Published : 29 May 2024 07:48 PM
Last Updated : 29 May 2024 07:48 PM

தேர்தல் நடத்தை விதிகளால் முன்னாள் ராணுவ வீரர் உடலை தானம் பெற மறுத்த மதுரை அரசு மருத்துவக் கல்லூரி - உறவினர்கள் போராட்டம்

முன்னாள் ராணுவ வீரர் வேலுசாமி

மதுரை: உடல் தானம் செய்வதாக பதிவு செய்திருந்த, இறந்த முன்னாள் ராணுவ வீரரின் உடலை மக்களவைத் தேர்தல் நன்னடத்தை விதிமுறைகளை காரணம் காட்டி, அரசு மருத்துவக் கல்லூரி நிர்வாகம் தானம் பெற மறுத்தது. இதனால், உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

மூளைச் சாவு அடைந்தவரின் உடலில் இருந்து உடல் உறுப்புகளை தானம் கொடுப்பதற்கு அவர்களது உறவினர்கள் சம்மதிக்க வேண்டும். ஆனால், இறந்த பின் தனது உடலை மருத்துவக் கல்லூரிக்கு தானமாக கொடுக்க விரும்புவோர், தாங்கள் உயிருடன் இருக்கும் போதே அரசு மருத்துவக் கல்லூரி உடற்கூறு கழகத்தில் விண்ணப்பம் கொடுத்தால் போதும். அவர்கள் இறந்தபின், மருத்துவக்கல்லூரி நிர்வாகம் அவர்கள் உடல்களை பெற்றுக் கொள்ளும். அந்த உடல்கள், மருத்துவ மாணவர்கள் படிப்புக்கு பயன்படுத்தப்படும்.

தமிழகத்தைப் பொறுத்தவரை, உடல் தானம் செய்பவர்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் உயர்ந்திருந்தாலும், ஒப்புதல் அளித்தபடி உடல்களை இறந்தவர்களின் உறவினர்கள் ஒப்படைப்பதில்லை என்ற குற்றச்சாட்டு நீடிக்கிறது. இதனால், பெரும்பாலான மருத்துவக் கல்லூரிகளில் இறந்த மனித உடல்கள் இல்லாமல் மருத்துவ மாணவர்கள் சிரமப்படுவதும், பிற மருத்துவக் கல்லூரிகளில் இருந்து இறந்தவர்கள் உடல்களை பெறுவதும் நீடிக்கிறது. அதுபோல், இறந்தவர் முன்பே ஒப்புதல் அளித்திருந்த விண்ணப்பத்தின்படி அவரது உடலை கேட்டு பெறுவதற்கான முயற்சிகளை மருத்துவக்கல்லூரி உடற்கூறு கழகம் எடுப்பதில்லை என்ற குற்றச்சாட்டும் உள்ளது.

இந்நிலையில், மதுரை எல்லீஸ்நகரை சேர்ந்த வேலுச்சாமி, தான் இறந்தபிறகு தன்னுடைய உடலை தானமாக மதுரை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவ மாணவர்கள் கல்வி பயன்பாட்டுக்கு வழங்குவதாக கடந்த 2014-ம் ஆண்டு உடல் தானம் ஒப்புதல் சான்று அளித்திருந்தார். இந்த சூழலில் உடல் நலக் குறைவால் வேலுச்சாமி உயிரிழந்த நிலையில் அவரது உடலை மருத்துவக்கல்லூரி நிர்வாகத்தை தொடர்பு கொண்டு வழங்க அவரது உறவினர்கள் முயற்சி செய்துள்ளனர்.

ஆனால், மதுரை அரசு மருத்துவக் கல்லூரி மக்களவைத் தேர்தல் நன்னடத்தை விதிமுறைகளை காரணம் காட்டி உடலை வாங்க மறுத்ததாக கூறப்படுகிறது. இதனால், உடலை ஒப்படைக்க ஆம்புலன்சுடன் வந்த வேலுச்சாமி குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தனர். உடனே அவர்கள் இறந்தவரின் உடலை வைத்தருந்த ஆம்புலன்சுடன், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு கொண்டு சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது. மாவட்ட ஆட்சியர், இந்த பிரச்சினை குறித்து விசாரணை மேற்கொண்டார்.

இதுகுறித்து அரசு மருத்துவமனை ‘டீன்’ (பொ) தர்மராஜிடம் கேட்டபோது, ‘அரசு மருத்துவக் கல்லூரியில் உடல் தானம் செய்தவர்கள் இறந்தால் அவர்கள் வைப்பதற்கு போதுமான இடம் உள்ளது. தற்போது மருத்துவக் கல்லூரியில் வாக்குப்பதிவு இயந்திரங்கள், வைக்கப்பட்டிருந்தாலும் உடல்களை வைக்கும் இடத்தில் போதுமான இடம் உள்ளது. ஆனால், தேர்தல் நன்னடத்தை விதிமுறைகள் அமுலில் உள்ளதால் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள மருத்துவக் கல்லூரியில் உடல்களை பெற்று வைக்கும் அதிகாரம் மருத்துவக்கல்லூரி நிர்வாகத்திடம் இல்லை. எனவே, மாவட்ட தேர்தல் அலுவலரிடம் ஒப்புதல் பெற்றபிறகு இந்த விவகாரத்தில் எந்த முடிவும் நாங்கள் எடுக்க முடியும். இதுதொடர்பாக மாவட்ட தேர்தல் அதிகாரியான ஆட்சியர் விசாரித்து வருகிறார்’, என்றார்.

மருத்துவக் கல்லூரியில் உடலை வைக்க ஏற்பாடு: இதுகுறித்து மாவட்ட உயர் அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, ‘மக்களவைத் தேர்தல் நன்னடத்தை விதிமுறைகள் இருப்பதால் யாரையும் மருத்துவக்கல்லூரி வளாகத்துக்குள் அனுமதிக்க முடியாது.

எனவே, மருத்துவமனை பிணவறை பகுதியில் பாதுகாப்பாக உடலைப் பெற்று வைப்பதற்கு, மருத்துவக்கல்லூரி நிர்வாகம் சம்மதித்திருந்தது. ஆனால், பிணவறையில் அவர்கள் வைக்க சம்மதிக்காததால் மருத்துவக் கல்லூரியிலே வைப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது’ என்றனர். சட்டம், ஒழுங்கு பிரச்சினை ஏற்படாமல் இருக்க மாவட்டம் நிர்வாகம், மக்களவைத் தேர்தல் நன்னடத்தை விதிமுறைகளை தளர்த்தி, மருத்துவக் கல்லூரியில் வைக்க ஏற்பாடு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x