Last Updated : 28 May, 2024 09:39 PM

 

Published : 28 May 2024 09:39 PM
Last Updated : 28 May 2024 09:39 PM

ஆர்.பி.உதயகுமார் முன்னிலையில் அதிமுகவில் இணைந்த 2,000 இளைஞர்கள் @ மதுரை

மதுரையில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் முன்னிலையில் சுமார் 2 ஆயிரம் இளைஞர்கள் அதிமுகவில் இணைந்தனர்.

மதுரை: மதுரையில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் முன்னிலையில் சுமார் 2 ஆயிரம் இளைஞர்கள் அதிமுகவில் இன்று (மே 28) இணைந்தனர்.

கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியின் தலைமையை ஏற்று, ஜெயலலிதா பேரவை சார்பில் சுமார் 2,000-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் அதிமுகவில் இணையும் நிகழ்ச்சி திருமங்கலம் தொகுதியிலுள்ள டி. குன்னத்தூர் அம்மா கோயிலில் இன்று நடந்தது. எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்பி. உதயகுமார் முன்னிலையில் இளைஞர்கள் தங்களை கட்சியில் இணைத்து கொண்டனர்.

முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பின்னர் செய்தியாளர்களிடம் கூறியது: ‘இன்றைய திமுக அரசு மக்களுடைய வாழ்வாதாரம் மற்றும் ஜீவாதார உரிமைகளை விட்டுக் கொடுக்கும் அரசாக செயல்படுகிறது. கேரள அரசின் புதிய அணை கட்டும் பிரச்சினைக்கு திமுக அரசு மவுனம் சாதிக்கிறது.இது தொடர்பாக எங்களது பொதுச் செயலாளர் கண்ட னம் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையை திமுக அரசு தொடர்ந்தால் பொதுச்செயலாளர் தலைமையில் மதுரை உள்ளிட்ட 5 மாவட்ட விவசாயிகளின் வாழ்வாதாரம், ஜீவாதாரத்தை காப்பாற்ற அறப் போராட்டத்துக்கும் தயங்கமாட்டோம். பாஜக நிர்வாகிகள் எங்களது தலைவர், கொள்கையைப் பற்றி பேசுவதில் எங்களுக்கு எந்தவித ஆட்சேபனையும் இல்லை.

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் சமூக நீதிக் கொள்கை, பெண்ணுரிமை கொள்கை கொண்டவர். மேலும், மாணவ , மாணவியரின் நம்பிக்கை நட்சத்திரமாக இருந்தார். இவை எல்லாவற்றையும் மூடி மறைத்துவிட்டு அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு பேசுவதால் தமிழகத்தில் எந்த தாக்கமும் ஏற்படாது.

எங்களது கொள்கை கோட்பாடுகளுக்கு பாஜக விளக்கம் அளித்து தமிழக மக்களுக்கு தெரியவேண்டிய அவசியமில்லை. பாஜகவினர் தங்களை அடையாளப்படுத்த ஜெயலலிதாவை துணைக்கு அழைப்பதில் உள்நோக்கம் இருக்கிறது. எங்களது கட்சி தலைவர்களின் மறுவடிமாக இருந்து கொண்டு எடப்பாடியார் சேவை செய்கிறார். இதில் அண்ணாமலைக்கு சந்தேகம் வேண்டாம்,’ என்று அவர் கூறினார்.

இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டை அமைப்பு சாரா ஓட்டுநர் அணி மாவட்ட செயலாளர் ராமகிருஷ்ணன் செய்திருந்தார் முன்னாள் எம்எல்ஏக்கள் மகேந்திரன் ,தமிழரசன், தவசி மாணிக் கம், கருப்பையா உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x