Published : 29 May 2024 05:40 AM
Last Updated : 29 May 2024 05:40 AM
சென்னை: தமிழகத்தில் குத்துச்சண்டை வீரர்களுக்கான பயிற்சி அரங்கம் அமைத்து தர வேண்டும் என்று தேசிய சாம்பியன் பட்டம் வென்றவீரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மகாராஷ்டிர மாநிலம் புனேவில் தேசிய அளவிலான குத்துச்சண்டை சாம்பியன் போட்டி கடந்த 22-ம் தேதி முதல் 26-ம் தேதி வரை நடைபெற்றது.
இந்தப் போட்டியில் தமிழ்நாடு அமெச்சூர் சங்க வீரர்கள் 102 பேர் பங்கேற்றனர். பல்வேறுபிரிவுகளில் நடைபெற்ற போட்டிகளில், 44 தங்கம், 16 வெள்ளி, 18 வெண்கலம் என மொத்தம் 78 பதக்கங்களை வென்றதுடன், ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தையும் தமிழக வீரர்கள் கைப்பற்றினர். மகாராஷ்டிராவை வீழ்த்தி, தமிழகம் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம் வெல்வது இதுவே முதல்முறையாகும்.
இந்நிலையில், வெற்றிபெற்ற வீரர், வீராங்கனைகள் மும்பையில் இருந்து ரயிலில் புறப்பட்டு, சென்னை சென்ட்ரலுக்கு நேற்று பகல் வந்தனர். வீரர்கள், பயிற்சியாளர்களுக்கு மாலை சூடி, மேள தாளங்களுடன் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் தமிழ்நாடு அமெச்சூர் குத்துச்சண்டை சங்கப் பொதுச் செயலாளர் சுரேஷ் பாபு கூறியதாவது: தமிழகத்தில் குத்துச்சண்டை வீரர்கள், அவரவர் இடங்களில் உள்ள வசதிகளைப் பயன்படுத்திமட்டுமே பயிற்சி மேற்கொள்கின்றனர்.
ஆனால், பயிற்சிக்காக தனி உள்விளையாட்டு அரங்கம் அமைக்கப்படவில்லை. குத்துச்சண்டை போட்டிக்கு தனி பயிற்சிஅரங்கம் அமைத்துக் கொடுத்தால், குத்துச்சண்டை விளையாட்டில் 2-வது இடத்தில் இருக்கும் தமிழகம் முதலிடத்துக்கு முன்னேறும். இவ்வாறு அவர் கூறினார்.
குத்துச் சண்டை போட்டியில் வெற்றிபெற்ற வீரர்கள் சிலர் கூறும்போது, தமிழக அரசு தொடர்ந்து எங்களை ஊக்குவித்து வருகிறது,கடந்த ஆண்டு 9 வீரர்கள் சீனியர்தேசிய குத்துச்சண்டைப் போட்டிகளுக்கு தகுதி பெற்றபோது ரூ.16லட்சம் உதவியை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறைஅமைச்சர் கொடுத்து அனுப்பிவைத்தார்.
அதேபோல, கடந்த ஆண்டுதமிழகத்தின் குத்துச்சண்டை வீரர்கள் தமிழக விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் முயற்சி மூலம் ரூ.1 கோடிக்கும் மேல் பரிசுத்தொகையை வென்றுள்ளனர்.
இந்தியாவில் எந்த மாநிலமும் இவ்வளவு தொகையை வென் றது இல்லை. தமிழகத்தில் குத்துச்சண்டை வீரர்களுக்கான பயிற்சி அரங்கம் மற்றும் பல்வேறு வசதிகளை செய்து கொடுத்தால், தமிழகத்தில் குத்துச்சண்டை விளையாட்டு மேலும் விரிவடைய உதவியாக இருக்கும் என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT