உள்ள கணவரின் சொத்துகளை விற்க மனைவிக்கு சென்னை ஐகோர்ட் அனுமதி

சென்னை: ‘கோமா’ நிலையில் உள்ள கணவரின் சொத்துகளை விற்க மனைவிக்கு அனுமதியளித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு, கோமா நிலையில் உள்ள கணவர் சிவகுமாருக்கு சொந்தமான சொத்துகளை கையாளும் வகையில் தன்னை பாதுகாவலராக நியமிக்கக்கோரி, சென்னையைச் சேர்ந்த சசிகலா என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை ஏற்கெனவே விசாரித்த தனி நீதிபதி, கணவர் ‘கோமா’ நிலையில் இருக்கும் நிலையில் அவருடைய சொத்துகளை கையாள மனைவியை பாதுகாவலராக நியமிக்கக் கோரும் மனுவை விசாரணைக்கு ஏற்க முடியாது என்றும், இதுதொடர்பாக உரிமையியல் நீதிமன்றத்தை அணுகி நிவாரணம் பெற்றுக் கொள்ளலாம், எனவும் உத்தரவிட்டிருந்தார்.

இந்த உத்தரவை எதிர்த்து சசிகலா தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், பி.பி.பாலாஜி ஆகியோர் அடங்கிய அமர்வில், இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், “இதுபோன்ற பிரச்சினைக்கு சட்டப் பாதுகாவலர் என்ற முறையில் நீதிமன்றம் தகுந்த உத்தரவைப் பிறப்பிக்கலாம் என கேரள உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது” எனக்கூறி, ‘கோமா’ நிலையில் உள்ள கணவரின் சொத்துகளைக் கையாள மனைவிக்கு அனுமதியளித்து உத்தரவிட்டனர்.

மேலும் அந்த உத்தரவில், “ஏற்கெனவே மருத்துவமனை சிகிச்சைக்கு லட்சக்கணக்கான ரூபாய் செலவழித்துள்ள நிலையில், வீடு திரும்பிய கணவரை கவனிக்க தனி செவிலியர்களை நியமிக்க வேண்டியுள்ளது என மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகியிருந்த சசிகலாவின் இரு குழந்தைகளும், தந்தையின் சொத்துகளை விற்க தாயாருக்கு அனுமதி வழங்காவிட்டால் பெரும் பாதிப்பு ஏற்படும் என வேதனையுடன் தெரிவித்துள்ளனர்.‘கோமா’ நிலையில் உள்ள ஒருவரை கவனிப்பது என்பது எளிதானதல்ல.

அதற்கு உடனடியாக நிதி தேவைப்படும் நிலையில், உரிமையியல் நீதிமன்றத்தை நாடி நிவாரணம் பெறக்கூறுவது என்பது முறையற்றது. எனவே, தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்கிறோம். மனுதாரரை அவருடைய கணவர் சிவகுமாரின் பாதுகாவலராக நியமிக்கிறோம். சிவகுமாருக்கு சொந்தமான ரூ. 1 கோடி மதிப்பிலான சொத்தை விற்க மனுதாரரான சசிகலாவுக்கு அனுமதியளிக்கிறோம். அதில், ரூ. 50 லட்சத்தை கணவர் சிவகுமாரின் பெயரில் நிரந்தர வைப்பீடாக முதலீடு செய்ய வேண்டும். அதில் இருந்து கிடைக்கும் காலாண்டு வட்டியை குடும்ப தேவைக்காகவும், மருத்துவ சிகிச்சைக்காகவும் பயன்படுத்தலாம்” எனவும் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் குறிப்பிட்டுள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x