Last Updated : 29 May, 2024 04:33 PM

 

Published : 29 May 2024 04:33 PM
Last Updated : 29 May 2024 04:33 PM

இந்தியாவின் விளையாட்டுத் தலைநகராக மாறி வருகிறது தமிழகம்: அரசு பெருமிதம்

சென்னை: சர்வதேச, தேசிய போட்டிகளை நடத்தியதன் மூலம் நாட்டின் விளையாட்டுத் தலைநகராக தமிழகம் மாறி வருவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘கடந்த 3 ஆண்டுகளில் சிறப்பான திட்டங்கள் நிறைவேற்றப்பட்டதால் விளையாட்டுத் துறையிலும் தமிழகம் இந்தியா மட்டுமின்றி, உலகெங்கிலும் சிறந்து விளங்கும் நாடுகளும் உற்று நோக்கப்படுவதுடன், பாராட்டுக்களையும் பெற்றுள்ளது.

முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற பின், கடந்த 3 ஆண்டுகளில் இத்துறைக்கு ரூ.1,000 கோடிக்கு மேல் வழங்கியுள்ளார். விளையாட்டுத் துறையை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்லும் வகையில், சென்னையில் உலகத்தரத்திலான விளையாட்டு நகரம் ஒன்றை அமைக்க பூர்வாங்க பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.

சர்வதேச, தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் பதக்கங்கள் வென்ற தமிழகத்தின் 2,738 விளையாட்டு வீரர், வீராங்கனைகள் மற்றும் மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர்களுக்கு உயரிய ஊக்கத் தொகையாக ரூ.87 .61 கோடியை முதல்வர் வழங்கியுள்ளார்.

சென்னையில், முதல்முறையாக தமிழக அரசும், இந்திய சதுரங்கக் கூட்டமைப்பும் இணைந்து ரூ.114 கோடி ரூபாய் செலவில், உலகப் புகழ் பெற்ற 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டியை மாமல்லபுரத்தில் நடத்தியது. இதன் பயனாக, சென்னை இனி உலகின் முன்னணி விளையாட்டு நகரம் எனப் புகழ்கொடி நாட்டியது.

தொடர்ந்து, கடந்த 2022-ல் சர்வதேச மகளிர் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி, ஏடிபி சேலஞ்சர் 100 சர்வதேச ஆண்கள் டென்னிஸ் போட்டி, ஸ்குவாஷ் உலகக் கோப்பை, சென்னை செஸ் கிராண்ட் மாஸ்டர் போட்டி, ஆசிய ஆடவர் ஹாக்கி சாம்பியன்ஷிப், உலகளவில் புகழ்பெற்ற சர்வதேச அலைச் சறுக்குப் போட்டி, கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டி, முதல்வர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டி ஆகிய போட்டிகள் தமிழகத்தில் நடத்தப்பட்டன.

இதில், கேலோ இந்தியா போட்டியில், 30 தங்கம், 21 வெள்ளி, 30 வெண்கலப் பதக்கங்களை வென்று தமிழகம் 2-ம் இடம் பிடித்தது. இத்தகைய செயல்பாடுகளால் தமிழகம் இந்தியாவின் விளையாட்டு தலைநகராக மாறி வருகிறது’ எனக் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x