Last Updated : 04 Apr, 2018 10:50 AM

 

Published : 04 Apr 2018 10:50 AM
Last Updated : 04 Apr 2018 10:50 AM

வங்கிகளில் அவுட்சோர்ஸிங் முறையில் நியமிக்கப்படும் தனியார் காவலர்களால் பாதுகாப்பு குறைபாடு: அதிகாரிகள் கருத்து; முன்னாள் ராணுவத்தினரை ஈடுபடுத்த வலியுறுத்தல்

வங்கிகளின் பாதுகாப்பு பணியில் அவுட்சோர்ஸிங் முறையில் தனியார் ஊழியர்களை நியமிப்பதுதான் பாதுகாப்பு குறைபாடுகளுக்கு காரணம். வங்கி பாதுகாப்பு பணியில் முன்னாள் ராணுவத்தினரை ஈடுபடுத்தினால் கொள்ளை சம்பவங்களை தடுக்க முடியும் என்கின்றனர் துறை வல்லுநர்கள்.

தமிழகம் முழுவதும் 10 ஆயிரம் பொதுத்துறை வங்கிக் கிளைகள் உள்ளன. இதில், ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிபுரிகின்றனர். பொதுத்துறை வங்கிக் கிளைகளின் பாதுகாப்பு பணியில் முன்னாள் ராணுவத்தினர் அமர்த்தப்பட்டு வந்தனர். தற்போது அவர்கள் பணியில் அமர்த்தப்படுவது நிறுத்தப்பட்டுவிட்டது.

இந்த சூழலில், சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள பொதுத்துறை வங்கியின் லாக்கரை உடைத்து சமீபத்தில் நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்டது. இச்சம்பவம் வங்கிகளின் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கி உள்ளது. வங்கி பாதுகாப்பு பணிகள் எல்லாம் அவுட்சோர்ஸிங் முறையில் தனியாருக்கு விடப்படுவதே இதற்கு காரணம் என வங்கி அதிகாரிகள் கூறுகின்றனர். இதுகுறித்து, அகில இந்திய வங்கி அதிகாரிகள் சங்கத்தின் பொதுச் செயலாளர் தாமஸ் பிராங்கோ ‘தி இந்து’விடம் கூறியதாவது:

பொதுத்துறை வங்கிகளின் பாதுகாப்பு பணியில் முன்னாள் ராணுவ வீரர்கள் ஈடுபடுத்தப்பட்டு வந்தனர். அவர்களை தேர்வு செய்யும் முன்பு, ராணுவ தேர்வு வாரியத்துக்கு வங்கித் தரப்பில் இருந்து முறைப்படி கடிதம் அனுப்பி பரிந்துரை கோரப்படும். அவர்களும் தகுதியான நபர்களை பரிந்துரை செய்வார்கள். முறைப்படி நேர்காணல் நடத்தப்பட்டு அவர்கள் பணி நியமனம் செய்யப்படுவார்கள்.

அவர்கள் மீது ஏதேனும் கிரிமினல் குற்றங்கள் உள்ளதா என்பன உள்ளிட்ட பின்னணி விவரங்களும் முழுமையாக ஆராயப்பட்ட பிறகே, தேர்வு செய்யப்படுவர். இதனால், நேர்மையான ஊழியர்கள் மட்டுமே பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள். அதேபோல, கடைநிலை துப்புரவு ஊழியர்களை தேர்வு செய்யும்போதும் அவர்களது பின்னணி விவரங்கள் சேகரிக்கப்படும். மேலும், நிரந்தர ஊழியர்களாக நியமிக்கப்பட்டதால் அவர்கள் ஏதேனும் தவறுகளில் ஈடுபட்டாலும் உடனே கண்டுபிடித்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியும்.

ஆனால், தற்போது அவுட்சோர்ஸிங் முறையில் வங்கி பாதுகாப்பு பணியில் தனியார் நிறுவன ஊழியர்களும், துப்புரவு பணியில் ஒப்பந்த ஊழியர்களும் நியமிக்கப்படுகின்றனர். அவர்களை பணியமர்த்தும் முன்பு, அவர்களது பின்னணி குறித்து வங்கிகள் விசாரிப்பதும் இல்லை. இதனால், அவர்கள் குற்றச் செயல்களில் ஈடுபட்டாலும் அவர்களை கண்டுபிடிப்பது சிரமமான காரியமாக உள்ளது.

தற்போது, பண கருவூலம் உள்ள வங்கிகளில் மட்டும் பாதுகாப்பு பணியில் முன்னாள் ராணுவத்தினர் ஈடுபடுத்தப்படுகின்றனர். சில வங்கிகளில் தனியார் பாதுகாவலர்கள் பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர். சில வங்கிகளில் கண்காணிப்பு கேமராவை மட்டும் வைத்துவிட்டு, காவலர்களை நியமிப்பது இல்லை. கேமரா இருந்தால், கொள்ளை நடந்த பிறகு துப்பு கிடைக்க உதவும். ஆனால், கொள்ளையை தடுக்க காவலாளிகள் அவசியம். அதேபோல, ஏடிஎம் மையங்களிலும் காவலர்கள் பணியமர்த்தப்படுவது இல்லை. எனவே, வங்கிகளின் பாதுகாப்பு பணியில் முன்னாள் ராணுவத்தினரையே மீண்டும் பணியமர்த்த வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதுகுறித்து அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் சி.எச்.வெங்கடாச்சலம் கூறியதாவது:

ஆயுதம் ஏந்திய முன்னாள் ராணுவத்தினரை வங்கிகளில் பாதுகாப்பு பணியில் அமர்த்தினால் அவர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.20 ஆயிரம் சம்பளம் தரவேண்டும். ஆனால், தனியார் பாதுகாவலர்களுக்கு ரூ.5 ஆயிரம் கொடுத்தால் போதும். செலவைக் குறைப்பதற்காக, ஒப்பந்த அடிப்படையில் தனியார் ஊழியர்களை பணியமர்த்துகின்றனர்.

பொதுமக்களின் பணம் மற்றும் லாக்கரில் வைக்கப்படும் விலைமதிப்பற்ற பொருட்களை பாதுகாக்க வேண்டியது வங்கிகளின் கடமை, பொறுப்பு. எனவே, வங்கிகள் குறுகிய நோக்கத்தில் செயல்படாமல், நிரந்தர ஊழியர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x