Published : 28 May 2024 11:12 PM
Last Updated : 28 May 2024 11:12 PM
சென்னை: அண்ணாமலையை பக்குவமில்லாத அரசியல் தலைவர் என்று கூட சொல்லமுடியாது. அவர் ஒரு அரசியல் வியாபாரி என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சாடியுள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ஜெயக்குமார், “எங்களுடைய கட்சித் தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா இருவரும் ஏழை எளிய மக்களுக்காகவே வாழ்வை அர்ப்பணித்தவர்கள். ஜாதி, மத, இன, மொழி அனைத்தையும் தாண்டி பல திட்டங்களை தீட்டியவர்கள்.
ஜெயலலிதா ஒரு இந்துத்துவ தலைவர் என்று அண்ணாமலை கூறியுள்ளார். இதை தமிழ்நாடு மட்டுமின்றி உலகம் முழுவதும் வாழும் தமிழர்கள் யாரும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். தனது ஆட்சிக் காலத்தில் இந்துக்கள், இஸ்லாமியர்கள், கிறிஸ்துவர்கள் என அனைவரும் இணக்கத்துடன் வாழும் சூழ்நிலையை ஏற்படுத்தியவர் ஜெயலலிதா.
அண்ணாமலையின் கட்சியில் தலைவர்களே இல்லையா? அத்வானி குறித்தும், வாஜ்பாய் குறித்தும் ஏன் அவர் பேசுவதில்லை? அண்ணாமலை திமுகவின் ‘பி’ டீம். தமிழ்நாட்டில் இருக்கும் மின்வெட்டு பிரச்சினை, சட்டம் - ஒழுங்கு பிரச்சினை ஆகியவை குறித்து அவர் வாய் திறப்பதில்லை. ஆனால் அவருடைய ஒரே நோக்கம் ஜெயலலிதா குறித்து பேசுவதுதான். ஜெயலலிதாவை பொறுத்தவரை தெய்வபக்தி கொண்டவர்தான். ஆனால் மதவெறி பிடித்தவர் அல்ல. ஸ்டாலினும் அண்ணாமலையும் சேர்ந்து செய்கின்ற கூட்டுச்சதி இது.
அண்ணாமலையை பக்குவமில்லாத அரசியல் தலைவர் என்று கூட சொல்லமுடியாது. அவர் ஒரு அரசியல் வியாபாரி. இதோடு அவர் தன்னுடைய கருத்துகளை நிறுத்திக் கொள்ள வேண்டும். ஒரு சமூகநீதி காத்த வீராங்கனையை மதவெறி பிடித்தவர் போல சித்தரிக்க முயல்வது திமுக - பாஜகவின் கூட்டுச்சதி” என்று ஜெயக்குமார் தெரிவித்தார்.
முன்னதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அளித்த பேட்டி ஒன்றில், “ஜெயலலிதா இந்துத்துவ தலைவர்” என்னும் கருத்துகளை முன்வைத்துள்ளார். அவர் விட்டுச் சென்ற இடத்தைப் பாஜக நிரப்பி வருவதாகவும் பேசியுள்ளார். அதற்கு, ஜெயலலிதா மதமாற்ற தடைச் சட்டத்தைக் கொண்டு வந்ததைப் பற்றியும் குறிப்பிட்டிருக்கிறார். இது பெரும் சர்ச்சையானது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT