Published : 29 May 2024 06:23 AM
Last Updated : 29 May 2024 06:23 AM
சென்னை: டெல்லியில் நடைபெற உள்ளஇண்டியா கூட்டணி ஆலோசனைக்கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இறுதிகட்ட மக்களவை தேர்தல் ஜூன் 1-ம் தேதி மற்றும் வாக்கு எண்ணிக்கை வரும் ஜூன் 4-ம் தேதி நடைபெற உள்ள நிலையில், இண்டியா கூட்டணி தலைவர்கள் அடுத்தகட்ட நிகழ்வுகள் தொடர்பாக வரும் ஜூன் 1-ம் தேதி டெல்லியில் ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. டெல்லியில் காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே வீட்டில் அன்று மாலை 3 மணிக்கு அவரது தலைமையில் இக்கூட்டம் நடைபெறவுள்ளதாக கூறப்பட்டது.
இக்கூட்டத்தில், கார்கே, சோனியா காந்தி, ராகுல் காந்தி, டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் உள்ளிட்ட இண்டியா கூட்டணி தலைவர்கள் பங்கேற்க உள்ளதாக கூறப்பட்டது. மேலும், இக்கூட்டத்தில், புயல் பாதிப்பு மற்றும் இறுதிகட்ட தேர்தல் காரணமாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி பங்கேற்கவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.
இக்கூட்டத்தில், திமுக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், திமுகபொருளாளர் டி.ஆர்.பாலு பங்கேற்க உள்ளதாகவும், இதற்காக முதல்வர் ஜூன் 1-ம் தேதி காலை7 மணிக்கு டெல்லி புறப்படுகிறார் என்றும் தகவல் வெளியானது.
இந்த சூழலில், ஜூன் 1-ம் தேதிக்கு பதில் இண்டியா கூட்டணி தலைவர்கள் கூட்டத்தை ஜூன் 2 அல்லது 3 -ம் தேதியில் நடத்துவது தொடர்பாக ஆலோசனை நடைபெறுவதாகவும் கூறப்பட்டது. இதுகுறித்து கேட்ட போது, எப்போது நடைபெற்றாலும் முதல்வர் ஸ்டாலின் அக்கூட்டத்தில் பங்கேற்பார் என்று திமுக வட்டாரங்கள் தெரிவித்தன.
திமுக மாவட்ட செயலர் கூட்டம்: இதனிடையே திமுக தலைமை அலுவலகமான சென்னை அண்ணா அறிவாலயத்துக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வந்தார். அங்கு பொருளாளர் டி.ஆர்.பாலு, மூத்த அமைச்சர்கள் கே.என்.நேரு மற்றும் ஐ.பெரியசாமி உள்ளிட்டோருடன் ஆலோசனை நடத்தினார். இதில் வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு தேவையான அறிவுறுத்தல் வழங்க மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தை நடத்த முதல்வர் அறிவுறுத்தினார்.
இதன்படி, திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்ட அறிவிப்பு: ஜூன் 4-ம் தேதி நடைபெற உள்ள வாக்கு எண்ணிக்கை குறித்து ஆலோசிக்க, அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தலைமையில், மாவட்ட செயலாளர்கள், திமுக வேட்பாளர்கள், தலைமை முகவர்கள் மற்றும் வாக்கு எண்ணிக்கைமுகவர்கள் கலந்தாலோசனைக் கூட்டம், ஜூன்1-ம் தேதி சனிக்கிழமை காலை 11 மணிக்கு காணொலி வாயிலாக நடைபெறும்.
இதில் சட்டத்துறை செயலாளர் என்.ஆர்.இளங்கோ, வாக்கு எண்ணிக்கையின்போது கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்து ஆலோசனை வழங்குவார். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT