Published : 01 Apr 2018 03:44 PM
Last Updated : 01 Apr 2018 03:44 PM
வழக்கத்துக்கு மாறாக கோவை கொடிசியா தொழிற்காட்சி வளாகத்தில் ஏராளமான இளைஞர்கள் நேற்று திரண்டனர். ‘தி இந்து’ தமிழ் சார்பில் நடைபெற்ற மோட்டார் சைக்கிள்கள் கண்காட்சியில் அணிவகுத்திருந்த அதிநவீன மோட்டார் சைக்கிள்களும், வீரர்களின் சாகச நிகழ்ச்சியும் அவர்களை குதூகலிக்கச் செய்தன.
வழக்கமாக தொழில், வர்த்தகம், விவசாயக் கண்காட்சிகள், கருத்தரங்குகள் நடைபெறும் கொடிசியா தொழிற்காட்சி வளாகத்தில் ‘பைக்கிங் இந்தியா 2018’ என்ற வித்தியாசமான மோட்டார் சைக்கிள்கள் கண்காட்சி நேற்று தொடங்கியது.
இந்தியா மற்றும் சர்வதேச அளவிலான மோட்டார் சைக்கிள்கள் மற்றும் உதிரிபாகங்களுக்கான பிரத்யேக கண்காட்சியான இந்த நிகழ்ச்சியை, ‘தி இந்து’ தமிழ், ஐ ஏட்ஸ் அண்டு ஈவன்ட்ஸ் நிறுவனம் ஆகியவை இணைந்து நடத்துகின்றன.
இரு தினங்கள் நடைபெறும் இந்தக் கண்காட்சியை கோவை மாநகர காவல் துறை துணை ஆணையர் (போக்குவரத்து) சுஜித்குமார் தொடங்கி வைத்தார்.
பாதுகாப்பில் கவனம்
அவர் ‘தி இந்து’விடம் கூறும்போது, ‘அதிநவீன வசதிகள் கொண்ட மோட்டார் சைக்கிள்கள் இங்கு கண்காட்சியாக வைக்கப்பட்டுள்ளன. இளைஞர்கள் இவற்றை விரும்பி வாங்குகின்றனர். அதேசமயம், பாதுகாப்பு உபகரணங்களையும் விற்பது பாராட்டுக்குரியது. வாகன ஓட்டுநர் மட்டுமின்றி, பின்னால் அமர்ந்திருப்பவர், எதிரே வருபவரின் நலன் கருதி, கவனமாகவும், பாதுகாப்பாகவும் வாகனத்தை ஓட்ட வேண்டும். அனைத்து பாதுகாப்பு உபகரணங்களையும் அணிந்திருக்க வேண்டும். சாலை மற்றும் போக்குவரத்து விதிகளை கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும். கோவை மாநகரில் செயல்படாமல் உள்ள போக்குவரத்து சிக்னல்கள் கண்டறியப்பட்டு, உடனடியாக மாற்று சிக்னல்கள் பொருத்தப்படும். போக்குவரத்து நெரிசல், விபத்துகளைத் தவிர்க்க பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன’ என்றார்.
சூப்பர் பைக்குகள்
மோட்டார் சைக்கிள் தயாரிப்பில் முன்னிலை வகிக்கும் என்ஃபீல்டு, பி.எம்.டபிள்யு, ஹோண்டா, டிவிஎஸ் உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட நிறுவனங்களின் முன்னணி பிராண்ட் மோட்டார் சைக்கிள்கள் இங்கு அணிவகுத்துள்ளன. 27 சூப்பர் பைக்குகள், 8 பாரம்பரிய பைக் ரகங்கள் பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்தன. ஸ்கூட்டர்களும் கண்காட்சியில் இடம் பெற்றுள்ளன.
கண்காட்சி ஒருங்கிணைப்பாளர்களான ஐ ஏட்ஸ் அண்டு ஈவன்ட்ஸ் நிறுவன மேலாண் இயக்குநர் ரியாஸ், தருண் ஆகியோர் கூறும்போது, ‘ரூ.35 ஆயிரம் முதல் ரூ.37 லட்சம் வரையிலான பைக்குகள் இக்கண்காட்சியில் இடம்பெற்றுள்ளன. வெளிநாடுகளில் அறிமுகமாகும் பைக்குகள் உடனுக்குடன் இந்தியாவிலும் அறிமுகப்படுத்தப்பட்டு விடுகின்றன. 100 சி.சி. திறன் முதல் 1,200 சி.சி. திறன் கொண்ட பைக்குகள் இளைஞர்களின் மனங்களை கொள்ளை கொண்டுள்ளன. பைக் பிரியர்களுக்கான இந்த பிரத்யேக கண்காட்சிக்கு இவ்வளவு இளைஞர்கள் திரண்டு வந்துள்ளது மகிழ்ச்சியளிக்கிறது. வேகமாகச் செல்லும் வாகனங்கள் மட்டுமின்றி, உரிய பாதுகாப்பு உபகரணங்களும் இங்குள்ளது குறிப்பிடத்தக்கது’ என்றனர்.
‘தி இந்து’ தமிழ் வர்த்தகப் பிரிவு தலைவர் சங்கர் வி.சுப்பிரமணியம், ‘தி இந்து’ குழும பொதுமேலாளர் டி.ராஜ்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
சாகச நிகழ்ச்சி
மாலையில் டிவிஎஸ் ரேசிங் குழுவினரின் பல்வேறு சாகச நிகழ்ச்சிகளும், பாதுகாப்பாக வாகனத்தை செலுத்தும் முறைகளும் பார்வையாளர்களின் வரவேற்பைப் பெற்றன. இன்று (ஏப். 1) மாலை நடைபெறும் நிகழ்ச்சியில், பல்வேறு பைக் கிளப்புகளைச் சேர்ந்த 300 மோட்டார் சைக்கிள் வீரர்களின் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது. நாடு முழுவதும் பயணித்துள்ள மோட்டார் சைக்கிள் வீரர்கள், தங்களது அனுபவங்களைப் பகிர்ந்து கொள்கின்றனர்.
ரீமாடலிங் செய்யப்பட்ட மோட்டார் சைக்கிள்களில் சிறந்த 4 பைக்குகளுக்குப் பரிசுகளும் வழங்கப்பட உள்ளன. மொத்தத்தில் கோவை மட்டுமின்றி சுற்றுவட்டார மாவட்டங்களைச் சேர்ந்த இளைஞர்களின் மனதைக் கவர்ந்துள்ளது இந்த ‘பைக்கிங் இந்தியா’ கண்காட்சி.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT