Published : 29 May 2024 02:22 PM
Last Updated : 29 May 2024 02:22 PM

ஈஷா அறக்கட்டளையின் மின் தகன மேடைக்கு எதிராக வழக்கு: அரசு பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு

சென்னை: ஈஷா அறக்கட்டளை சார்பில், இக்கரை போளுவாம்பட்டி கிராமத்தில் மின் தகன மேடை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கு பதிலளிக்கும்படி தமிழக அரசுக்கும், ஈஷா அறக்கட்டளைக்கும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கோவை - ஈஷா யோகா மையத்தில் ஈஷா அறக்கட்டளை - காலபைரவர் தகன மண்டபம் என்ற பெயரில் மின் தகன மேடை அமைக்கும் பணிகளை ஈஷா அறக்கட்டளை மேற்கொண்டு வருகிறது. இதற்கு இக்கரை போளுவாம்பட்டி கிராம பஞ்சாயத்து தலைவரின் பரிந்துரை அடிப்படையில், தொண்டாமுத்தூர் பஞ்சாயத்து யூனியன் வட்டார வளர்ச்சி அதிகாரி ஒப்புதல் அளித்துள்ளார்.

இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரியும், மின் தகன மேடைக்கான கட்டுமானத்தை அகற்றக் கோரியும், இக்கரை போளுவாம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த எஸ்.என்.சுப்பிரமணியன் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் பொதுநல மனு தாக்கல் செய்துள்ளார். அதில், ‘மலைப்பகுதி பாதுகாப்பு ஆணையத்தின் கீழ் அமைந்துள்ள இக்கரை போளுவாம்பட்டி கிராமம், யானைகள் வாழ்விடமாக உள்ளது. மின்தகன மேடை அமைப்பது தொடர்பாக பொதுமக்கள் கருத்துக் கேட்பு கூட்டம் ஏதும் நடத்தப்படவில்லை.

மின் தகன மேடை அமைக்கும் பகுதிக்கு அருகில் குடியிருப்புக்கள் அமைந்துள்ளன. சட்டப்படி, குடியிருப்புக்கள் மற்றும் நீர்நிலைகள் அமைந்துள்ள பகுதிகளில் இருந்து 90 மீட்டர் தூரத்துக்கு அப்பால் தான் மயானங்கள் அமைக்கப்படவேண்டும். இதை மீறும் வகையில் ஈஷா அறக்கட்டளை சார்பில் மின்தகன மேடை அமைக்கப்படுகிறது. மின் தகன மேடை அமைக்கப்பட்டால் அதன் அருகில் வசிக்கும் மக்களுக்கு பெருத்த பாதிப்பு ஏற்படும்.

அப்பகுதியில் இருந்து தங்களை துரத்தும் நோக்கிலேயே இந்த மின் தகன மேடை அமைக்கப்படுகிறது. நொய்யல் நதிக்கரையோரம் செம்மேடு இக்கரை போளுவாம்பட்டி கிராமத்தில் ஏற்கெனவே ஒரு மயானம் உள்ளது. தகன மேடைகளை அமைக்க ஈஷாவுக்கு அனுமதிப்பது அபாயகரமானது. எனவே ஈஷா அறக்கட்டளை - காலபைரவர் தகன மண்டபம் அமைக்க அனுமதியளித்த உத்தரவுக்கு தடை விதிக்கவேண்டும். அந்த உத்தரவை ரத்து செய்வதுடன் கட்டுமானங்களை அகற்றவும் உத்தரவிட வேண்டும்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கு நீதிபதிகள் ஜெ.சத்யநாராயண பிரசாத், வி.லட்சுமி நாராயணன் ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் எம். புருஷோத்தமன், “பொதுமக்களிடமும், அருகில் உள்ள நிலத்தின் உரிமையாளர்களிடமும் கருத்துக் கேட்காமல் குடியிருப்புகள் அருகில் மின் தகன மேடை போர்க்கால அடிப்படையில் அமைக்கப்படுகிறது” என்றார்.

ஈஷா அறக்கட்டளை தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சதீஷ் பராசரன், “கடந்த 2019-ம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட உத்தரவுக்கு எதிராக இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தகன மேடை கட்டுமானப் பணிகள் முடிந்துவிட்ட போதிலும், செயல்பாட்டுக்கு அனுமதியளித்தால் மட்டுமே அதை செயல்படுத்த முடியும். மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் அனுமதி பெறாமல் செயல்பாட்டுக்கு கொண்டு வரப்படமாட்டாது” என உறுதியளித்தார்.

இதைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், இந்த மனுவுக்கு வரும் ஜூன் 12-ம் தேதிக்குள் பதிலளிக்கும்படி தமிழக அரசுக்கும், ஈஷா அறக்கட்டளைக்கும் உத்தரவிட்டு விசாரணையை தள்ளிவைத்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x